ஐடி நிறுவனம் 
வணிகம்

டாப்10 ஐடி நிறுவனங்களில் குறையும் ஊழியர்கள்! என்ன ஆச்சு?

Staff Writer

இந்தியாவில் உள்ள டாப் 10 ஐடி நிறுவனங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஊழியர்கள் சேர்ப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 12 மாதங்களில், இந்தியாவின் டாப்10 ஐடி நிறுவனங்கள் மற்றும் பிபிஎம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் 93 பேர் குறைந்துள்ளனர்.

ஆனால், அதற்கு முந்தைய ஆண்டு 3.1 லட்சம் ஊழியர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த பத்து நிறுவனங்கள் மொத்தம் 5 லட்சம் ஊழியர்களை சேர்த்துள்ளன.

கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் அதிக அளவில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டாலும், இந்த ஆண்டு 93 ஊழியர்கள் குறைந்துள்ளனர் என்பது கவனிக்கவேண்டிய விஷயமாகும்.

ஊழியர்கள் குறைந்ததற்கான காரணம் பொருளாதார மாற்றம், இருக்கின்ற ஊழியர்களிடமே பணிகளைக் கொடுப்பது போன்றவை சொல்லப்படுகிறது.

இந்தியாவின் நான்கு பெரிய ஐடி நிறுவனங்களில் 18ஆயிரம் ஊழியர்கள் வரை குறைந்துள்ளனர். டிசிஎஸ்-இல் மட்டும் சொற்ப எண்ணிக்கையில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், இன்ஃபோசிஸில் 6,940 பேரும், விப்ரோவில் 8,812 பேரும், எச்.சி.எல் -லில் 2, 506 பேரும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக நம்பிக்கை அளிக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி சேவை சார்ந்த துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.

ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் குறைவதற்கு செய்யறிவு தொழில்நுட்பம்( AI) போன்றவற்றின் வருகை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.