செய்திகள்

ஃப்ரீ பையர் கேமில் 36 லட்சத்தை செலவழித்த சிறுவன்: பெற்றோர்கள் பாடம் கற்பார்களா?

Staff Writer

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் எந்தளவிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு ஹைதராபாத்தில் நடந்த இந்த சம்பவம் ஓர் உதாரணம். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து, அவருடைய மகன் ஃப்ரீ பையர் கேம் விளையாடுவதற்காக 36 லட்சம் ரூபாய் செலவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் அம்பெர்பெட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தனது தாத்தாவின் கைப்பேசியில் ஃப்ரீ பையர் கேமை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளான். பிறகு, அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல ரூ.1,500 எனத் தொடங்கி, 10,000 ரூபாயாக அதிகரித்து, பிறகு ஒரே பணப்பரிமாற்றத்தில் ரூ.2 லட்சம் வரை செலவிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 36 லட்சம் வரை தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொஞ்சம் கொஞ்சமாக கேமுக்கு செலவிடப்பட்டிருப்பதை அறியாமலேயே சிறுவனின் தாய் இருந்திருக்கிறார். ஒட்டுமொத்த பணமும் வங்கிக் கணக்கிலிருந்து காலியான பிறகே, அவர் சுதாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது, சைபர் க்ரைம் காவலர்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

அந்தப் பெண்ணின் வங்கி கணக்கிலிருந்த பணம், அவருடைய கணவர் உயிருடன் இருந்த போது பாதி சம்பாதித்தது என்றும், மீதி பணம் அவரின் மறைவிற்குப் பிறகு உதவித் தொகையாக பெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 52 லட்சம் ரூபாயை செலவிட்டிருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து சமூகத்தில் நடந்தாலும் பெற்றோர்கள் இன்னும் பாடம் கற்கவில்லை என்றே தெரிகிறது!