இது அசாதாரணமானதுதான். ஓர் இலக்கிய அமைப்பு அரை நூற்றாண்டு காலமாகத் தொடச்சியாகச் செயல்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில். 'இலக்கியச் சிந்தனை' அமைப்பு அகவை 50ஐ எட்டியிருக்கிறது.
1970இல் தொடங்கப்பட்டது இலக்கியச் சிந்தனை. ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் நடைபெற்று வந்தன அமைப்பின் மாதந்திரக் கூட்டங்கள். தமிழ் வாசகர்கள் பலருக்கும் கிடைக்கக் கூடிய பருவ இதழ்களிலிருந்து அதற்கு முந்தைய மாதம் வெளியான சிறுகதைகளில் ஒன்றை ஒரு வாசக-விமர்சகர் தேர்ந்தெடுப்பார். அதற்கான காரணங்களையும் கூட்டத்தில் விளக்குவார். ஓர் இலக்கிய உரையும் இருக்கும். ஆரம்பகாலக் கூட்டங்களில் பார்வையாளர்கள் ததும்பி அரங்கிற்கு வெளியேயும் நிற்பார்கள் என்று வண்ணநிலவன் ஒரு முறை குறிப்பிட்டார். ஆண்டிறுதியில் அவ்விதம் தெரிவாகும் பன்னிரண்டு சிறுகதைகளில் ஒன்றை ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுப்பவர் ஒரு தேர்ந்த எழுத்தாளராகவோ திறனாய்வாளராகவோ இருப்பார்.
இந்த 12 கதைகளின் தொகைநூல் சித்திரைத் திருநாளில் சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடக்கும் இலக்கியச் சிந்தனையின் ஆண்டு விழாவில் வெளியிடப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக மாதம் ஒரு சிறுகதை என்பதில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆனால் ஓராண்டில், அச்சிதழ்களில் வெளியான 12 கதைகள் என்பதில் மாற்றமில்லை. மாதந்திரக் கூட்டங்களும் சமீப காலமாக நடப்பதில்லை. ஆயினும் ஆண்டு விழா யாதொரு முடக்கமும் இன்றித் தொடர்கிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தத் தொடரோட்டம் கொரானாவால் தடைப்பட்டது. ஆகவே பொன்விழாவும் ஓராண்டு தள்ளிப்போய், வரும் ஏப்ரல் 14 அன்று நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு விழாக்களில் 12 கதைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த சிறுகதை ஆசிரியருக்குப் பரிசளிக்கப்படும். ஒரு சிறுகதை ஆசிரியருக்குத் தலைநகரின் பிரதான அரங்கொன்றில் கூட்டம் நடத்திக் கொண்டாடுவது என்பது தமிழ்ச் சூழலில் ஆபூர்வமானதுதான். கடந்த 50 ஆண்டுகளில் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகள் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். நீளமான இந்தப் பட்டியலில் இப்போது இணைந்து கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன் (சிற்றிதழ்-2019) பொன்விழாவில் பரிசு பெறுவார்.
இதுகாறும் ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தெரிவு செய்தவர்களில் பலர் அறியப்பட்ட ஆளுமைகள். சுந்தர ராமசாமி (1971), தி. ஜானகிராமன் (1978), அசோகமித்திரன் (1993), இந்திரா பார்த்தசாரதி (1973, 2016), லா.சா.ராமாமிருதம் (1996),
கரிச்சான் குஞ்சு(1982), பி.எஸ்.ராமையா (1979), எம். வி. வெங்கட்ராம் (1984), நீல.பத்மநாபன்(1983), ஆ.மாதவன் (1986), சோ. சிவபாதசுந்தரம் (1987), சுஜாதா (1974), வல்லிக்கண்ணன் (1980), ராஜம் கிருஷ்ணன்(1975), தி. ச. ராஜு (1972), சரஸ்வதி ராம்நாத் (1985), அம்பை(2000), வண்ணதாசன் (2012), சிவசங்கரி (2005,2019) என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
ஆண்டு விழாவில் வெளியிடப்படும் 12 சிறுகதைகள் அடங்கிய தொகை நூலில், சிறந்த சிறுகதையை மதிப்பீடு செய்தவரின் கட்டுரையும் இருக்கும். தமிழ் விமர்சனக் கலையில் இது ஒரு முன்னோடி.
