இலக்கியம்

நகுலம்

இரா.முருகன்

எழுத்தாளர் நகுலனோடு பழகிய தன் அனுபவங்களை நகுலம் என்ற பெயரில் நீள்கவிதையாக எழுதியிருக்கிறார், இன்னொரு மூத்த எழுத்தாளரான நீல.பத்மநாபன். பத்மநாபனுக்குக் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தவர் நகுலன்.  அவர் இருந்தால், இப்போது நூறு வயது. நகுலனின் நூற்றாண்டைக் கொண்டாடும் கவிதை நகுலம், அதே பெயரில் நூலாகக் காலம் கடக்கிறது. 

தனக்கும் நகுலனுக்குமான மூன்று தசாப்தம் நீண்ட தோழமையை உரைநடையில் சொல்வது, சித்திரை வெய்யில் நடுப்பகல் நேரத்தில் த்ரீ பீஸ் சூட் அணிந்து மின்விசிறி பழுதான அறையில் உட்கார்ந்தது போல் அசௌகர்யமாக உணர்ந்தோ என்னவோ, நாலு முழ வேட்டி பனியன் கோலமான சௌகர்யம் தரும் கவிதைக்கு மாற்றிக் கொண்டு நகுலத்தை நீண்ட கவிதையாக்குகிறார் நீல.பத்மநாபன். நினைவின், மொழியின் கரைகள் துல்லியமாக வரையறுக்கப்படாது, வாசகரும் இடைகலந்து வாழ்வனுபவத்தில் ஆழ இடம் கொடுக்கும் வசதியான ஊடகம் இது.

அடர்த்தியும், நெகிழ்ச்சியும், நீளமும், குறுக்கமும் உடையதாகவும்,  நனவிடைத் தோய்வதாகவும், நிகழ்வைச் சித்தரிப்பதாகவும் நினைத்தபடி படைப்பு உருவாக்கம் செய்ய கவிதை அவருக்கு இயல்பாகக் கைவருகிறது. கவிதையில் நாவலும், சிறுகதையில் கவிதையும் இயல்பாகக் கடந்துவரும் நேர்த்தியான எழுத்து அவருடையது.

நகுலம், நகுலனை அறியத் தருகிறது என்பது ஒரு Under Statement. நகுலனைச் சுற்றி இருந்த அவர் குடும்பத்தை, அவர் நண்பர்களை, அவருக்குப் பணிவிடை செய்வதையே முழுநேரக் கடமையாக வரிந்து கொண்ட உதவியாளர் புறுத்தையை, நகுலம் எழுதிய நீல பத்மநாபனை என்று நகுலனோடு சம்பந்தப்பட்ட சகலரையும் பற்றி அறியத் தருகிறது நகுலம். 

‘சொல்லியும் சொல்லாமலும் வாசகனின் கற்பனைக்கு இடம் கொடுக்கும் வசதிக்காகத்தான் கவிதை' என்று முன்னுரையில் சொல்கிறார் நீல.பத்மநாபன். வாசகனின் கற்பனையில், நீல பத்மநாபன் கவிதைக்குள் இடைவரி வெளியில் நகுலனின் அப்பா உத்தியோகத்துக்குப் போகிற பிள்ளையை மதிக்கிறவராக எழுந்து வருகிறார். அவருடைய இரண்டாம் மகன் பெரிய தொழில் நிறுவனத்தில் எழுத்தர் உத்தியோகம் பார்க்கிறதைப் பெருமையோடு பகிர்ந்து கொள்வது கேரளா ஸ்டேட் எலக்ட்ரிசிட்டி போர்டில் எஞ்சினியராக உத்தியோகம் பார்க்கும் நீல. பத்மநாபனோடு. நீல.பத்மநாபன் சந்திக்க வந்த நகுலன் துரைசாமி என்ற தம் மூத்த மகன்மேல் அவருக்கு அப்படியான மதிப்பும் மரியாதையும் இருப்பதாகத் தெரியவில்லை.

நகுலன் குடும்பம் பற்றிய சிறு சித்திரிப்பு இது- நகுலன் அம்மா தள்ளாமையின் அடையாளங்களுடன் காணப்பட்டாலும் முகத்தில் ஐசுவர்யம். அப்பா உள்ளுக்கும் வெளித்திண்ணைக்குமாக நடந்து கொண்டே இருப்பார் வேலை இலக்ட்ரிஸிற்றி போர்டில் தானே இப்படி ஏதாவது கேட்கத் தொடங்கும் முன்பே ஆமாமுன்னு எத்தனை தடவை அவர் சொல்லிவிட்டார் என்று இடைமறித்துச் சொல்வார் நகுலன்.

