மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தன்னுடைய ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கொண்டுவருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று கூடிய மைய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதைத் தெரிவித்தார்.
குடியரசு முன்னாள் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இதுகுறித்த தன்னுடைய அறிக்கையை முன்னதாக அரசுக்கு அளித்தது. அதில், அரசமைப்புச் சட்டத்தில் 18 திருத்தங்களைச் செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
புதிய முறை நடைமுறைக்கு வந்தால், நாடாளுமன்ற மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்; அடுத்த 100 நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.
மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து நிறைவேற்றும் அளவுக்கு பா.ஜ.க. கூட்டணிக்கு எண்ணிக்கை பலம் அண்மையில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய திருத்தங்களை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கவேண்டியதில்லை என்றும் மைய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எப்படியானாலும் இதைக் கொண்டுவந்தே தீருவேன் என கங்கணம் கட்டாத குறையாக பா.ஜ.க. கூட்டணி அரசு எப்போது, எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதுதான் கேள்வி!