இலக்கியம்

உண்மையைத் தேடி

மதிமலர்

தமிழகச் சூழலில் இலக்கியத்துக் கான சாகித்ய அகாடமி விருதுகள் எப்போதும் உற்றுக் கவனிக்கப்படுபவை. இந்த ஆண்டுக் கான விருது எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்பட்டபோது அது வரவேற்கப்பட்டது. அதே சமயம் அவர் தன்னை திராவிட எழுத்தாளராக முன்நிறுத்திக்கொண்டது உயர்த்திய புருவங்களுடன் நவீன இலக்கியச் சூழலில் பார்க்கப்பட்டது. சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மக்களின் கதையை அப்படியே பூச்சுகள் இன்றி இயல்புவாதக் கதைகளாக முன் வைப்பது இமையத்தின் எழுத்துப்பாணி. சிறுகதையோ நாவலோ அதில் இடம் பெறும் பாத்திரங்களே அதை நிகழ்த்திச் செல்வார்கள்.

‘‘விருது பெற்றிருக்கும் செல்லாத பணம் நாவலையே எடுத்துக்கொள்ளுங்கள். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய ஒரு விஷயத்தை  அவர் எடுக்கிறார். அதை எந்த சார்பும் இல்லாமல் அதனுடைய உண்மையை நோக்கிப் போகிற எத்தனத்தைத் தான் அவர் செய்கிறார். அதை வாசிக்கும்போதே அதனுடைய மற்ற அலகுகள் வாசகர்களுக்குத் திறந்துகொள்ளும். நாவலில் வருகிறவர்களின் சாதி, சமூகப்பின்னணி, சுபாவம் , ஏன் அவர்களுக்கு இப்படி நடந்தது என்பதெல்லாம் தன்னாலே திறந்துகொள்ளும். பொதுவாக நிகழ்கால நடப்புகளை எழுதினால் இலக்கியம் ஆகாது என்கிற மூட நம்பிக்கை உண்டு. இந்த போக்கு வெகுஜன எழுத்துக்குச் சொந்தமானது என்பார்கள். அதற்கு ஓர் இலக்கியதரத்தையும் காலத்தை  மீறிய இருப்பையும் கொடுத்தவர் இமையம். சம கால சம்பவங்களை அதனுடைய பரபரப்புக்காக அல்லாமல் அதில் மறைந்திருக்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்காக எழுதுகிறவர் அவர் எனலாம்,'' என்கிறார் கவிஞர் சுகுமாரன். இந்த பாணியில் பூமணியின் தொடர்ச்சியாக இமையத்தை வைக்கமுடியும் என்ற கருத்தையும் தனிப்பட்ட முறையில் அவர் வைக்கிறார்.

இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவேறு கழுதைகளுடன் இலக்கிய உலகுக்குள் நுழைந்தவர் இமையம். இந்த நாவல் தமிழின் முக்கியமான நாவல்கள் பட்டியல்கள் நிரந்தர இடம்பிடித்து அமர்ந்துள்ளது. அதைத் தவிர ஆறுமுகம், செடல், எங்கத, செல்லாத பணம் ஆகிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். அவர் எழுத்துகளில் வரும் பெண் பாத்திரங்கள் அச்சுஅசலாக நாம் கிராமப்புறங்களில் காண்பவர்கள். இமையத்தின் படைப்புகளில் அவர்கள் தங்கள் இயல்புகளில் மாறாமல் அதே நேரம் சிகரமென எழுந்து நிற்பார்கள்.

‘‘இமையம் எழுத்துகளின் மிகப் பெரிய பலம், பெண்களின் வாழ்வியலை, உணர்வுகளை மிக வலிமையாக எடுத்து முன் வைப்பதுதான்,'' என்கிறார் ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்.

