காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதாக பா.ஜ.க. பிரச்னையைக் கிளப்பியுள்ளது.
மணிசங்கர் பேசியுள்ள ஒரு காணொலியில், பாகிஸ்தானும் அணுகுண்டு வைத்திருக்கிறது; நாமும் அணுகுண்டு வைத்திருக்கிறோம்; எவனாவது ஒரு கிறுக்கன் ராவல்பிண்டியில் அதை வெடித்தால் அதையொட்டியுள்ள நம் நாட்டுப் பகுதி நாசமாகிவிடும் என்கிறபடி பேசியுள்ளார்.
அந்தக் காணொலியை தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இன்று தில்லியில் செய்தியாளர்களிடமும் அதைப் பற்றிக் குறிப்பிட்டு காங்கிரஸ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மணிசங்கர் மட்டுமின்றி பல காங்கிரஸ் தலைவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்துக்கூறியுள்ளதாகப் பட்டியலிட்டார்.
இராகுல்காந்தியின் காங்கிரஸ் கட்சியில் நம் மண்ணுக்கு விரோதமான கருத்துகளைத்தான் அக்கட்சியினர் கூறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் பரபரப்பானதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, மணிசங்கரின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று விளக்கமளித்தார்.
இதனிடையே, தன் காணொலி ரொம்பவும் பழையது என்றும் அதில் தான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரைப் பார்த்தாலே அது குளிர்காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியும் என்றும் பா.ஜ.க. தேர்தல் தோல்வி பயத்தில் அதைச் சமாளிப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறது என்றும் மணிசங்கர் ஐயர் மறுப்பு தெரிவித்துள்ளார்.