அமித்ஷாவுடன் பஜன்லால் சர்மா 
இந்தியா

ஆசிரியர் தேர்வில் தோற்றவர்... அமித்ஷா தேர்வில் ஜெயித்தார்!

Staff Writer

யாருக்கு எந்த நேரத்தில் யோகம் அடிக்கும் என்று தெரியாது. அதற்கு சமீபத்திய உதாரணம், ராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பஜன்லால் சர்மாதான்.

ராஜஸ்தானில் உள்ள 199 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினாலும், அடுத்த முதல்வர் யார் என்பதில் ஒரு வாரத்துக்கு மேல் இழுபறி நீடித்தது.

வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங்ஷெகாவத், அர்ஜுன்ராம் மெக்வால் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்க, அதிகம் அறியப்படாத கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பஜன்லால் சர்மா முதல்வராக அறிவிக்கப்பட்டார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

பல பதவிகளை பஜன்லால் ஷர்மா வகித்திருந்தாலும், அவரின் செல்வாக்குபற்றி ஒரு சம்பத்தைச் இங்கு நினைவூட்டுகிறோம்.

பாரத்பூரில் உள்ள அவரின் வீட்டின் அருகே, ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்திருக்கிறது. அதை இடமாற்ற பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், மின்சார வாரியமோ இழுத்தடித்திருக்கிறது. அவர், முதலமைச்சராக அறிவித்தவுடன்தான், அந்த டிரான்ஸ்பார்மரை மாற்றியுள்ளனர்.

யார் இந்த பஜன்லால் சர்மா?

சாங்கனர் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சர்மா(56) பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பம் விவசாயத்தை பின்புலமாக கொண்டது. பஜன்லாலை ஆசிரியராக்க நினைத்த அவரின் தந்தை பி.எட். படிக்க வைத்துள்ளார். ஆனால், பஜன்லாலோ ஆசிரியர் பணிக்கான நேர்காணலில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர், தான் விரும்பியபடி அரசியலுக்கு நுழைந்தவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவ பிரிவான ஏ.பி.வி.பி-யின் துடிப்பு மிக்க செயல்வீரராக இருந்துள்ளார்.

அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பஜன்லால் விவசாய பொருட்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். அதேபோல், அயோத்தி ராமர் கோயிலுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டு மீண்டும் சிறைக்குச் சென்றார்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கோபால்கர் கலவரம் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

பஜன்லால், முதன் முறையாக 2000 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பா.ஜ.க.விலும் அதன் கிளை அமைப்புகளிலும் பல்வேறு பதிவிகளை வகித்துள்ளார்.

பா.ஜ.க.வின் பரத்பூர் மாவட்ட தலைவர், மாநில துணைத் தலைவர், மாநில பொதுச்செயலாளர் போன்ற குறிப்பிடத்தக்கப் பதவிகளில் அவர் இருந்துள்ளார்.

பஜன்லால் சர்மா இன்று முதலமைச்சர் ஆவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்குவங்க தேர்தலில் பிரச்சாரத்துக்கு சென்றதுதான். அப்போதுதான் அவர் அமித்ஷாவுடன் நெருங்கிப் பழகியுள்ளார். அப்போது அமித் ஷா கொடுத்த வாக்குறுதியால், இன்று முதலமைச்சர் ஆகியிருக்கிறார் பஜன்லால்.