ஒரு திருடனின் உருமாற்றம் 
இலக்கியம்

ஒரு திருடனின் உருமாற்றம்

ப. கவின் கார்த்திக்

1.  திருடன் டிமிட்ரி ஒரு கொடிய சாபத்திற்கு ஆளாகியிருந்தான். அது அவனால் இனி இப்பிறவியில் ஒருபோதும் தூங்க முடியாது என்பதுதான்.

  2. இரண்டு வருடங்களுக்கு முன்பான ஒரு கார்காலத்தின் இரவில் களவுக்கு சென்றுவிட்டு டிமிட்ரி வீடு திரும்பியபோது அவன் தனக்குள் வழக்கத்திற்கு மாறான மேலும் முற்றிலும் புதிரான ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதாக உணர்ந்தான். அவன் உடம்பெங்கும் சிறிய ஊசிகளை கொண்டு பலர் கீறிடுவதைப் போல உணர்ந்தான். வலியில் அலறினான். தன்‌ உடம்பிலிருந்து ரத்தம் கசிகிறதா என ஆடைகளை கழற்றி பார்த்தான். அன்றிரவு அவன்‌ எவ்வளவோ முயன்று பார்த்தும் கூட அவனால் தூங்க முடியவில்லை.

அதற்கு பிறகான நாட்களிலும் இந்நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்க, டிமிட்ரி பயத்தில் பித்து பிடித்தவனைப் போல நடந்து கொள்ள தொடங்கினான்.

  3.  தொடர் தூக்கமின்மையின் விளைவாக டிமிட்ரியால் எதிலுமே  சரிவர செயல்பட முடியாமல் போனது. களவுக்கு தேவையான திட்டமிடுதல்கள், முன்னேற்பாடுகள், கள ஆய்வுகள் என எதிலுமே அவனால் முன்பைப் போல வலிமையுடனும் புத்தி கூர்மையுடனும் செயல்பட முடியவில்லை. எப்பொழுதும் விழித்தேயிருப்பதன் பொருட்டு அவனின் உடல் மற்றும் மனசோர்வு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. தன்னளவில் அவன் எவ்வளவோ முயன்று பார்த்து தோல்வியுற்ற பின், அவன் மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்ட மூலிகைகள் மற்றும் ஊரிலயே புகழ்பெற்ற ஒரு மாந்த்ரீகரிடம் பல மணிநேர செலவழிப்புக்கு பின் வாங்கிய தாயத்து என இன்னபிற விஷயங்களை முயன்று பார்த்து கூட அவனால் ஒரு நொடி கூட தூங்க முடியவில்லை. நாளடைவில் அவன் களவுக்கு செல்வதையே நிறுத்தினான்.

 4. திடீரென ஒருநாள் டிமிட்ரிக்கு தன் வீட்டிற்குள் அமானுஷ்ய சங்கதிகள் இருப்பதாக தோன்றியது. அவையே தன்னை கட்டுக்குள் வைத்துக்கொண்டு தூங்க விடாமல் சதி செய்வதாக அவன் நினைத்தான். இந்த எண்ணம் வரவே டிமிட்ரி வீட்டிலிருந்து வெளியேறி ஒரு மலைப்பாதையின் வழியே நடக்கத் தொடங்கினான். நீண்ட நேரம் நடந்து சென்ற அவன் மலையின் உச்சியை அடைந்த போது அங்கே தூரத்தில் ஒரு சூன்யக்கார கிழவி தனியே அமர்ந்திருப்பதை கண்டான். கிழவியின் தோற்றம் அவனை ஒருமாதிரி அச்சுறுத்துவே அவன் செய்வதறியாது அங்கேயே நின்றான்.

கிழவியோ அவன்‌ வருகையை‌ முன்பே அறிந்து காத்திருந்தவளை போல அவனையே வெறித்து பார்த்தாள். தான் பேச நினைப்பதை காற்றில் கைகளை கொண்டு எழுதி, காற்றின் வழியே அந்த‌ வார்த்தைகள் அவனிடம் சென்று சேருமாறு செய்தாள்.

 அப்படி காற்றின் வழியே டிமிட்ரியிடம் வந்த சேர்ந்த வார்த்தைகள் :

"மனிதனாக இருக்கும்வரை நீ இனி இப்பிறவியில் தூங்குவது என்பது மிகவும் கடினமான காரியம்‌. அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் சொற்ப அளவிலேயே இருக்கிறது. இது உன்னுடைய பாவங்களுக்கான சாபம்"

 டிமிட்ரி மறுமுனையில் உதிர்த்த வார்த்தைகள் காற்றில் ஒரு ஓலமாக கரைந்து கிழவியிடம் வந்து சேர்ந்தது.

"அப்படியென்றால் எனக்கு மரணம்தான் முடிவா? யார் இந்த சாபத்தை எனக்கு வழங்கியது?" என்று அவன் அனுப்பிய ஓலத்தில் இரண்டு முக்கியமான கேள்விகள் இருந்தன!"

