சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது 
வணிகம்

சமையல் எண்ணெய் மீதான வரியை உயர்த்திய மத்திய அரசு… கிடுகிடுவென உயரப்போகும் விலை!

Staff Writer

பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளதால் வணிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை நிர்ணயம் செய்துள்ளது. இந்த இறக்குமதி வரி என்பது ஒவ்வொரு பொருட்களுக்கும் மாறுபடும்.

குறிப்பாக சமையல் எண்ணெய்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகில் அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தில் இருந்து அதிகளவில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதேபோல் அர்ஜெண்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக உயர்த்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், யாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை சுங்க வரி 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 12.5 சதவீதத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் இந்த முடிவு என்பது எடுக்கப்பட்டதாக கூறினாலும், சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 25 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.