செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ஆனந்த் 
இந்தியா

ஆம் ஆத்மி அமைச்சர் திடீர் ராஜினாமா… விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்!

Staff Writer

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ஆம்ஆத்மி கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட தொடங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது. அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. ஊழல் என்ற பெயருடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. எனவே, அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்.

எனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் அமைச்சரானேன். தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை தடுத்து நிறுத்தும் கட்சியில் தான் நீடிக்க விரும்பவில்லை.” என்று ராஜ்குமார் ஆனந்த் கூறினார்.

அவரின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், “கட்சிகளை உடைப்பதற்கு மத்திய பாஜக அரசு எப்படி மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பதற்கு ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா சாட்சி. முன்னர் பா.ஜ.க. ஊழல் கட்சி என்று விமர்சித்தவர், இப்போது பா.ஜ.க.வில் இணைவார்” என்று கூறினார்.