வணிகம்

வெள்ளதால் சேதமான வாகனங்களுக்கு உடனடியாக வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகை!

Staff Writer

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளதால் சேதமான வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கும் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற்றது. அதில், ஆயில் மற்றும் ஸ்பார்க் பிளாக் மாற்றுதல் போன்ற செலவுகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனிடம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பழுது பார்க்க அரசு சார்பில் வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சிறப்பு முகாம்கள் நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தொகை வழங்க நடைமுறைகள் எளிதாக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

குறைந்த காலத்தில் காப்பீட்டுத்தொகையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஏற்கனவே வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் சார்பில் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் வீடு உள்ளிட்டவைகளுக்கான வெள்ள சேதார இழப்பீடு வழங்க முகாம்கள் நடைபெற்றது.

முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். அங்கு இருந்த சர்வேயர்கள் வாகனங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஆயிலின் தன்மை உள்ளிட்டவற்றை சர்வே செய்து காப்பீட்டு நிறுவனத்தாரிடம் கணக்கீட்டு தொகை விபரத்தை வழங்கினார்.

அந்த தொகையை உடனடியாக காப்பீடு நிறுவனத்தினர் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கினர்.

முதல்கட்டமாக பழுது பார்க்க மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும், கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வணிக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. அவைகளுக்கு பேட்டரி மாற்றுதல், ஆயில் மற்றும் ஸ்பார்க் பிளாக் மாற்றுதல் போன்ற வகை செலவுகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட்டது.

முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமாகிய வாகனங்கள் முழுவதுமாக சர்வே செய்யப்பட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்று புதிய வாகனங்கள் பெற வழிவகை செய்தல், அல்லது அதற்கான தொகையை வழங்குதல் குறித்து பரிசீலனை செய்யப்படும் என காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.