பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதியவர்களில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in & www.dge.tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தற்போது வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தேர்வு எழுதிய மாணவர்களில் 8,35,614 (91.39%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர்(97.67%)முதலிடமும், சிவகங்கை (97.53%) இரண்டாம் இடமும், மூன்றாம் இடத்தில் விருதுநகரும் (96.22%) வந்துள்ளது. அதேபோல், ஆங்கில பாடத்தில் அதிகபட்சமாக 98.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 95.55% பேரும், கணிதத்தில் 95.54% பேரும், அறிவியலில் 95.75% பேரும், சமூக அறிவியலில் 95.83% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.