ஸ்கூட்டர் பக்கம் போக இவன் இறங்கும்போது பார்த்துப் போங்க ஏதாவது கிடக்கும் என்று எச்சரித்தபடி வெளிவராந்தாவில் வந்து நின்றுகொண்டு டார்ச் ஒளிபாய்ச்சும் நகுலன்.

உள்ளிருந்து வரந்தாவுக்கு வந்த நாராயணன் (நகுலன் தம்பி கேட்பார்) புதிதாக எலக்ட்ரிக் கனெக்‌ஷன் கிடைக்க கஷ்டம் ஒன்றும் இல்லையே? இதற்கு முன்னாடியும் இவனிடம் இதைக் கேட்டிருக்கிறார் கஷ்டமொண்ணும் இல்லை முன்பு சொன்ன பதிலையே இப்போதும் சொன்னான். (தனிக் குடித்தனம் போக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் அவர்)

பிரமிள் இறுதிக் காலத்தில் அவரிடம் பரிவு காட்டிப் பணிவிடை செய்ய எங்கிருந்தோ வந்த இளைஞன் போல, நகுலனுடைய கடைசிக் காலத்தில் அவரிடம் எதுவும் எதிர்பார்க்காமல் பரிவும் அன்பும் ஆதரவும் தர எங்கிருந்தோ வந்து சேர்ந்த புறுத்தை நகுலம் கவிதையில் மனதைப் பிடிக்கிறார். அவருக்குச் சொந்தப் பெயர் என்ன என்பதையோ, யாரெவர் என்பதையோ பற்றி ஆராய்ச்சி செய்ய, தேடியடைய தேவை இன்றி புறுத்தை என்று நகுலனோ வேறு யாரோ அவருக்குச் சூட்டிய பெயரோடு வலம் வந்த புறுத்தையின் உண்மைப் பெயர் கோமதி என்று தெரியவரும்போது நகுலனின் புலன்கள் அடங்கிக் கொண்டிருந்தன.

உரைநடையில் இரண்டு பக்கமாவது நடக்கும் இந்த நிகழ்வுகளை பத்திருபது வரிகளில் இறுக்கமும் சுருக்கமும் நெகிழ்ச்சியுமான கவிதையாகத் தருகிறார் நீல.பத்மநாபன்.

நகுலன் என்று ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்று நகுலனை விசாரிக்கிறார். அவர் கெக்கே என நகைத்து, ஏன் இது நல்ல பெயர் இல்லையா என்று கேட்கிறார். நல்ல பெயர்தான், இருந்தாலும்...

சகுனியிடம் சாத்திரங்கள் கற்று, பாண்டவர்களில் பின் வரிசையில் இருந்த நகுலனும் சகாதேவனும் இல்லாமல் மகாபாரதம் ஏது?

நகுலன், நீல பத்மநாபன் இருவருக்கும் நல்ல நண்பரான இன்னொரு கவிஞர் ஷண்முக சுப்பையாவின் கவிதையின் நடுவில் இருந்து பகர்த்தியது இது -

அணைக்க ஒரு அன்பில்லாத மனைவி,

அன்பு செலுத்த நோய் பாதித்த இரு குழந்தைகள்,

இருக்க ஒரு சௌகரியமில்லாத வீடு,

பார்க்க ஒரு திருப்தி தராத உத்யோகம்

என்றாலும் இந்த வாழ்க்கை சலிக்கவில்லை

என்று வரும் கவிதைத் துண்டில் கடைசி வரியில் கவிஞர் தம் வாழ்வில், உலகில் வைத்திருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கிறார். நீல.பத்மநாபனும் தான். நகுலனுக்குக் கிடைக்காத குடும்ப வாழ்க்கையின் பிரியமும், எரிச்சலும், இன்பமும், துயரமுமான கணங்களின் தொகுப்பு இது. 

பெயர் குறித்த நண்பர்களில் மற்றும் ஒருவர் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.

நம்பிக்கு நல்ல மனோபலம்தான்

ஒருகாலை ஆம்ப்யூடேட் பண்ணின பிறகும்

அது பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதாய்க் காட்டிக் கொள்வதில்லை

நட்பு கனிந்து நகுலனும் நீல பத்மநாபனும் சில தடவை ஷண்முக சுப்பையாவோடு நாகர்கோவிலுக்கு சுந்தரராமசாமி வீட்டுக்குப் பயணம் வைக்கிறார்கள். இலக்கிய விவாதம். வாதப் பிரதிவாதங்கள். வாசகர்களின் ரசனையை மழுங்கடிக்கும் வியாபாரப் பத்திரிகைகள் பதிப்பகங்கள் பற்றிய தார்மீகக் கோப வெளியிடல்கள் என்று நேரம் ஆழ்ந்த உரையாடலில் கழியும்.

