ஹிந்துஜா சகோதர்கள் 
வணிகம்

வேலைக்காரர்களுக்கு சரியாக சம்பளம் தராததால் சிறைக்குப் போகும் பணக்கார குடும்பம்!

Staff Writer

ஆசியாவின் முதல் இருபது பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்தில் நான்காண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காரணம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தருவது.

1914-இல் பரமனாந்த் ஹிந்துஜா என்பவர் தொழில்நிறுவனம் ஒன்றைத் ஆங்கில ஆட்சியில் தொடங்கினார். இவருக்கு நான்கு மகன்கள். அதில்  ஸ்ரீ சந்த் என்பவர் இறந்துவிட, மீதி மூவரான கோபிசந்த், ப்ரகாஷ், அசோக் ஆகியோர் உலகெங்கும் உள்ள தங்கள் தொழில்களைக் கவனித்துவருகிறார்கள். இவர்களின் சொத்துமதிப்பு 20 பில்லியன் டாலர்கள் என போர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள தங்கள் மாளிகையில் குறைந்த சம்பளத்துக்கு இந்தி மட்டுமே தெரிந்த வேலைக்காரகளை வைத்து அவர்களைஉழைப்புச் சுரண்டல் செய்ததற்காக இந்த தண்டனை. தினமு 18 மணி நேர வேலை, வாரம் முழுக்க ஓய்வின்றி வேலை வாங்கியது, சுவிஸ் நாட்டு சம்பள விகிதங்களுக்கு மிகக் குறைவாக சம்பளம் அளித்தது, சாதாரண விசாவில் வரவைத்து வேலை வாங்கியது போன்ற குற்றங்களுக்காக இந்த தண்டனை ஹிந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கபட்டுள்ளது.

2018-இல் தங்களுக்கு கிடைத்த துப்பின் அடிப்படையில் அந்நாட்டு தொழிலாளர் நல அதிகாரிகள் ஹிந்துஜாக்களின் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு இதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றி வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து பிரகாஷ் ஹிந்துஜா, அவர் மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு நாலரை ஆண்டுகால சிறைத் தண்டனையும் ஹிந்துஜா வாரிசான அஜய், அவர் மனைவி நம்ரதா ஆகியோருக்கு நான்கு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்களின் குடும்ப நிர்வாக மேலாளருக்கு 18  மாதங்கள் சிறை அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தண்டனையை எதிர்த்து தொழிலதிபர்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த  குற்றச்சாட்டுகள் அனைத்துயும் ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.

சர்வதே அளவில் தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் ஹிந்துஜா குழும உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்பது தொழில் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டு வேலை ஆட்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியாத இவர்களின் மனநிலையும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பணமிருக்கும் இடத்தில் குணமிருப்பதில்லை என்று அன்றைக்கே பாடிவைத்தார்கள்!