‘‘ஒரு முறை நேர்ப்பேச்சில் இமையம், கழிவறை பயன்படுத்தாத கிராமங்களில் பெண்களின் நிலை பற்றி பேசினார். அவர்கள் இயற்கை உபாதைக்காக ஒதுங்கும் பாதையின் வழியாக ஆண்கள் செல்ல நேரும் போதெல்லாம் பல முறை எழுந்து உட்கார்ந்து எழுந்து உட்காரவேண்டும் என்று அவர்களது பாடு பற்றி பேசினார். இப்படி நாம் பார்க்காமல், கண்டு கொள்ளாமல், கடந்து செல்லும் பெண்களின் மிக நுணுக்கமான உணர்வுகளை மிக துல்லியமாக பதிவு செய்யும் மகத்தான படைப்புகளாக இமையத்தின் படைப்புகள் இருக்கின்றன.

சாவு சோறு என்கிற ஒரே ஒரு சிறுகதையை பற்றி மட்டும் பேசுவோம். பூங்கோதை மட்டுமல்ல, அந்த கதையில் நாம் நேரடியாக அறிமுகமாகாத பல பெண்கள் வந்து போகிறார்கள். ஓர் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மகனின் தாய் அப்படி ஒரு பெண். அந்த மகனை பழி வாங்க அலையும் பெண்ணின் அப்பாவும் மகன்களும் அவரது முலையை அறுத்துவிடுகிறார்கள். தனக்கும் அந்த நிலை நேரும் என்று தெரிந்திருந்தாலும் மகளை பார்த்து அவளுக்கு சொந்தமான விசயங்களை தந்து விட வேண்டும் என்று அலையும் பூங்கோதை.

அந்த ‘சொந்தமான விசயங்களில்‘ நகை, பணம் தவிர முக்கியமான வேறொன்று இருக்கிறது. மகளின் கல்வி சான்றிதழ்கள்.  ‘எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய் பொழச்சிக்கட்டும்‘ என்று நினைக்கும் அம்மா அதற்கு முக்கியமாக நம்புவது கல்வியை. சொந்த மண்ணில் அந்த கல்வி அவள் சாவை தடுக்காது, ஆனால் தப்பித்துவிட்டால் வேறு எந்த மண்ணிலாவது அது பயன்படும்.

இந்த கதைக்குள் பூங்கோதையின் பயம், மனவுறுதி, வைராக்கியம் என்று எல்லாமே மாறி மாறி இழை இழையாக வந்து போகின்றன.

இது போல ஒரு பெண்ணின் நோக்கில் பார்க்கும் போது பல நுண்ணிய அடுக்குகளை கொண்டவை இமையத்தின் படைப்புகள். ஆணாதிக்கம் மற்றும் சாதிக்கு உள்ள தொடர்பை அதனால் பெண்கள் படும் பாடுகளை பேசு பொருளாக்கும் படைப்புகள் அவை. நாம் அறியாத பெண்களை வலிகளை எழுத்தில் கடத்தும் படைப்புகள் அவருடையவை,'' என்பது அவரது கருத்து.

‘‘குறியீட்டுத்தன்மையையோ உள்மடிப்புகளையோ முற்றிலும் துறந்து நேரடித்தன்மையுடன் வாசகனை அணுகக் கூடியவை அவரது சிறுகதைகள். புரியாத தன்மைக்கு இமையத்தின் சிறுகதையில் இடமே இல்லை. மலேசியாவில் இருக்கும் ஒரு வாசகனுக்குக் கூட தனக்கு முற்றிலும் அந்நியமான ஒரு நிலத்தில் சஞ்சரிக்கும் அவர் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயலும் ‘இவர்கள் இவ்வாறு மட்டுமே நடந்துகொண்டிருக்கக்கூடும்‘ என முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அனுபவத்தையே தரும்,'' என்கிறார் மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழின் ஆசிரியருமான ம.நவீன்.

எந்த இலக்கிய வகைப்பாட்டுக்குள்ளும் தன்னைப் பூட்டிவைப்பதை விரும்பாத இமையம்,  தொடர்ந்து உற்சாகமாக படைப்புலகில் சஞ்சாரம் செய்துகொண்டிருக்க வாழ்த்துகள்!

ஏப்ரல், 2021