நிகர் சாஜி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் 
இந்தியா

ஆதித்யா எல் 1 - பெருமிதப்பட்ட தமிழ்ப்பெண் விஞ்ஞானி நிகர் சாஜி!

Staff Writer

ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது, ’ஒரு கனவு நனவானது போல் உள்ளது’ என்று அதன் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி கூறியுள்ளார்.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

திட்டமிட்ட நேரத்தில், இந்த விண்கலமானது, ராக்கெட்டிலிருந்து பிரிந்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல் -1 விண்கலம் ஏவப்பட்டது குறித்து குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி பேசுகையில், “ஒரு கனவு நனவானது போல் உள்ளது.”என்றார்.

மேலும், “ஆதித்யா எல்1 பிஎஸ்எல்வி மூலம் செலுத்தப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆதித்யா எல்1 அதன் 125 நாட்கள் நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. ஆதித்யா எல்1 திட்டம் தன் பணியைத் தொடங்கும்போது, சூரிய- சூரிய மண்டல இயற்பியலில் நாட்டிற்கும் உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும் ஒரு சொத்தாக இருக்கும். இந்த மகத்தான வெற்றிக்கு உதவிய வல்லுநர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் அவர் கூறினார்.

விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரியத் தகடுகள் வேலைசெய்யத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில், சூரிய புற ஊதா காட்சித் தொலைநோக்கி, பிளாஸ்மா துகள் பகுப்பாய்வுக் கருவி, எக்ஸ்கதிர் நிறமாலைமானி உட்பட்ட ஏழு ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.