Moneyதர்கள்

இந்தப் பையன் என்ன செய்யப் போகிறானோ?

உலகம் உன்னுடையது

Staff Writer

எனக்கு காந்தியைப் பிடிக்கும். அவர் போல எளிமையாக வாழ விரும்புகிறேன். தரையில் தான் படுத்துக்கொள்கிறேன். புத்த மதம் எனக்குப் பிடித்தமானது. பணம் நிறைய இருக்கும்போது பிரச்னைகளும் வந்துவிடும். உதாரணத்துக்கு டிசைனர் ஆடைகள் இல்லாவிட்டால் மன அழுத்தம் ஏற்படும். பயணங்களில் முதல்வகுப்பு பயணச்சீட்டு இல்லாவிட்டால் மன அழுத்தம் ஏற்படும். இப்படி எதுவும் ஏற்படாமல், மிக எளிமையாக வாழ்கிறேன்” என்கிறார் மிக்கி ஜக்தியானி. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். இந்தியாவில் 17-வது பெரிய பணக்காரராக போர்ப்ஸ் சொல்கிறது. துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான லாண்ட்மார்க் குழுமத்தின் அதிபர். 

இந்தியாவில் உள்ள ஏழைகுழந்தைகளின் படிப்புக்காக, மருத்துவத்துக்காக அறக்கட்டளை நடத்துகிறார் ஜக்தியானி. இந்தியாவுக்கு வந்தால் தான் நடத்தும் அனாதை ஆசிரமங்கள் ஒன்றுக்குப் போய் அங்கிருக்கும் சாதாரண வசதிகளுடன் சில நாட்கள் தங்கியிருப்பது அவரது வழக்கம்.

‘’இந்தியாவில் ஏழை பணக்காரர் வித்தியாசம் மிக அதிகம். ஒரு வேளை சாப்பாட்டுக்காக பதினோரு மணி நேரம் சிறுவர்கள் வேலை செய்யும் மும்பை சேரி ஒன்றில் ஒரு பகல் முழுக்க இருந்தேன். ஏன் இந்த வறுமை? ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? அறிய முயற்சி செய்கிறேன்” என்கிற ஜக்தியானி. மிக்கி ஜக்தியானியின் அப்பா இந்தியாவிலிருந்து குவைத் சென்றவர். சின்ன வயதில் ஜக்தியானி ஒழுங்காகப் படிக்கவில்லை. அவரது அப்பா லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்தபோது முறையற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்ததால் படிப்பையும் விட்டார். லண்டனில் சின்ன சின்ன வேலைகள் பார்த்தவர், பின்னர் குவைத்துக்கு தன் அப்பாவிடமே திரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டம் அவரது தந்தை, தாய், அண்ணன் எல்லோருமே ஒரே ஆண்டில் நோயில் மரணமடைந்தனர். அப்பா மரணப் படுக்கையில் இருந்தபோது, ‘மிக்கி என்ன செய்யப்போகிறானோ தெரியவில்லையே.. எப்படி வாழ்க்கையைச் சமாளிப்பானோ?’ என்று புலம்பினார். எல்லோரும் இறந்தபின்னர் தனிமை சூழ்ந்தது.

குடும்பத்தின் சொத்தாக இருந்தது 6000 டாலர்கள். அதை வைத்து சின்ன கடை ஒன்றை வாடகைக்கு எடுத்தார். அதில் ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வைக்க முடிந்தது. அவரே எல்லா வேலையும் செய்தார்.

12 ஆண்டுகள் கழித்து அபார வளர்ச்சி. ஆறு கடைகள், 400 தொழிலாளிகள். தன் குடும்பத்தையும் தொழிலையும் துபாய்க்கு மாற்றினார். அது ஒரு முக்கியமான முடிவு. அங்கே லேண்ட்மார்க் குழுமத்தைத் தொடங்கி மத்திய ஆசியாவில் உள்ள நடுத்தரவர்க்க குடும்பங்களை குறிவைத்தார். நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்திலிருந்து, ஓட்டல் உள்ளிட்ட பிற தொழில்களுக்கும் விரிவுபடுத்தி வெற்றிகண்டார். இந்தியா, சீனா, ஸ்பெயின், வளைகுடா நாடுகளில் சுமார் 800 கடைகளும் 24000 தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.  தலைவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர். அதாவது குத்துமதிப்பாக 30,000 கோடி ரூபாய்!

லாஸ்வேகாசில் உள்ள ஹக்காசன் நைட் கிளப்பில் டீஜே யாக இருப்பவர் கால்வின் ஹாரிஸ். சரி அவருக்கு என்ன ஸ்பெஷல்?

கால்வின் ஹாரிஸ், உலகின் அதிகமாக சம்பாதிக்கும் டீஜே. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகில் அதிகம் சம்பாதிக்கும் பத்து டீஜேக்களின் பட்டியலில் முதல் இடம்பெற்றவர். 125 ஷோக்களில் பங்குபெற்று 66 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். மளிகை பொருட்கள் ஸ்டாக் வைப்பவராகப் பணியாற்றிய கால்வின், இன்றைக்கு இவ்வளவு பெரிய டிஜே ஆவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவரது சம்பாத்தியம் 12 மாதங்களில் 20 மில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறதாம். ரிஹானா, கேஷா உள்ளிட்ட சிறந்த பாப் பாடகிகளுடன் பணியாற்றுவதால் இவருக்கு இருக்கும் இசை அறிவு அவரது வெற்றியை உருவாக்கித் தந்திருக்கிறது.

பணமோழி

கல்வி நிறுவனங்களில் கற்கும் கல்வி வாழ்வதற்கு வழி செய்யும்.

சுயமான கல்வி பெருஞ்செல்வத்தை அளிக்கும்

- ஜிம் ரான்

ஜூலை, 2015.