இலக்கியம்

‘சிலிர்ப்பு’ எங்கள் ஊரில் எழுதிய கதை!

ராவ்

சலங்கை ஒலி போல் காவிரியின் சலசலப்பு காதில் விழும். அறுவடை காலத்தில், நெல் மணம் காற்றில் தவழ்ந்து வரும். அழகான குத்தாலம் கிராமத்தில் சன்னதி தெருவில் நடுநாயகமாக இருந்தது எங்கள் வீடு!

அன்று என்னவாயிற்று என்று புரியாதவிதத்தில், பொழுது விடிந்தபோது சன்னதி தெருவில் ஒரே கூப்பாடு! அதுவும் அந்தத் தெருவை ஆட்டிப்படைத்த மிராசுதார்!  பயந்தவாறே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தோம்! எதிர்புறத்தில் வேளாளர் தெருவுக்கு போகும் குறுக்கு சந்தை ஒட்டி இருந்த பெரிய தோட்டத்தில் குன்று போல் குவிந்து இருந்த வைக்கோல் போர் பற்றி எரிந்து கொண்டிருந்தது! அது மிராசுதாருக்குச் சொந்தமானது!  தீ வைத்தது யார் என்று ஒரே கூச்சல், குழப்பம்! கையில் தார்க்குச்சியுடன் கட்டுக்குடுமி அவிழ,  மிராசுதார் குதித்துக் கொண்டிருந்தார்.  அதேநேரம் எதிர் வீட்டு வாசலில் இரண்டு மாட்டு வண்டிகள் வந்து நிற்க அதிலிருந்து பெரியவர் ஒருவர், குழந்தைகள் இருவர், பெண்கள் இருவர் இறங்கினர். அடுத்த மாட்டு வண்டியில் இருந்து கம்பீரமாக கண்ணாடி அணிந்த இளம் வயதுக்காரர் கிட்டத்தட்ட என் அண்ணா ஜாடையில் இறங்கினார்.

என்ன கூச்சல் என்று அவர் தெரு நடுவே நின்று நடப்பதை சற்று நேரம் பார்த்தார். பின் உள்ளே போய்விட்டார்! அவரையே பார்த்தவாறு இருந்த மிராசுதார் கப்சிப் ஆகி விட்டார்!

அன்று மாலை அவர் ஒரு சிறு பையன் உடன் வெளியே வந்தார். கோவில் கோபுரத்தை கும்பிட்டு எதிர்ப்புறம் நடந்தார்.  என் அண்ணன் ஓடிப்போய் அவரை நெருங்கி கண்கள் அகல விரியப் பேசினார்.

 ‘அவர்தான் எழுத்தாளர் தி. ஜானகிராமன்.  கலைமகளில் அவரது கதை வந்திருக்கிறது!' என்று என் அக்காவிடம் அண்ணா கூறினார். அந்த சிறுவன் சாகேத ராமன் என்னுடன் விளையாட வந்து தயங்கி நின்றான்.

ஏதோ விடுமுறை நாட்கள்.

நான் படித்த போர்டு ஹைஸ்கூல் பிரமாண்டமான பள்ளியாக அந்த சிறு வயதில் எனக்கு காட்சி அளித் தது. பின்னால் காவிரி ஓடுகிறது.  ஸ்கூல் திறந்து பிரேயர் ஆரம்பம்!

‘சொல்லடி சிவசக்தி' என்று ஒரு கம்பீரமான குரலில் பாடல், வழக்கத்துக்கு மாறாக! எதிர் வீட்டுக்கு வந்த நபர் பாடினார்!

 ஜானகிராமன் எங்கள் பள்ளிக்கே ஆசிரியராக வந்தார்; ஆனால் என் வகுப்புக்கு அல்ல.  பிரேயரில் பாரதி பாடல் அன்றுதான் முதல்முறையாக முழங்கியது! அவர் வந்த பிறகு பள்ளிக்கு  சிறப்பு விருந்தாளிகள் வந்தனர்.  பாரதி விழா, ஆண்டுவிழா எதுவானாலும் எழுத்தாளர்கள் வருவார்கள் பிரேயரின்போது அந்த விருந்தாளிகள் பற்றி அறிமுக உரை நிகழ்த்துவார்! மிமிக்ரி செய்வதில் அன்று புகழ்பெற்றிருந்த ராமசாமி அய்யர் நிகழ்ச்சியை அவர்தான் பள்ளியில் நடத்திக் காட்டினார்.

 ஒரு நாள் என் வீட்டிற்கு தி.ஜா. விஜயம்.  அது பெரிய வீடு தான், விஸ்தாரமான முற்றத்தைச் சுற்றி பெரிய தஞ்சாவூர் பாணி படங்கள்! பரவசத்துடன் பார்த்துக் கொண்டு வந்தார்!  இறந்து போன எங்கள் காவேரி அத்தை படம் முன்பாக ஒரு நிமிடம் நின்று அவரைப் பற்றி விசாரித்தார். ராமர் பட்டாபிஷேக படம் வந்தது! அது முற்றிலும் வித்தியாசமான படம்.  ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்ட தேவர்கள், ரிஷிகள் என்று ஏகப்பட்ட பேர் சுற்றி இருப்பார்கள். ‘ இந்த ஓவியம் தியாகராஜ சாஸ்திரியார் சொன்னவாறு வரைந்தது' என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

‘இவர் யார் தெரியுமா? இவர் தான் என் தந்தை'' என்று கூறினார். ஆம். அவர் தந்தை சமஸ்கிருத அறிஞர்!

