மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறையால் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும், மருந்து பற்றாக்குறையாலும் இந்த உயிரிழப்புகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை மருத்துவமனையின் டீன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''கடந்த 24 மணி நேரத்தில் ஆறு ஆண் குழந்தைகளும், ஆறு பெண் குழந்தைகளும் இறந்துள்ளன. இது தவிர மேலும் 12 நோயாளிகள் பாம்பு கடி உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். பல ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறோம்.
80 கிலோமீட்டர் சுற்றளவில் இது போன்ற மருத்துவமனை இது ஒன்றுதான் இருக்கிறது. எனவே நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாகக் கேட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊரான தானேயில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.