கர்நாடகத்தில் பரபரப்பைக் கிளப்பிய பாலியல் வீடியோ விவகாரத்தில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் வழக்குரைஞருமான தேவராஜ கவுடா இன்று கைதுசெய்யப்பட்டார்.
குலிகல் என்கிற ஊரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவில் இரியூர் காவல்நிலையத்தினர் தேவராஜ கவுடாவைக் கைதுசெய்தனர் என்று கர்நாடகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு பென் டிரைவில் பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை இவர்தான் கசியவிட்டார் என்று காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி கர்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலையொட்டி, பிரஜ்வால் மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதான காட்சிகள் இடம்பெற்றுள்ள காணொலிகள் வெளியாகின.
ஹசன் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வால் போட்டியிட்டு வாக்குப்பதிவு முடிந்தபின்னரே, இந்த விவகாரம் வெளியே வந்தது.
அதையடுத்து, பிரஜ்வால் மீதும் கர்நாடக முன்னாள் அமைச்சரான அவரின் தந்தை ரேவண்ணா மீதும் வழக்குகள் பதியப்பட்டன.
தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரில், ரேவண்ணா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவரைக் கடத்திய குற்றம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒலநரசிபுரா தொகுதியில் எச்.டி.ரேவண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட தேவராஜ கவுடா கைதாகியிருக்கிறார்.
பிரஜ்வாலின் பாலியல் வீடியோக்களை வெளியே எடுத்துவிட்டதாக தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக தேவராஜகவுடா தெரிவித்துள்ளார்.