ஆதித்யா எல்-1 சுற்றுப்பாதை நான்காம் முறையாக உயர்த்தம் ISRO
இந்தியா

ஆதித்யா எல்-1 சுற்றுப்பாதை 4ஆவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது!

Staff Writer

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதையின் உயரம் நான்காவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சூரியப் புலத்தை ஆய்வுசெய்வதற்காக, இந்தியாவின் சார்பில் ’ஆதித்யா எல்-1’ விண்கலம், கடந்த 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதையடுத்து பூமியை நான்கு சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிவரும்படி செய்யப்பட்டது.

முதலில், செப்டம்பர் 3ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 245 கி.மீ. x அதிகபட்சம் 22,459 கி.மீ. என்கிற சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் சுற்றும்படி இஸ்ரோ செய்தது.

அதையடுத்து, 5ஆம் தேதியன்று ஆதித்யாவின் சுற்றுவட்டப் பாதை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு, விண்கலமானது 282 கி.மீ. x 40,225 கி.மீ. என்கிற அளவில் சுழல விடப்பட்டது.

மூன்றாவது முறையாக, கடந்த 10ஆம் தேதியன்று 296 கி.மீ. x 71,767 கி.மீ. என்கிற சுற்றுப்பாதைக்கு ஆதித்யா விண்கலம் உயர்த்தப்பட்டது.

நான்காவது முறையாக இன்று ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை, 256 கி.மீ. x 1,21,973 கி.மீ. என்கிற அளவுக்கு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.

அடுத்ததாக, வரும் 19ஆம் தேதியன்று ஐந்தாவது சுற்றுப்பாதை உயர்த்தம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை அதிகரிப்பையொட்டி, மொரிசியஸ், போர்ட்பிளேர், பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையங்கள், அதன் நகர்வைக் கண்காணித்தபடி  இருந்தன.


இஸ்ரோவின் தற்காலிக டெர்மினலானது பிஜித் தீவில் நிறுத்தப்பட்டு, விண்கலத்துக்குத் தேவையான வசதிகளை அளித்துவருகிறது.