இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களான முகநூல், வாட்சாப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தகவல்களைக் கையாளும் மையம் சென்னையில் அமைக்கப்படவுள்ளது.
சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பத்து ஏக்கர் பரப்பில் இந்த மையம் அமைக்கப்படுகிறது.
புரூக்பீல்ட் அசட் மேனேஜ்மெண்ட், டிஜிட்டல் ரியால்ட்டி ஆகியவற்றுடன் ரிலையன்ஸ் தொழில் குழுமத்துடன் மெட்டா நிறுவனம் கைகோக்கிறது.
கூட்டு நிறுவனமாக ஏற்படுத்தப்படும் இந்த மையம், 100 மெகாவாட் அளவுக்கான தகவல்களைக் கையாளும் திறன் படைத்ததாக இருக்கும்.
சுமார் 85 கோடி திறன்பேசிகள்(ஸ்மாட்ர்ட் போன்) பயன்படுத்தப்படும் இந்தியாவில், இன்னும் சந்தையை விரிவாக்கவும், பயன்பாட்டாளர் உருவாக்கும் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் உள்ளூர் அளவுக்குக் கொண்டுபோவதால், வர்த்தகத்துக்கு அகப்படாமல் இருக்கும் விசயங்களைச் சரிசெய்யவும்,
செயற்கை நுண்ணறிவைத் திறம்படப் பயன்படுத்தவும், இப்போது செய்யப்பட்டுவருவதைப் போல சிங்கப்பூருக்குத் தரவுகளை அனுப்பி கையாள்வதைத் தவிர்த்து இந்தியாவிலேயே அவற்றைக் கையாள்வதால் செலவைக் குறைக்கவும் சென்னை உட்பட பல நகரங்களில் இந்தத் தரவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டுத் திட்டத்தில் முக்கியப் பங்காளியான ரிலையன்ஸ் குழுமத்தினருடன், மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், கடந்த மாதம் குஜராத்தில் நடைபெற்ற முகேஷ் அம்பானி மகன் திருமண முன்வைபோகத்தில் பேசி முடித்துவிட்டார் என்று வர்த்தக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை. அப்படி என்ன இரகசியமோ?!