சமீபத்திய போர்ப்ஸ் பத்திரிகையின் உலக பணக்கார வரிசையில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வந்துள் ளன.மொத்தமுள்ள 1645 பெரும் கோடீஸ்வரர்களில் 172 பெண்கள் மட்டுமே உள்ளார்கள்.அதிலும் 32 பேர் மட்டுமே சுய முயற்சியில் கோடீஸ்வரர் ஆனவர்கள், மற்றவர்கள் பரம்பரை வழியாகவோ அல்லது பெரும் பணக்காரரை திருமணம் செய்ததாலேயோ இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்கள்.
ஆண் தொழிலதிபர்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையே பெண் தொழிலதிபர்களைக் காட்டிலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதற்கான காரணமாக குறிப்பிடுகிறார்கள்.ஆண்களில் 64 சதவீதமும் பெண்களில் 51 சதமும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள்.
ஆண் தொழிலதிபர்கள் வெற்றிகரமாக இருப்பதற்கு என்ன காரணம்? ஆண்கள் தொழிலில் வெற்றி பெறும்போது,அதற்கான முழு பெருமையையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்.மாறாக பெண்கள்,வெற்றி பெறும்போது பெருந்தன்மையாக அதனை வெற்றிக்காக உழைத்த அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறார்களாம்...ஆண்களே... நோட் பண்ணுங்க...
எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதுவும் நடக்கமாட்டேங்குதே..என்று புலம்புபவர்கள் கொஞ்சம் கிளாடியாவின் வாழ்க்கையை புரட்டிப் பார்க்கலாம். நம்மோட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லை..என்று அனைவரையும் சொல்ல வைக்கும் வாழ்க்கை அவருடையது.
கிளாடியாவிற்கு ஏழு வயதான போது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு எரிந்து நாசமானதுடன் அவருடைய அம்மா கண்ணெதிரிலேயே கருகி உயிரிழந்தார். பிறகு சிறிது காலம் 70 வயது பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஏற்கெனவே நோயுற்ற பாட்டியும் தன் கண்ணெதிரேயே மரித்து விடுவாரோ என்ற பயத்திலேயே
சிறு வயதில் இருந்துள்ளார். கிளாடியாவின் 14 வயதில் அவரும் இறந்துவிடவே, குடும்பத்தை விட்டு சென்றுவிட்ட அவருடைய அப்பாவிடம் கிளாடியாவை வளர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் கிளாடியாவை அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டார். இரண்டு வருடங்கள் வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட கிளாடியா 16 வயதில் தன்னுடைய சொந்த முயற்சியில் ஹங்கேரியிலுள்ள புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் கல்வியியல் படித்தார். சரியாக ஆங்கிலம் கூட பேசத் தெரியாத நிலையில் கையிருப்பாக சுமார் பத்தாயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டு விட்டார்.
அமெரிக்காவில் வாழ்க்கையை ஓட்டுவதற்காக சின்ன சின்ன வேலைகளை செய்து காலத்தை கடத்திக் கொண்டிருந்தவருக்கு அடுத்த மிகப் பெரிய அடி காத்திருந்தது.
கார் விபத்து ஒன்றில் ஏறக்குறைய சாவை தொட்டு மீண்டார். அந்த விபத்தில் அவருடைய கால் இரண்டும் பாதிக்கப்பட்டு வீல் சேர் மூலமே நகர முடியும் என்றானது. வேலை இல்லை. வீடு இல்லை. நடமாடவும் முடியாது என்ற நிலையில் உடைந்து போய் விடாமல் போராடிப்பார்த்து விடுவது என்று முடிவெடுத்தார் கிளாடியா. அதன் பிறகு அவர் நிகழ்த்தியது அத்தனையும் சாதனைகள்.
பிஸினஸ்,மார்க்கெட்டிங்,பப்ளிக் ரிலேசன் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றார். பிறகு திரைத்துறையில் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று அனைத்து துறைகளிலும் பங்கேற்று 29 உலக அளவிலான விருதுகளை அள்ளியுள்ளார். 1956 ல் நடந்த ஹங்கேரி புரட்சியைப் பற்றிய இவரது டாக்குமெண்ட்ரியான ’டார்ன் பிரம் தி பிளாக்’ ’(Torn from the flag) விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு,ஆஸ்கர் பரிசுப் பட்டியலிலும் இடம் பெற்றது.
எழுத்துத் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை.200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இரண்டு புத்தகங்களுக்கு (Hungarian America, Portrait Gallery of Hungarian Americans) துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இது தவிர வியாபார குழுமம் மற்றும் தனி நபர்களுக்கு வியாபார ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கிளாடியா.‘மை சக்சஸ் கன்சல்டண்ட்’ என்ற அந்த நிறுவனம் மூலம் இவருடைய ஆலோசனைகளை பெற இன்று உலகம் முழுக்க ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
பிரச்னைகளை கண்டு கலங்காமல்,எதையும் வெல்லலாம் என்று தன்னுடைய வாழ்க்கையின் மூலம் நமக்கு பாடம் சொல்கிறார் கிளாடியா.
பணமொழி
உன்னுடைய கனவுகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதே. பெரிய கனவுகளுடன் வாழ்பவன், நிஜங்களுடன் வாழ்பவனை விட வலிமையானவன்.
- ஆல்பிரட் ஐன்ஸ்டீன்
மே, 2014.