பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கும்பகோணம் டாக்டர் எம்.கே.சாம்பசிவம்-பார்வதி தங்கம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், வேளாண் அறிவியல் மற்றும் மரபியல் படிப்பை முடித்தவர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களிலும் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
மத்திய வேளாண்துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.
பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன அறிவியல் முறைகளை கண்டறிந்து அதிக மகசூல் தரும் விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை கருவிகள், நீர்பாசன முறைகள், களைக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் போன்ற புதுமைகளைக் கொண்டு வந்தவர். விவசாயத்தை ஒரு நவீன தொழில்துறை அமைப்பாக மாற்றி அமைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்.
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இந்தியாவுக்கு பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர்.
எம்.எஸ். சுவாமிநாதன் 3 பத்மவிபூஷண், எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும், ஆசியாவின் நோபல் விருதான மகசேசே விருது, இந்தியா மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11:20 மணிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.