மகாராஷ்டிர மாநிலத்தில் 100 வயதான வாக்காளர்கள் 47 ஆயிரத்து 716 பேர் என்று அந்த மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வெறுப்பைத் தூண்டும்வகையில், நல்லிணக்கத்தைக் குலைக்கும்வகையில் பேசக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கறாராக உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, ஓட்டு ஜிகாதி என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என ஆணையம் கூறியுள்ளது. இதை மீறுவோர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொக்கலிங்கம் புதனன்று ஊடகத்தினரிடம் கூறினார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் 48 தொகுதிகளில் 14 தொகுதிகளில் பா.ஜ.க.கூட்டணி தோல்வியைச் சந்தித்தது; அதைக் குறிப்பிட்டு அண்மையில் கோலாப்பூரில் கூட்டம் ஒன்றில் பேசிய மகாராஷ்டிர துணைமுதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அங்கெல்லாம் ஓட்டு ஜிகாதிதான் காரணம் என்றும் இந்துத்துவத்துக்கு எதிரான தலைவர்கள் உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி இந்துத்துவம் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் பேசினார். அது கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இப்பிரச்னையில் தலையிட்டுள்ளது.
”இம்மாநிலத்தில் 8 கோடியே 94 இலட்சத்து 46 ஆயிரத்து 211 பேர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வாக்களித்தனர்; இந்தத் தேர்தலில் புதிதாக 69 இலட்சத்து 23 ஆயிரத்து 199 பேர் வாக்காளர்களாகப் பதிவுசெய்துள்ளனர்; இதன்மூலம் 9 கோடியே 63 இலட்சத்து 69 ஆயிரத்து 410 பேர் வாக்களிக்க உள்ளனர்.” என்றும் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
இதில், முதல் முறை வாக்காளர்கள் 20, 93, 206 பேர்; 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12, 43, 192 பேர்; நூறு வயதைத் தொட்டவர்கள் 47,716 பேர் என்றும் அவர் கூறினார்.