Moneyதர்கள்

நீங்கள் தூக்கி எறியும் ஷூ இன்னொருவருக்கு செருப்பு ஆகிறது

உலகம் உன்னுடையது

தமிழ் ஆலன்சோ

நாட்டில் காலில் அணிய செருப்போ ஷூவோ இல்லாமல்  எத்தனையோ பேர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் அணியும் செருப்புகள், ஷுக்கள் பிய்ந்துபோனதும் குப்பையில் எறியப்படுகின்றன. இவற்றால் சுற்றுப்புறச் சீர்கேடு வேறு. இந்த காலணிகளை ஏன் சரி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று  இரண்டு இளைஞர்கள் யோசித்ததன் விளைவு கிரீன்சோல் என்ற நிறுவனம் மும்பையில் உருவாகி உள்ளது. நாடு முழுவதும் இருந்து உபயோகித்த காலணிகள், ஷூக்களைப் பெற்று மறு சுழற்சி செய்து விநியோகிக்கிறார்கள் இவர்கள். அட செமத்தியான யோசனையாக இருக்கிறதே என்று விருதுகளும் அங்கீகாரங்களும் இவர்களுக்குக் குவிகின்றன.

இந்த நிறுவனத்தைத் தொடக்கியவரான ஷ்ரியான்ஸ் பண்டாரியிடம் அந்திமழைக்காகப் பேசினோம்.

“நான் ஒரு மாரத்தான் ஓட்டக்காரன். ஒவ்வொரு ஆண்டும் 3-4 ஷூக்கள் தேய்ந்துபோய்விடும். அதனால் அவற்றைத் தூக்கி எறிய வேண்டி இருக்கும். இதனால் உருவாகும் குப்பை பற்றி சிந்தித்தேன். அத்துடன் இந்த  உலகில் காலணி வாங்க வழி இல்லாமல் வாழும் நூறு கோடி மக்களைப் பற்றி அறிந்துகொண்டேன். இதையடுத்து தேய்ந்த ஷூக்களை வாங்கி அவற்றை செருப்புகளாக மாற்றி விநியோகம் செய்யத் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் இந்த ஷுக்களை மறுசுழற்சி செய்யும் தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. யாருக்கும் பழைய ஷூக்களை மாற்றும்

யோசனை பிடிக்கவில்லை. கடைசியில் மும்பையில் இந்த வேலையைச் செய்யும் ஒருவரைப் பிடித்தோம். அவர் மிகுந்த ஊக்கம் அளிப்பவராக இப்போதும் இருக்கிறார்.

மும்பையில் இப்போது ஷூக்களை பெற்றுக்கொள்ளும் வசதி எங்களுக்கு இருக்கிறது. பிற நகரங்களைச் சேர்ந்தவர்களை ஷூக்களை கூரியர் மூலம் அனுப்புமாறு கேட்கிறோம். பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின் ஊழியர்களின் தேய்ந்த ஷூக்களை வாங்கிக்கொள்கிறோம்.

ஷூவை வாங்கி அதன் மேல் பகுதியை அகற்றுகிறோம். அடிப்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, செருப்புகளாக மாற்ற ஸ்ட்ராப்கள் பொருத்தப்படுகின்றன. மேல் பகுதியிலிருந்து சில பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.

மும்பையில்  இப்போது ஆண்டுக்கு நாங்கள் 2-3 லட்சம் ஷூக்களை மறு சுழற்சி செய்யக்கூடிய திறன் பெற்றுள்ளோம்.  அடுத்த ஆண்டு ஒரு லட்சம் ஷூக்களை மறு சுழற்சி செய்து விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம். பிற நகரங்களில் நேரடியாக ஷூக்களைப் பெறவும் ஏற்பாடு செய்துவருகிறோம்.

இதுவரை 25000 ஷூக்களை பெற்றுள்ளோம். அவற்றை செருப்புகளாக மாற்றி விநியோகித்தும் விட்டோம். சுமார் 4000 செருப்புகளை விற்பனையும் செய்துள்ளோம்” என்கிறார் இவர்.

இப்போதைக்கு இந்தியாவில்  இதுபோல் செருப்பு இல்லாதவர்களுக்கு செருப்புகள் வழங்கும் ஒரே தன்னார்வத் தொண்டு நிறுவனமாக கிரீன்சோல் மட்டுமே இருக்கிறது. ஷிரியான்ஸ் உடன் உத்தரகாண்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரரான ரமேஷ் தாமி என்பவரும் இருக்கிறார். இருவரும் இணைந்துதான் கிரீன்சோலைத் தொடங்கினார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் இவர்களின் செருப்புகளைப் பெற்றுக்கொண்டு பாராட்டு கடிதம் எழுதிய பலரில் அடங்குவர்.­­­

உலகில் 35 கோடி ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படுகின்றன. அதே சமயம் சற்றொப்ப 100 கோடிப்பேர் செருப்பு இல்லாமல் வாழ்கிறார்கள். இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடத்துக்கு மடைமாற்றும் சிறிய முயற்சியாக கிரீன்சோல் இருக்கிறது. தங்களுடைய சமூகமாற்ற நடவடிக்கைக்கு தாராளமான உதவிகளையும் எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்.

டிசம்பர், 2016.