பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக 6 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டடத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அப்போது, 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் 3 போ் உயிரிழந்திருந்த நிலையில், மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். புதன்கிழமை காலை முதல் நடந்த மீட்புப் பணியில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இச்சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அரமான், முகமது சாயில், கிருபாள், சோகித் பாஸ்வான், ஆந்திரத்தைச் சோ்ந்த துளசி ரெட்டி, உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த புல்வான்யாதவ், தமிழகத்தைச் சோ்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோா் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இடிபாடுகளில் இருந்து 14 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். இதில் 5 போ் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், 3 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், கொட்டும் மழையில் மீட்புப் பணியை பேரிடா் மீட்புக் குழுவினா் தொடா்ந்தவண்ணம் உள்ளனா்.
இதனிடையே, உரிய அனுமதி எதுவும் பெறாமல் தரக்குறைவாக கட்டடத்தைக் கட்டியது தொடா்பாக நில உரிமையாளா் முனிராஜ் ரெட்டி, கட்டட ஒப்பந்ததாரா் மோகன் ரெட்டி, மேஸ்திரி ஏழுமலை உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதுதொடா்பாக முனிராஜ் ரெட்டி மகன் புவன் ரெட்டி, முனியப்பா உள்ளிட்டோரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகிறார்கள்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மீட்பு பணிகள் முடிந்ததும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றார்.
பெங்களூரில் கடந்த 28 வருடத்தில் இப்படி ஒரு மோசமான கட்டட விபத்து ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.