அமித் ஷா - டேவிட் மோரிசன்  
இந்தியா

சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா! - கனடா அமைச்சர்

Staff Writer

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தான்தான் கூறியதாக கனடா துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள், தேசிய பாதுகாப்புக்கான கனடா நாட்டு நாடாளுமன்றக் குழுவின் முன்பு அவர் அளித்த வாக்கு மூலத்தில் இவ்வாறுகூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டதற்கு நரேந்திர மோடி அரசு உதவியதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருந்தார். இந்த விவகாரம் இரு தரப்பு உறவில் பெரும் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது.

ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை அடுத்து கனடாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை இந்திய திரும்ப அழைத்துக்கொண்டது. இந்தியாவில் இருந்தும் கனடா நாட்டு தூதர்களை வெளியேற உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு "இந்தியாவில் உள்ள மூத்த அதிகாரி" ஒருவர் அங்கீகாரம் அளித்ததாகவும், அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்ததாகவும் கூறியிருந்தது. அந்த மூத்த அதிகாரி அமித் ஷா என கனடிய அதிகாரிகள் கூறியதாக அந்த பத்திரிகை தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்தது அமித் ஷாதான் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்தது தான்தான் என கனடாவின் வெளியுறவுத்துணை அமைச்சர் டேவிட் மோரசின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

“பத்திரிகையாளர் என்னை அழைத்து, அந்த நபரா என்று கேட்டார். அந்த நபர் தான் என்பதை நான் உறுதி செய்தேன்” என்று டேவிட் மோரிசன் தன் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை வட்டாரங்களில் இந்த பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram