உச்சநீதிமன்றம் 
இந்தியா

ஆல்கஹால்: மாநில அரசுக்கே அதிகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Staff Writer

தொழிற்சாலை 'ஆல்காஹல்' போதை தரும் மது என்பதால், அவற்றை முறைப்படுத்தி வரி விதிக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என, உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

எத்தில் ஆல்கஹால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் தொடர்பாக தனியாா் நிறுவனம் ஒன்றுக்கும் உத்தர பிரதேச மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில், கடந்த 1990-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்தது.

அதில், ‘எரிசாராயம் அல்லது தொழிலக ஆல்கஹால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’ என்று தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், அபய் எஸ்.ஓகா, ஜே.பி.பாா்திவாஸா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சா்மா, அகஸ்டீன் ஜாா்ஜ் மசிஹ், பி.வி.நாகரத்னா ஆகிய 9 நீதிபதிகள் அமா்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் இரு மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். தலைமை நீதிபதி சந்திரசூட் உள்பட 8 நீதிபதிகள் அளித்த 364 பக்க ஒருமித்த தீா்ப்பில், தொழிலக எரிசாராய உற்பத்தி, விநியோகத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளனர்.

ஆனால், அமா்வில் இடம்பெற்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீா்ப்பை அளித்தாா். அவா் அளித்த தீா்ப்பில், ‘ஒரு விவகாரத்தின் மீது நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் சட்டம் இயற்ற முடியும் எனும்போது, மாநில சட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டமே முதன்மையானதாக கருதப்படும். எனவே, தொழிலக ஆல்கஹாலை முறைப்படுத்தும் சட்ட ரீதியிலான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை’ என்று தீா்ப்பளித்தாா்.

இருந்தபோதும் 8:1 என்ற பெரும்பான்மை தீா்ப்பின் அடிப்படையில், தொழிலக ஆல்கஹாலை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கான சட்ட அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram