ஜாம்நகர் விமான நிலையம் 
இந்தியா

அம்பானிக்காக 10 நாள்கள் ஜாம்நகரில் இப்படியா செய்வது?- சமூக ஊடகங்களில் சூடான விவாதம்!

Staff Writer

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுக்காக, ஜாம்நகர் விமானநிலையத்துக்கு பன்னாட்டு நிலைய அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவன தலைமை அதிகாரி வைரன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் நடக்கவுள்ள திருமணத்தையொட்டி, மணநாளுக்கு முந்தைய மூன்று சிறப்பு நிகழ்வு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக, உலகளாவிய பிரபலங்களின் தனி விமானங்கள், சொகுசு விமானங்கள் வந்துசெல்ல வசதியாக, ஜாம்நகரில் உள்ள விமானநிலையத்துக்கு பன்னாட்டு நிலைய அந்தஸ்தை விமானநிலைய ஆணையம் வழங்கியுள்ளது. 

மேலும், இந்த விமானநிலையத்தில் குடிவரவு, சுங்கத் துறைகளின் தற்காலிக வசதியையும் அளிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இராணுவப் பயன்பாட்டுக்கான ஜாம்நகர் விமானநிலையத்தில், வர்த்தக விமானங்களும் வந்துசெல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக பயணிகள் முனையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் டெக்னிக்கல் ஏரியா எனப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பயணியர் விமானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.  

இந்த நிலையில், அம்பானி மகன் திருமணத்துக்காக, அந்தப் பகுதியிலும் தனியார் விமானங்கள் வந்துசெல்ல அனுமதி தரப்ப்ட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மூன்று விமானங்கள்வரை அந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று விமானநிலைய ஆணையம் கூறியுள்ளது. 

ஜாம்நகர் விமானநிலையத்தின் சிவிலியன் பகுதியில் பொதுவாக ஆறு பால்கன்400வகை சிறு விமானங்கள் அல்லது 3 ஏர்பஸ் ஏ320 வகை பெரிய விமானங்கள் வந்துசெல்ல அனுமதி உண்டு. ஆனால், நேற்று மட்டும் 140 விமானங்கள்வரை வந்துசென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

அம்பானி வீட்டுத் திருமணத்தை முன்னிட்டு, விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் ஊழியர்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்குவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 35 மாநில அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை, 70ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தரையிறங்கல் உட்பட்ட பணிகளை மேற்கொண்டுவந்த 65 பணியாளர்களைவிடக் கூடுதலாக 60 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விவரங்களைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் வைத்துக்கொண்டு, சமூக ஊடகங்களில் அம்பானி வீட்டுக் கல்யாணத்துக்காக இப்படியா என சூடான விவாதங்கள் நடந்துவருகின்றன.