தி.ஜா. அடிக்கடி கிராமத்தை வலம் வருவதைப் பார்த்து இருக்கிறேன்.  ஒரு முறை எங்கள் வீட்டு தோட்டத்தில் காய்த்த பாடவரங்காய் கொடுக்கச் சென்றபோது, ஒரு சிறுகதையைக் கொடுத்து,

‘‘ இதை உன் அண்ணாவிடம் கொடுத்து படிக்கச்

சொல்! போஸ்ட் பண்ண சொல்!''  என்றார்.  அதுதான் சிலிர்ப்பு என்ற அற்புதமான கதை. கலைமகளில் பிறகு வந்தது.

எங்கள் ஊரில் அவர் கதைகளுக்கான களமும் கருவும் நிறைய கிடைத்தன என்று இப்போது எனக்கு தோன்றுகிறது! எங்கள் தெரு அருகே இருந்த சீனா கடை ஒரு கதையில் இடம் பெற்றது!

 என் அக்காவின் திருமணத்திற்கு தி.ஜா.வுடன் ஆர்வி, கரிச்சான் குஞ்சு, சிட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் அவர்களுக்கு கல்யாண வீட்டிலிருந்து டிபன், காபி,  துளிர் வெற்றிலை எடுத்துச் சென்றதும் அவர்கள் பேசுவதை நின்று கேட்டதும் நினைவு இருக்கிறது! அப்போது ஆர்வி,  'கண்ணன்' பத்திரிகை ஆசிரியர் என்பதாலோ என்னவோ என்னைக் கவர்ந்தார்.

சன்னதி தெரு பின்பக்கமாக அமைந்திருந்தது

சர்வமானிய அக்ரஹாரம். காவிரிக் கரை ஓரமாக நீண்ட தெரு! சர்வமானிய அக்ரஹாரம் பற்றி அவர்களிடம் தி.ஜா.

பேசிக் கொண்டிருந்தார்! அந்தப் பகுதி வேத அறிஞராக இருந்த ஒரு ராயருக்கு மராத்தி மன்னர்களால் மானியமாக வழங்கப்பட்டது! பரம்பரையாக வந்த இடம் அவர்கள் கைவிட்டுப் போய்விட்டது பற்றி நாவலே எழுதலாம் என்று ஒருவர் கூறினார்!  நிறைய கிளைக்கதைகள் கிடைக்கும் என்றார் தி.ஜா.!

சர்வமானிய அக்ரஹாரத்தில் ஒரு வீட்டை நான் சின்ன வயதில் கடந்து போகும்போது ‘ சுந்தரத்தே தியான' என்ற மராத்தி  ‘அபங்க்' மயங்க வைக்கும்! ஆனால் பாடுவது யாரென்றே கண்டதில்லை!

 இளைஞனாக தி.ஜா.வின் மோகமுள் படித்தபோது அந்த ‘அபங்க்' என் காதில் ஒலித்தது.

குத்தாலத்தில் அவர் இருந்தபோது சிறுவர்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி உண்டு! எங்கள் தெருவில் பூம்பூம் மாட்டுக்காரர், குடுகுடுப்பைக்காரர், தொம்பங் கூத்தாடி போன்றவர்கள் வர மிராசுதார் அனுமதிக்கமாட்டார். ஒருமுறை எங்கள் தெருவுக்கு தொம்பங்கூத்தாடி வந்து மேளத்தைத் தட்ட மிராசுதார் விரட்டினார்.

 ‘அவரை விடுங்கள் போகட்டும்' என்றார் எதிர்வீட்டு தி.ஜா.

‘என் தூக்கம் கெடுகிறது' என்று கத்தினார் மிராசுதார்.

 ‘அவர் பிழைப்பு கெடுகிறது! அது மகா பாவம்!' என்றார் தி.ஜா.

மிராசுதார் உள்ளே போய்விட்டார். சிறுவர்கள் கை தட்ட தொம்பங்கூத்தாடியின் வேடிக்கை நடந்தது! அன்றிலிருந்து எங்கள் தெருவுக்கும் விடுதலை கிடைத்தது.

விகடனில் சேர்ந்தபோது, அவர்  ‘உயிர்த்தேன்' நாவல் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் முதல் முறையாக பத்திரிகையாளனாக அவரைப் பார்த்தேன்.

‘‘சம்பளம் பத்தறதா? கடைசிவரை இதே தொழிலில் தான் இருக்கப் போகிறாயா?'' என்றார்.

(ராவ், மூத்த பத்திரிகையாளர்)

அக்டோபர், 2020.