நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை 
செய்திகள்

நூறு நாள் போராட்டம்! 540 கிராம் குழந்தையை மீட்ட அரசு மருத்துவர்கள்!

Staff Writer

நாகப்பட்டினத்தில் 540 கிராம் எடையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நூறு நாட்களாகப் போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாகப்பட்டினம் அடுத்த கோகூரைச் சேர்ந்த சரண்யாவும், திருவாரூர் மாவட்டம், கொராடச்சேரியைச் சேர்ந்த திருமணம் செய்துகொண்டனர். கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த தம்பதிகள் ஏறி இறங்காத தனியார் மருத்துவமனை இல்லை. இதனால் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சரண்யா குழந்தை பேறுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

சிகிச்சையில் கருவுற்ற சரண்யா, அங்கேயே தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் ,540 கிராமில், உருவமே இல்லாத நிலையில் பிறந்துள்ளது.

குறைவான எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்ற நூறு நாட்களாகப் போராடி நாகப்பட்டினம் அரசு மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இன்று குழந்தையை அவரது பெற்றோர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

குறை மாதத்தில் பிறந்த இந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சுத்திணறல்,கிருமி தொற்று, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்தது. அந்தக் குழந்தையைத் தான் போராடி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

குறிப்பாக செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு முப்பது நாட்களில் குழந்தையை மீட்ட அரசு மருத்துவர்கள் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைக்கு பாலூட்டியுள்ளனர். இதன் பின் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டுவந்துள்ளனர். சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்குக் குழந்தையின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிறைவு விழாவில், திருமதி சரண்யா முருகதாஸ் தம்பதியருக்கு குறை பிரசவமாக 540 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் எடையை, மருத்துவர்கள் மற்றும் செவியர்கள் சிறப்பாக செயல்பட்டு குழந்தையின் எடையை 1.5 கிலோவாக உயர்த்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்” என பதிவிட்டுள்ளார்.