அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சாதாரண கறுப்பின குடும்பத்தில் நான்காவது குழந்தையாக பிறந்த ஒருவர் இன்று 4500 கோடிக்கு சொந்தக்காரர்.அதற்கு காரணம் அவர் ராப் இசையின் மேல் கொண்ட காதல். ஆனால் அந்த இசைக்காதல் நேரடியாக அவரை இந்த உயரத்திற்கு அழைத்து சென்றுவிடவில்லை. அவர் தன்னுடைய முதல் ஆல்பசிடிகளை தெருத்தெருவாகச் சென்று விற்கவேண்டி யிருந்தது. இன்று அவருடைய ஆல்பம் வெளியான முதல் வாரத்திலேயே விற்பனை பல லட்சம் பிரதிகளைத் தொடுகிறது.
இவர்தான் ராப் ரசிகர்களால் செல்லமாக ஜாய் சி (Jay Z)என்று கொண்டாடப்படும் ஷான் கோரி கார்டர். அமெரிக்காவின் பிரபலமான ராப் இசை பாடகர், தொழிலதிபர். இசைத்துறை சார்ந்து மட்டுமில்லாது நவீன ஆடைகள், நறுமணப் பொருட்கள், விளையாட்டு, ஹோட்டல், கட்டுமானம் என்று தன்னுடைய பெயரை பல்வேறு துறைகளிலும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை இவரின் சொத்து மதிப்பு 2500 கோடி என்று மதிப்பிட்டுள்ளது.
42 வயதான இவரின் 5 கோடி இசை ஆல்பங்கள் இதுவரை உலகளவில் விற்று தீர்ந்துள்ளன. 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ள ஜாய் சி 2006 ஆம் ஆண்டு எம்.டிவியின் உலக புகழ்பெற்ற ராப் பாடகர்களில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியான டைம் இதழின் 2013ஆம் ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1969 ல் பிறந்த ஜாய் சி சிறுவனாக இருந்தபோதே அவருடைய அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். அண்ணன், இரண்டு அக்காக்கள் மற்றும் ஜாய் சியை வளர்த்தது அம்மா குளோரியா கார்டர். இரவு நேரங்களில் பாத்திரங்களை உருட்டி ராப் பாடல்களின் மூலம் அனைவரின் தூக்கத்தையும் கெடுப்பது ஜாய் சியின் வழக்கம். அவரின் விருப்பத்தை புரிந்துகொண்டு பிறந்த நாள் பரிசாக காசட் ப்ளேயரைக் கொடுத்து அம்மாவும் ஊக்குவித்துள்ளார். 1990 களில் முதன்முதலாக ஜாய் ஓவின் அணியுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். பிறகு இவரின் தனி ஆல்பத்தை எந்த ஒரு பெரிய நிறுவனமும் வெளியிட முன்வராத நிலையில் தன்னுடைய காரிலேயே சென்று பாடல்களை விற்றுள்ளார்.
1995-ல் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ‘ராக் எ பெல்லா ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதன் பிறகுதான் ‘ரீசனபிள் டவுட்’என்ற முதல் வெற்றிகரமான ஆல்பத்தை 1996ல் வெளியிடுகிறார். முதன் முதலில் விமர்சகர்களிடமும் நல்ல பெயரை பெற்றுத்தந்த ‘ரீசனபிள் டவுட்’ பின்னாட்களில் ‘ரோலிங் ஸ்டோனின்’ சிறந்த 500 பாடல்களில் ஒன்றாக அமைந்ததுடன் பிளாட்டினம் மதிப்பையும் பெற்றது. 2001- ல் வெளியான ஜாய் சியின் ‘தி புளூபிரிண்ட்’ ம் மேற்குறிப்பிட்ட 500-ல் ஒன்று.
பிப்ரவரி 2008-ல் முதன்முதலாக இங்கிலாந்து கிளாஸ்டன்பரி விழாவில் ஜாய் சியின் ராப் பாடல் அறிவிக்கப்பட்டவுடன் பெருமளவில் விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில் புராதானமான இங்கிலாந்து கிளாஸ்டன்பரி விழா கிடார் இசைக்கு முக்கியத்துவம் பெற்றது. 2008க்கு முன்வரை எந்த ராப் இசை பாடகரும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டதில்லை.
விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில் ‘ஆமாம். நாங்கள் கிட்டார் இசைப்பதில்லை. ஆனால் ராப் இசையும் முக்கியமான இசை வடிவம்தான்.அதற்கான தேவையும் உள்ளது. நாங்கள் கிட்டார் இசையை மதிப்பது போல நீங்களும் ராப் இசையை மதிப்பது நல்லது’ என்று சுமூகமாக முடித்துக்கொண்டார். அந்த ஆண்டு விழாவில் ஜாய் சியின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
‘நான் தொழிலதிபர் அல்ல. நானேதான் தொழில்.என்னுடைய பெயர்தான் பிராண்ட். என்னுடைய ஒவ்வொரு தொழிலும் என்னைத்தான் வெளிப்படுத்துகிறது. என்னுடைய நீட்சியே அவை. அதனால் எந்த தொழிலிலும் என்னால் வெறுமனே பணத்திற்காக ஈடுபடமுடியாது’ என்று சொல்லும் ஜாய் சி 2006 ல் ‘ரோகொ வேர்’ என்ற நவீன ஆடைகளுக்கான நிறுவனத்தை தொடங்கி பிறகு உள் நாட்டு விற்பனை உரிமையை ஏறக்குறைய 1200 கோடிக்கு ஐக்கானிக்ஸ் பிராண்ட் குரூப்பிற்கு விற்றுள்ளார். ஜாய் சி யின் வருட வருமானம் சுமார் 400 கோடி... போர்ப்ஸ் பத்திரிகை மிகவும் பிரபலமான, சக்திவாய்ந்த 100 மனிதர்களில் 7வது இடத்தை இவருக்கு அளித்தது!
கறுப்பின அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து ராப் இசையின் மூலம் உலக புகழ் பெற்றுள்ள ஜாய் சி ராப் இசை அதற்கான மரியாதையை இன்னும் பெறவில்லை என்றே நினைக்கிறார். இன வெறுப்பை களைவதற்கு எந்த அரசியல் தலைவரையும் விட ராப் இசையின் பங்கு மகத்தானது என்று கருதும் இவர் ராப் இசை வெற்றியை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெற்றியுடன் ஒப்பிடுகிறார். சென்ற தேர்தலில் ஒபாமா அழைப்பின் பேரில் ஒபாமாவிற்காக பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜாய் சி “சிறு வயதில் நான் ஓட்டளிக்க முடியும் என்பதையே நம்பவில்லை. ஆனால் இன்று கறுப்பினத்தில் இருந்து ஜனாதிபதி வர முடிகிறது. எங்களுடைய குரல்கள் வெளியே கேட்கத்தொடங்கி விட்டன” என்று மகிழ்கிறார்.
2008ல் பிரபல பாப் பாடகியான பியான்ஸ் நோவல்ஸை திருமணம் செய்தார். ‘ராப் + பாப்’பின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பல கணக்குகளை ஊடகங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றன. ஜாய் சி தம்பதியர் இதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் அமெரிக்க ஜனாதிபதியுடன் டின்னர், ராப் இசை என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் தன் முதல் ஆல்பத்தை வெளியிட முன்வரவில்லையே என்று ஜாய் சி முடங்கியிருந்தால் இது சாத்தியமாயிருக்குமா?
மே, 2013.