வெள்ளத்தில் மிதக்கும் இமாச்சலின் மண்டி மாவட்டம் 
இந்தியா

41 ஆண்டுகளில் இல்லாத கனமழை; பலத்த சேதாரத்தில் வட இந்தியா!

Staff Writer

வார இறுதியில் பெய்த இடைவிடாத மழை வட இந்தியாவை புரட்டிப் போட்டு வருகிறது. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியது, மலைகளில் நிலச்சரிவுகள், சமவெளிகளில் நீர் தேங்கியது உள்ளிட்ட மழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் இறந்தனர்.

உத்தரகாண்டின் உத்தம் சிங் நகரில், இரண்டு வீடுகளின் பகுதிகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் இறந்தனர், அதே நேரத்தில் கேதார்நாத்திலிருந்து 11 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள முனி கி ரெட்டி பகுதியில் கங்கை நதியில் அதிகாலை 3 மணியளவில் விழுந்தது. அதில் பயணம் செய்தவர்களில் 3 பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காணாமல் போன மற்ற 3 பேரை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் - கோட்கர், பனேவல்லி கிராமத்தில் உள்ள அவர்களின் வீட்டின் மீது குப்பைகள் விழுந்ததில் ஒரு குடும்பம் மூன்று உறுப்பினர்களை இழந்தது, அதே நேரத்தில் குலுவின் லங்காட்பீர் கிராமத்தில் ஒரு பெண்ணும், சம்பாவின் காக்கியானில் ஒரு நபரும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தனர்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஞாயிற்றுக்கிழமையும், ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமையும் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் பள்ளிகள் திங்கள்கிழமை மூடப்படும் டெல்லி, உ.பி அரசுகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில் இமாச்சலப் பிரதேசம் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மழையால் ஏற்படும் சேதங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய இரு நகரங்களிலும் பெய்த மழைப்பொழிவு முந்தைய சாதனைகளை தகர்த்துள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 153 மிமீ பதிவானது, டெல்லி 41 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது - இது ஜூலை 25, 1982 க்குப் பிறகு ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும். 24 மணி நேரத்தில் 169.9 மிமீ மழை பதிவாகியுள்ளது.

சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 302.2 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது நகரத்தின் வரலாறு காணாத அளவு. அதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில், 35 மணி நேரம் பெய்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. கனமழையால் மாநிலம் முழுவதும் 6 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 800க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன.

குலு, பஞ்சார், லுஹ்ரி மற்றும் ராம்பூர் ஆகிய நகரங்களை இணைக்கும் 50 ஆண்டுகள் பழமையான ஆட் பாலம், மண்டி மாவட்டத்தில் பியாஸ் ஆற்றின் வேகமான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. பியாஸ் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள லர்ஜி நீர்மின் திட்டம், வெள்ளநீரால் மோசமாக பாதிக்கப்பட்டு, மின்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திட்டத்தின் மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், மின்தடை ஏற்பட்டுள்ளது.