கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா(81), பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி பெங்களூரு சதாசிவ நகர் காவல்துறையினர் போக்சோ பிரிவு 8, இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354A ஆகியவற்றின் படி வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ”சம்மந்தப்பட்ட சிறுமி, அவரது தாயாருடன் சில நாள்களுக்கு முன் ஏதோ பிரச்னை என்று எனது வீட்டுக்கு வந்தனர். நானும் தனிப்பட்ட முறையில் காவல் ஆணையரை அழைத்து அவர்களுக்கு உதவுமாறு கூறினேன். இந்த நிலையில் சிறுமியின் தாய் எனக்கு எதிராக பேசத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன்.
நடந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்த நிலையிலும் என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேசுவரா கூறுகையில், எடியூரப்பா மீது பதியப்பட்டுள்ள வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.