இலக்கியம்

பாமரனுக்கு இது புரியாமல் போயிற்றே...

வண்ணநிலவன்

ஆழம் என்ற பத்திரிகையில் தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் இலக்கியத்துக்காக எதுவும்  செய்யவில்லை என்பதை விவரித்து நான் எழுதிய கட்டுரையை முன்வைத்து ‘ அந்திமழையின் சென்ற இதழிலும், அதற்கு முந்தைய இதழிலும் , மறுப்பு என்ற பேரில் எதை எதையோ உளறிக் கொட்டியிருக்கிறார் பாமரன். எனது ஆழம் கட்டுரை திராவிட இயக்கங்களில் இலக்கிய ரீதியாக யாரும் எதையும் எழுதவில்லை என்பதையும் , அதற்கான வலுவான காரணங்களையும் நிறுவியிருந்தேன். அதற்கு பாமரன் மறுப்பு தெரிவிக்காமல் , அக்கட்டுரையின் உபரித் தகவல்களை இழுத்து வைத்துகொண்டு என் மீதும், அந்தகட்டுரை மீதும் புழுதி வாரி கொட்டியுள்ளார்.

‘...சாதிக்கொரு நீதி வைத்து மக்களை கூறு போட்ட மனு(அ)தர்மத்தை உருவாக்கியவன் எந்த ஆங்கிலேயன்’ என்று நான் மனு தர்மத்தைப் பற்றி எழுதாததை நான் எழுதியதாக இவராகவே கற்பனை செய்து கொண்டு எழுதியிருக்கிறார் பாமரன். பாமரனின் கற்பனை வளம் கட்டுரை எங்கும் வழிந்தோடுகிறது. பாமரனுக்கு இது புரியாமல் போயிற்றே.

அடுத்த கற்பனை, பதினெண்சித்தர்கள் பறத்தியாவது ஏதடா பணத்தியாவதேதடா ‘  என்பது.  எனது கட்டுரையில் எந்த இடத்திலும் ஜாதியிலுள்ள ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி எழுதவில்லை . நான் உயர் ஜாதி வெறியனோ, அல்லது இவர் மனதுக்குள் கற்பனை செய்திருப்பதுபோல் ஆரிய அடிவருடியோ அல்ல. எனது ஆழம் கட்டுரை திராவிட இயக்கங்களின் தொடக்கம் இலக்கியத்தில் அவர்களது பங்களிப்பு ஏன் இல்லை என்பதைபற்றித்தான். பாமரனுக்கு இது புரியாமல் போயிற்றே.

பிராமணாள் ஹோட்டல்கள், கோவில் கர்ப்ப கிரகங்களில் இதர ஜாதியினர் நுழையத் தடையிருப்பது, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று நான் எனது கட்டுரையில் எழுதாத விஷயங்களை எல்லாம் நான் எழுதியது போல் பாவித்துக் கொண்டு என்னை நோக்கி கேள்விகள் எழுப்புகிறது பாமரனின் அதீத கற்பனை மனம்.

நீதிக்கட்சியின் கொள்கைகளை பெரியார் சுவீகரித்துக் கொண்டார் என்று நான் எழுதியது உண்மையில்லை என்றால், தாழ்த்தப் பட்டவர்களை ஹரியின் மக்கள் என்று கருதி, ஹரிஜன முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பெரியார் சுவீகரித்துக் கொண்டார் என்கிறாரா பாமரன்? ‘வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்’ என்ற விஷயத்தை முதல் முதலில் கருது கோளாக கொண்டது நீதிக்கட்சிதான் . பெரியார் நீதிக்கட்சியில் இல்லை. அப்போது பெரியார் காங்கிரஸில் தான் இருந்தார். இதைதான் நான் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன். 1944ல் திராவிடர் கழகத்தை பெரியார் ஆரம்பித்தாலும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்கள், நீதிக்கட்சியிடமிருந்து பெரியார் சுவீகரித்து கொண்டதுதான்.  இது பாமரனுக்கு புரியாமல் போயிற்றே.

எனது கட்டுரையில் நான் முன்வைக்காத பல விஷயங்களை தனிக்கட்டுரையாக பாமரன் எழுதட்டும்,. அது பற்றி ஆட்சேபிக்க ஏதுமில்லை. ஆனால் நான் எழுதாத விஷயங்களை நான் எழுதியதாக கற்பனை செய்து கொண்டு அருள் வாக்கு - 1, அருள்வாக்கு -2 என்றெல்லாம் கேலி செய்து எழுதுவது என்ன நியாயம்! மேலும் நான் கட்டுரையில் முன்வைத்த திராவிட இயக்கங்கள் (கட்சிகளை தமிழ்நாட்டில் இயக்கம் என்று தானே சொல்கிறோம், இது ஒரு தவறா பாமரன்?) இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை, ஏன் செய்ய முடியவில்லை என்பதை எல்லாம் விவரித்துள்ளேன் . இதற்கு பாமரனின் கற்பனை மனம் எந்த பதிலும் கூற வில்லை, கற்பனைகளை விட்டு கீழே இறங்கி வாரும் பாமரரே..

நவம்பர், 2013