கவிதையில் சந்தம் போன்ற கட்டுமானங்களைத் தவிர்த்து விடுகிறார் நீல பத்மநாபன். இது நகுலன் கவிதை பாணியும் ஆகும் என்பது கவனிக்க வேண்டியது.

உள்ளூர் தமிழ்ப் பத்திரிகை வஞ்சிநாட்டில்

நகுலன் கவிதை

அச்சுதா என்றால் என் குச்சுநாய் ஓடிவரும்

அப்படீன்னு தொடங்கும் சாரின் கவிதை

வாசித்தேன் இதற்கு சட்டென்று நகுலன் பதில் சொன்னது&

இந்த மாதிரி ஓசை நயமுள்ள கவிதைகள்

நான் இப்போதெல்லாம் எழுதுவதில்லை...

இன்றைய பரபரப்பான சூழலுக்கு வேறுபட்ட 1950களின் சூழல், நகுலம் கவிதையில் அடர்த்தியான பின்புலமாக இழைந்து வருகிறது இப்படி-

//

வரிசையான கடைகளின் நடுவில் ஒரு பெட்டிக்கடை அங்கே நின்று வெற்றிலை பாக்கு போட்டுவிட்டு வரும் நகுலன்

//

சுந்தர் ராமசாமி வந்திருக்கார் காரிலிருக்கார்

காரை எங்கே போடலாம்னு கேட்கறார்

எதிர்ப் பக்கமிருக்கும் அக்ரஹாரத்தில் போடலாமே

//

மங்கலான மின்விளக்கொளியில்

நேரம் போவது தெரியாமல்

சுவாரசியமான இலக்கிய சர்ச்சை

கூடவே கொஞ்சம் பரதூஷணை

முடித்துக் கொண்டு வெளியே இறங்கும்போது

இருட்டில் கிடக்கும் காடுபிடித்த சற்று நீண்ட முற்றம்.

//

மணி ஒம்பதாகி விட்டது நம் ரெண்டு பேர்க்கும்

சைக்கிள் சவாரி செய்து வீடு போய்ச்சேர

ஒரு மணி நேரமாவது வேணும்

//

கவடியார், கோல்ட் லிங்க்ஸ் வீடு என்ற விலா

சத்தில் அமைந்த நகுலனின் இல்லத்தில் அவரைச் சந்திக்க நண்பர்கள் வருகிறார்கள். எல்லோரும்

சாத்வீகமாக நீல.பத்மநாபன் போல் சிறிய ஓமப்பொடிப் பொட்டலத்தோடு வருவார்களா என்ன? நகுலனுக்கு குடி விருப்பம் என்ற நொண்டிச்சாக்கோடு தன் சொந்த விருப்பத்தையும் தீர்த்துக் கொள்ள மது போத்தலோடு வந்து நிற்கிறார்கள் அதில் சிலர்.

புறுத்தை சொல்கிறாள் - நேற்று வந்தவர் அடிக்கடி வருகிறவர் தான் அவருடன் பாட்டில் தீர்கிறவரை பேசிக் கொண்டிருந்தார்

இவர் வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டார் கழுவி விட்டுக் கழுவி விட்டுக் கையெல்லாம் வலிக்குது.

படைப்பாளிகளுக்கு இடையேயான ஓர் இலக்கியப் பாலம் நகுலன் என்கிறார் நீல.பத்மநாபன். ஷண்முகசுப்பையாவும் நகுலனும் சைக்கிளில் நண்பர்களை சந்திக்க சென்றதெல்லாம் பாலம் போட்டதின் பகுதிதான்.

மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கர், விமர்சகர் ரவிகுமார் ஆகியோருக்குத் தமிழ் இலக்கியத்தோடு தீர்க்கமான நிகழ்காலப் பரிச்சயம் ஏற்பட இந்தப் பாலம்தான் காரணம்.

நல்ல நண்பர் தகுதிக்குரிய புறுத்தை ஒரு கோட்டோவியமாக நகுலத்தில் எழுகிறாள்.

(ஷண்முக சுப்பையா சொன்னது)

வீட்டிலே துணைக்கு புறுத்தை இருப்பதற்கு

இவர் புண்ணியம் செய்திருக்கணும்

நம்ம வாழ்க்கைத் துணைகள் கூட இந்த அளவுக்கு

உதவுவார்கள் என்று தோன்றலை.

