ரிலையன்ஸ் தொழில் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகிலேயே பெரும் இந்திய செல்வந்தர் எனும் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஆசியாவின் முதல் பணக்காரராகவும் முகேஷ் அம்பானி பெயரே வந்துள்ளது.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகப் பெருங்கோடீஸ்வரர் பட்டியலில் அவர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சொத்து மதிப்பில் 39.76 சதவீதம் உயர்ந்து, 116 பில்லியன் டாலராக அம்பானியின் சொத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் 100 பில்லியன் டாலர் சொத்து கொண்டோர் பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியராகவும் பெயர்பெற்றுள்ளார்.
இவரையடுத்து, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 84 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
அடுத்து, எச்.சி.எல். கணினி நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான சிவ் நாடார் 36.9 பில்லியர் டாலருடன் மூன்றாம் இடத்திலும், பெண் தொழிலதிபரான சாவித்ரி ஜிண்டால் 33.5 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
சாவித்ரி ஜிண்டால் கடந்த முறை ஆறாவது இடத்தில் இருந்தவர்; இப்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.
திலிப் சாங்வி (26.7 பில்லியன் டாலர்),
சைரஸ் பூனாவாலா (21.3 பில். டாலர்),
குஷால் பால் சிங் (20.9 பில். டாலர்),
குமார் பிர்லா (19.7 பில். டாலர்),
இராதாகிஷன் தமானி (17.6 பில். டாலர்),
லட்சுமி மிட்டல் (16.4 பில். டாலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள இந்திய கோடீஸ்வரர்கள் ஆவர்.
உலகிலேயே அதிகமான பணத்தை வைத்திருப்பவர் பெர்னார்டு அர்னால்ட்டும் அவரின் குடும்பமும் என போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலர் ஆகும்.
அவரைத் தொடர்ந்து, எலான் மஸ்க் (195 பில்.டாலர்), ஜெஃப் பெசாஸ் (194 பில்.டாலர்), மார்க் சக்கர்பெர்க் (177 பில்.டாலர்), லாரி எல்லிசன் (114 பில். டாலர்) ஆகியோர் உலகப் பணக்காரர் பட்டியலின் அடுத்தடுத்த புள்ளிகள் ஆவர்.
நடப்பு 2024ஆம் ஆண்டின் போர்ப்ஸ் உலகப் பணக்காரர் பட்டியலில், புதிதாக 25 இந்தியப் பெருங்கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நரேஷ் திரேகன், ரமேஷ் குன்கிகண்ணன், ரேணுகா ஜக்தியானி ஆகியோர் இந்தப் பட்டியலில் வந்துசேர்ந்திருக்க, பைஜூவின் இரவீந்திரன், ரோகிக்கா மிஸ்திரி ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.