Moneyதர்கள்

கண்ணீரில் நம்பிக்கை இல்லை!

முத்துமாறன்

ஷானியா ட்வெய்ன் கனடா நாட்டைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியை. அவரது பாடல்கள் 8.5 கோடி ரிக்கார்டுகள் விற்று உலகின் அதிக விற்பனை ஆன சாதனை படைத்துள்ளன. இவர் ‘நாட்டுப்புற பாப் இசையின் ராணி’ என்று அழைக்கப்படுகிறார். தற்போது சுவிட்சர்லாந்தில் கணவருடன் வசிக்கும் இவர் ஐந்து கிராமி விருதுகளை வென்றவர்.

மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து உயரத்தை அடைந்தவர் இவர். கனடாவின் ஒண்டாரியாவில் ஓர் ஏழைத்தாயின் ஐந்து பிள்ளைகளில் இரண்டவதாகப் பிறந்தவர் ஷானியா.

சாப்பாட்டுக்கே கஷ்டம். ஆனால் சின்ன வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் அதிகம். இரவுகளில் கிடாருடன் விரல்கள் வலிக்க வலிக்க வாசித்துக் கொண்டே இருப்பார். இவரது இசைத்திறமையைக் கண்ட அம்மா, உள்ளூர் வானொலி நிகழ்ச்சிகளில் வாசிக்க அனுப்பினார். உள்ளூர் பாரில் இரவில் மதுபான விற்பனை முடிந்ததும் பாடும் வாய்ப்பு எட்டு வயதிலிருந்தே கிடைத்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் இச்சிறுமியை நள்ளிரவில் எழுப்பி பாருக்கு அழைத்துவருவார்கள். சாலையோர நிகழ்ச்சிகள், சின்னச்சின்ன விழாக்களில் இசை நிகழ்ச்சிகள் செய்வார். பெரிய அளவுக்கு பணம் கிட்டாவிட்டாலும் பசி போக்க உதவியது.

“வெய்லான், வில்லி, டாமி, டாலி போன்ற பாடகர்களை ரசித்து வளர்ந்தேன் நான். அதே சமயம் உள்ளூரில் மற்றவர்கள் பாடியதையும் ரசித்தேன். எல்லாம் கலந்த கலவையாகத்தான் என் இசைத் திறமை வளர்ந்தது” என்கிறார் ஷானியா.

21 வயதில் இவரது பெற்றோர் வாகனவிபத்தில் மரணம் அடைந்தனர். தன் உடன்பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்ள அவர் ஒரு ரிசார்ட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்தபடியே நாடக மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, நல்ல அனுபவம் பெற்றார்.

மூன்று ஆண்டுகள் கழிந்தன. அவரது உடன்பிறப்புகள் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தவுடன் ஷானியா தன் கனவுகளைத் துரத்த ஆரம்பித்தார்.அவரது இயற்பெயர் எய்லீன். அதை மாற்றி ஷானியா என்று வைத்துக்கொண்டார். இசைத் தட்டுகளை வெளியிட்டார். கனடிய நாட்டுப்புற இசையில் வெளியான இவரது பாடல்கள் ரசிக்கப்பட்டு, செமத்தியாக விற்பனை ஆயின. விற்பனை சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இசைச் சுற்றுப்பயணங்களையும் நிகழ்த்தி மிகச்சிறந்த பாடகியாக உலகெங்கும் புகழ்பெற்றார். ‘கனவுகளைத் துரத்துவதில் கண்ணீருக்கு இடமில்லை’ என்கிறார் ஷானியா.

பண மொழி:

பணம் நல்ல உயர்ந்த இனக்குதிரை போன்றது. சக்திவாய்ந்தது, ஓடிக்கொண்டே இருப்பது. ஆனால் இந்த குதிரையை குட்டியாக இருக்கும்போதே பழக்காவிட்டால் வளர்ந்ததும் ஆபத்தான விலங்காக மாறிவிடும்.

-டேவ் ராம்சே

அக்டோபர், 2015.