5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்  வடிவமைப்பு - எஸ்.கார்த்தி
இந்தியா

5 மாநில தேர்தல்: சி-ஓட்டர் சர்வே சொல்வது என்ன?

Staff Writer

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், வாக்காளர் மனநிலை எப்படி இருக்கும் என கருத்துக்கேட்புகள் நடத்தப்படுகின்றன. இதில், சி- ஓட்டர் எனும் தேர்தல் சர்வே நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசம் – சத்தீஸ்கரில், பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி என்றும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமிதியைவிட காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாகவும் சி-ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம்

மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் 113 முதல் 125 இடங்களிலும், பா.ஜ.க. 104 முதல் 116 இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 2.1 சதவீத வாக்குவங்கி கொண்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்படுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 59 முதல் 69 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்று தெரியவருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 127 முதல் 137 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. 39 முதல் 45 இடங்களையும் காங்கிரஸ் 45முதல் 51 இடங்களையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க., காங்கிரசின் வாக்குகள் முறையே 43.5%, 45.3% இருக்கும் எனக் கருதப்படுகிறது.

தெலங்கானா

தற்போது ஆட்சியிலிருக்கும் பாரத ராஷ்டிரிய சமிதியை விட காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என்று கூறப்படுகிறது. 199 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் 48 முதல் 60 இடங்களிலும் பாரத ராஷ்டிரிய சமிதி 43 முதல் 55 இடங்களிலும் பா.ஜ.க. 5 முதல் 11 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மிசோரம்

மிசோரோமில் 40 சட்டப்பேரவை தொகுதியில் உள்ளன. மிசோ தேசிய முன்னணி, சோராம் மக்கள் முன்னணி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோ மக்கள் முன்னணி 13 முதல் 17 இடங்களும், காங்கிரஸ் 10 முதல் 14 இடங்களும், சோராம் மக்கள் முன்னணி 9 முதல் 13 இடங்களும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோரமில் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், அங்கு தொங்கு சட்ட சபை அமையலாம் என்று சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.