கட்டுமானத் தொழிலாளர்கள் 
செய்திகள்

கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தால் உடலை எடுத்துச் செல்வதற்கான செலவை அரசே ஏற்கும்!

Staff Writer

கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்தச் செல்வதற்கான செலவை கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் வாயிலாக வழங்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது உடலை அந்த தொழிலாளியின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி அளிப்பது தொடர்பாக 2023-24ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத் தொழிலாளர் நலத்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை உடல் கூராய்வுக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்படும் செலவினம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும்.

மேலும், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை, அரசு அமரர் ஊர்தி அல்லது ரயில் மூலம் எடுத்துச் செல்ல ஆகும் தொகையும், விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதெனில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவியாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.