மாணவனின் தாயாருக்கு தென்னரசு ஆறுதல்  
செய்திகள்

நாங்குநேரி- மாணவனின் தாயாருக்கு தென்னரசு, அப்பாவு நேரில் ஆறுதல்; முதல்வரும் பேச்சு!

Staff Writer

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனையும் அவனது தங்கையையும் சக மாணவர்களே வெட்டிக் கொல்ல முயன்றனர். படுகாயம் அடைந்த மாணவனும் அவனின் தங்கையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவனையும் அவனது குடும்பத்தாரையும் நேரில் பார்த்துவர உத்தரவிட்டார்.

அதன்படி, அமைச்சர் தென்னரசுவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவும் இன்று காலை மாணவனை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். சிறுவனுக்கும் அவனது தங்கைக்கும் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தனர்.

அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் சிறுவர்களின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் நலம் பற்றி கேட்டு, ஆறுதல் கூறினார்.

இதனிடையே, சிறுவன், அவன் தங்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றம் தொடர்பாக இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்குநேரி நம்பியார் நகரைச் சேர்ந்த அந்த சிறுவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

முன்னதாக, இந்தக் கொலைமுயற்சித் தாக்குதலில், நான்கு மாணவர்கள் உட்பட 6 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.