இலக்கியச் சிந்தனையின் இந்தப் பொன்விழா ஆண்டில் தமிழ்ச் சிறுகதை நூறாண்டுகளைக் கடந்து நிற்கிறது. 1919இல் வெளிவந்த வ. வே.சு. ஐயரின் ‘மங்கையற்கரசியின் காதல்‘ என்ற தொகுதியில் இடம் பெற்ற ‘குளத்தங்கரை அரசமரம்‘ என்கிற கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது இலக்கியச் சிந்தனை இதுவரை இயங்கி வந்த காலம், தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் செம்பாகம் ஆகும்.
சிறுகதையைத் தவிர 1976லிருந்து, ஆண்டு விழாவில் சிறந்த நூல் ஒன்றுக்கும் பரிசளித்து வருகிறது இலக்கியச் சிந்தனை. தமிழின் ஆகச் சிறந்த படைப்புகளை அமைப்பு தெரிவு செய்திருக்கிறது. அவற்றுள் சில: விட்டல்ராவின் ‘போக்கிடம்', அசோகமித்திரனின் ‘18வது அட்சக் கோடு', வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்', ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்', கி.ராஜநாரயணனின் ‘பிஞ்சுகள்', பூமணியின் ‘பிறகு', ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்', பாலகுமாரனின் ‘மெர்க்குரிப் பூக்கள்', கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்', ரகுநாதனின் ‘பாரதி-காலமும் கருத்தும்', தி. ஜானகிராமனின் ‘நளபாகம்', கு.சின்னப்ப பாரதியின் ‘சங்கம்', அ.ச. ஞானசம்பந்தனின் ‘பெரிய புராணம்-ஓர் ஆய்வு', சிட்டி- சோ. சிவபாதசுந்தரத்தின் ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்', பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்', தோப்பில் முஹமது மீரானின் ‘துறைமுகம்', சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்', பொன்னீலனின் ‘மறுபக்கம்', வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்', இறையன்புவின் ‘மூளைக்குள் சுற்றுலா'.
இதைத்தவிர 1987 முதல் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் படைப்புகளை எடுத்துக்கொண்டு, அவற்றை நெருங்கி வாசித்த எழுத்தாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து, அந்த மதிப்பீட்டு நூல்களையும் ஆண்டு விழாக்களில் வெளியிட்டு வருகிறது. விமர்சனமும் மதிப்பீடும் அருகியிருக்கும் சூழலில் இந்த நூல்கள் தமிழ் இலக்கியத்திற்கு அணியாக விளங்குகின்றன. இதுகாறும் மதிப்பீடு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்: கு.அழகிரிசாமி (மதிப்பீடு செய்தவர்: என்.ஆர்.தாசன்), ந. சிதம்பர சுப்பிரமணியன் (மாலன்), கு.ப.ரா (கரிச்சான் குஞ்சு), ந.பிச்சமூர்த்தி (சுந்தர ராமசாமி), மௌனி (திலீப்குமார்), வ.ரா (மாணிக்கவாசகன்), எஸ்.வி.வி. (வாஸந்தி), சுத்தானந்த பாரதி (உ.ஸ்ரீநிவாசராகவன்), தூரன் (ரா.கி.ரங்கராஜன்), த.நா.குமாரஸ்வாமி (முகுந்தன்), க. நா.சு (கி.அ. சச்சிதானந்தன்), சூடாமணி (கே.பாரதி) முதலானோர்.
இவை தவிர, கடந்த 15 ஆண்டுகளாக தமிழுக்குப் பெருமை சேர்த்த ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வருகிறது இலக்கியச் சிந்தனை. இந்த விருதை முதலில் பெற்று விருதுக்குப் பெருமை சேர்த்தவர் ஜெயகாந்தன். தொடர்ந்து ஏ.வி.சுப்ரமணியன், நீல.பத்மநாபன், வாலி, கு.சின்னப்ப பாரதி, கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், அ.அறிவொளி, இந்திரா பார்த்தசாரதி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, கி.கஸ்தூரி ரங்கன், அசோகமித்திரன், அவ்வை நடராசன் முதலானோர் இந்த விருதைப் பெற்றவர்கள்.
1970இல் ப.லெட்சுமணன்- ப.சிதம்பரம் சகோதரர்களால் தொடங்கப்பட்ட இலக்கியச் சிந்தனையின் இப்போதைய அறங்காவலர்கள் ப.லெட்சுமணன், பாரதி, சுப்பிரமணியம் ஆகியோர். தமிழின் சிறந்த சிறுகதைகளையும் சிறந்த நூல்களையும், சிறந்த படைப்பாளிகளையும் கொண்டாடி வரும் இலக்கியச் சிந்தனையின் ஓட்டம் தொடரட்டும்!
( மு. இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)
ஏப்ரல், 2021