வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
மனைவியுடன் விவாகரத்து சர்ச்சைக்கு இடையே, தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தீபாவளிக்கு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘டாடா’ இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெயம் ரவி.
மேலும் ‘ஜீனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்தியில் நடிப்பதற்கு சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜெயம் ரவி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து பேசி உள்ளேன். அவர் தொடர்ச்சியாக நிறையப் படங்கள் இயக்க உள்ளதால், அனைத்து படங்களையும் முடித்துவிட்டு படம் பண்ணலாம் என்று சொன்னார். அவரிடம் கதையொன்று இருப்பதாகவும் அதை விரைவில் சொல்வதாகவும் வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார்.” என்றார்.
இதன் மூலம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.