ருஷிகொண்டா அரண்மனை கட்டடம், விசாகப்பட்டினம் 
இந்தியா

முதல்வருக்காக ரூ.500 கோடியில் அரண்மனையா?

Staff Writer

கடலைப் பார்த்தபடி பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அரண்மனை போன்ற கட்டடம், மிக ரகசியமாகக் கட்டப்பட்டது, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக!

இந்தக் கட்டடம் சந்திரபாபு நாயுடுவின் அரசால் பொதுவெளிக்கு வந்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி ஒப்புதலை மத்திய அரசு மே, 2021இல் வழங்க, ஆந்திரப்பிரதேசத்தின் சுற்றுலாத் துறை விசாகப்பட்டினத்தில் கட்டியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ், ”ருஷிகொண்டா அரண்மனை 9.88 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. மக்கள் பணம் ரூ. 500 கோடி செலவில் அதிகப்படியான ஆடம்பரத்தோடு ஜெகன்மோகனின் கேம்ப் ஆபிசிற்காக (முதல்வர் வீடு) கட்டப்பட்டது.” என்றார்.

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. கண்ட சீனிவாஸ்ராவ் ஊடகக் குழுவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அவர், “சுற்றுலாத் துறையின் ஹோட்டல் இருந்த இடத்தில் அதை இடித்துவிட்டு இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. முதலில் ரூ.91 கோடி திட்ட மதிப்பில், ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இது. ஆனால் அடித்தளம் போடும் முன்பே ரூ.95 கோடி செலவிடப்பட்டது.” என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

“இது முதல்வரின் கேம்ப் ஆபிஸ் அல்ல. பிரதமர், குடியரசுத் தலைவர், முக்கிய விருந்தினர் வந்தால் அவர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட கட்டடம்.” என்கிறார் முன்னாள் மந்திரி அமர்நாத்.

ஆனாலும், “இது டூ..டூ மச்” என்று வாய் பிளக்கிறார்கள் மக்கள்.