நோய் மூர்க்கமாகத் தாக்க, நகுலனுக்குத் தன்னை, சூழ்ந்தவரை யார் என்று தெரியாமல் போகிறது. பிரக்ஞை வெளியில் வெற்றிடமெழப் பேந்தப் பேந்த முழிக்கிற அவரைச் சந்திக்கச் சென்று பழகாமல் இருப்பதே பேரன்பைக் காட்டும் செயலாகச் சித்திரிக்கிறார் நீள்கவிதையில்.

நோயுற்ற நகுலனின் அந்தம் நெருங்குகிறது. அவருடைய மரணத் தருவாயில் சந்திக்க மனதைத் திடப்படுத்திக்கொண்டு நீல.பத்மநாபன் மருத்துவமனைக்குப் போகிறார். ‘நீல.பத்மநாபன் வந்திருக்கார்'. படுத்திருக்கும் நகுலனிடம் யாரோ சொல்கிறார்கள். நாற்காலியைப் பிரித்துப் போட அமர்கிறார் நீல.ப. பாதி கவிந்த கண்களோடு வெறித்தபடி நகுலன் நீல பத்மநாபனின் கையைப் பிடித்துக் கொண்டு துயரத்தைச் சொல்லும் அவர் விழிகளை நோக்குகிறார்.

இதை உரைநடையாக எவ்வளவு எழுதினாலும் திருப்தி வராது. ஆனால் அந்த இறுக்கத்தையும், நெகிழ்ச்சியையும், வார்த்தைகள் நடுவில் வராத மௌனமான உரையாடலையும் பத்து வரிகளில் கவிதை எடுத்துச் சொல்லி நிலைக்கிறது. ஹென்றி கார்ட்டியர் பிரஸ்ஸனின் புகைப்படமா ரெம்ப்ராண்டின் ஓவியமா என்று கேட்டால் பக்குவமடைந்து வரும் மனம் பிரஸ்ஸனைத் தேர்ந்தெடுக்கும். நுண்கலைகளிலும் இலக்கியத்திலும் ஊறிய மனம் ரெம்ப்ராண்டின் ஓவியத்தைத் தேர்ந்தெடுப்பது இயல்பானதல்லவோ.

நீல.பத்மநாபன் எழுதிய மலையாளக் கட்டுரை ‘நகுலன் டி கே துரைஸ்வாமி', ரவிகுமார் எழுதிய நனவிடைத் தோயும் ‘ஓர்மயுடெ வழி' மலையாளக் கட்டுரை ஆகியவை தமிழிலும் மொழிபெயர்த்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் நூலில் மலையாள மொழிக் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது ஒரு புதுமைதான்.

தம் கவி நண்பர் ஷண்முக சுப்பையா பற்றி நகுலனும், நீல.பத்மநாபனும் உரையாடியது எழுத்து வடிவமாக இடம் பெற்ற இந்நூலில் நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் பற்றி நீல.பத்மநாபன் எழுதிய சுருக்கமான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. நீல.பத்மநாபனோடு நகுலன் நடத்திய நேர்முகமும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.

மலையாளத்தில். அதிகம் பேசப்பட்ட ஐயப்ப பணிக்கரின் நெடுங்கவிதை குருக்‌ஷேத்ரம். தமிழிலும் ஒரு குருக்‌ஷேத்ரம் வெளிவந்தது. அந்தத் தமிழ் குருக்‌ஷேத்ரம் நகுலன் தொகுத்த,  புதுக் குரல்களின் கவிதை இலக்கியத் தொகுப்பு. அந்நூலின் பின் அட்டையில் நகுலன் சொல்கிறார் // ஒவ்வொரு புதுக்குரலும் ஒரு எதிர்க் குரலாகவே

தொடக்கம் எய்தி இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறது.ஒரு புதுக்குரல் வெறும் எதிரொலியாக மாறுகிறபோது அதன் அடிப்படை ஆற்றல் வீழ்ச்சி ஆரம்பமாகிறது.// புதுக்குரல்கள் - குருக்‌ஷேத்ரத்தில் இருந்து கடந்து வந்த, எந்தக் காலத்துக்கும், சமூக, கலாத்சார, இலக்கியச் சூழலுக்கும் பொருத்தமான வரிகளை நகுலம் வாசகர் சிந்தையில் விதைத்துப் போகிறது.

நூல்: நகுலம் (நீள் கவிதை) ஆசிரியர் நீல பத்மநாபன், விருட்சம் சென்னை வெளியீடு, விலை ரூ.100, அலைபேசி 9444113205

ஏப்ரல், 2022