ஆதித்யா எல் – 1 எடுத்த சூரியன் புகைப்படம் 
இந்தியா

சூரியனை விதம்விதமாகப் படம் எடுத்த ஆதித்யா எல்–1 விண்கலம்!

Staff Writer

ஆதித்யா எல் -1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது. இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பா் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இது பல்வேறு கட்ட பயணங்களைக் கடந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. அண்மையில் ஆதித்யா விண்கலத்தின் 2ஆவது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் ஒளிப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் உள்ள புற ஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கி இந்தப் படங்களை எடுத்துள்ளது.

அதில், சூரியனைச் சுற்றியுள்ள குரோமோஸ்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளங்களில் படம்பிடித்துள்ளது.