 கிழவியின் பதிலாக காற்று அவனிடம் கொண்டுவந்து சேர்த்தது :

"இந்த சாபத்திலிருந்து நீ விடுபட ஒருவழி இருக்கிறது. நீ களவு செய்த எண்ணற்ற வீடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர்தான் இந்த சாபத்தை உனக்கு கடத்தியிருக்கின்றனர். நீ களவாடிய பொருட்கள் அனைத்தையும் அதன் உறியவர்களிடத்திலேயே மீண்டும் சென்று கொடுத்துவிடு. அப்போது அந்த நபர் மனம்மாறி அந்த சாபத்திலிருந்து உன்னை விடுவிக்க கூடும்!"

 மறுமுனையில் டிமிட்ரி அனுப்பிய வார்த்தைகள் :

"நிச்சயமாக! அப்படியே செய்கிறேன்.‌ ஆனால் நான்‌ களவு மேற்கொண்ட வீடுகள் ஒன்றல்ல.. இரண்டல்ல. அவை எண்ணிலடங்காதவை. அத்தனை வீடுகளுக்கும் நான் மீண்டும் செல்ல வேண்டும் என்ற நினைப்பே எனக்கு சொல்லிலடங்காத அயர்ச்சியை தருகிறது. இருப்பினும் நான் கண்டிப்பாக அதனை செய்து முடிப்பேன். ஆனால் அதுவரை என்னால் தூங்காமல் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. கண்டிப்பாக அது சாத்தியமில்லை என்றே‌ நினைக்கிறேன்"

இறுதியில் வந்து சேர்ந்த‌ பதில் :

"முன்பே சொன்னதுதான். இந்த சாபத்திலிருந்து நீ முழுமையாக விடுபடும்வரை இனி ஒருபோதும் மனிதனாக இப்பிறவியில் நீ தூங்க இயலாது. வேண்டுமென்றால் நீ இரவு நேரங்களில் மட்டும் வேறு ஒரு உயிரினமாக மாறும் படி‌ நான் செய்கிறேன். அப்படி செய்தால் உனக்கு தூக்கம் கிட்டும்"

 டிமிட்ரி ஒரு நொடி கூட யோசிக்காமல் அனுப்பிய பதில் :

"அப்படியே செய்யுங்கள்! தயவுகூர்ந்து அதை செய்யுங்கள்! உடனே செய்யுங்கள்!"

 டிமிட்ரியின் விசும்பல் நிறைந்த வார்த்தைகளை பெற்றுக் கொண்டபின் கிழவி உடனடியாக அவனை ஒரு புழுவாக மாற்றினாள்.

 அன்றிலிருந்து டிமிட்ரி பகலில் மனிதனாகவும் இரவில் புழுவாகவும் வாழத் தொடங்கினான். புழு‌வாக மாறிய பின்‌ அவனுக்கு தூக்கம் சுலபமாக இருந்தது. ஆனால் இப்படியே தன்னால் தொடர்ந்து வாழ முடியாது என்று உண்ர்ந்திருந்த அவன், பகல் வேளையில் தான் களவாடிய வீடுகளை நோக்கி பிரயாணப்பட தொடங்கினான். தான் களவாடிய அனைத்து பொருட்களையும் மூன்று பெரிய கம்பளி மூட்டைகளில் கட்டிக்கொண்டு அதன் உரியவர்களை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

  5.  டிமிட்ரி முதலிலே தெற்கு திசையில் பயணப்பட்டான். அவன் அந்த பயணத்தில் ஒரு நீண்ட நெடிய பரப்பளவை கொண்ட நிலவெளியையும் ஒரு பெரிய மலையையும் கடக்க வேண்டியிருந்தது. மலைச் சரிவிலிருக்கும் நிறைய வீடுகளுக்கு அவன் களவாடிய பொருட்களை திரும்ப தரவேண்டியிருந்தது. அவன் செல்லும் வழியெங்கும் பாதையில் கிடந்த பருக்கைக் கற்கள் ஊசியை போல அவன் கால்களை வெட்டியது. அவன் நடக்க நடக்க முதுகில் தோளோடு சேர்ந்து இறுகக் கட்டியிருந்த கம்பளி மூட்டைகள் அவனை அமுக்கி நச்சரித்தது. சுட்டெரிக்கும் வெயிலில் அவன் குதிகால் முழுக்க வெடிப்புகள் ஏற்பட்டன. அவன் அந்த வெளியை முழுவதுமாக கடக்க மூன்று பகல்களும் இரண்டு இரவுகளும் தேவைப்பட்டது. இந்த காலத்தை முழுக்க அவன் சுழற்சி முறையில் மனிதனாகவும் புழுவாகவும் வாழ்ந்து கடந்தான்.

 மெல்ல மெல்ல அவன் கால்கள் வலுவிழந்தது. உடல் சோர்வடைந்துவிட்டது‌. அவன் இப்போது நொண்டி நொண்டி ஆற்றங்கரை வழியாக தள்ளாடி நடந்தான். பாறைகளின் மீது நுரைத்துக்கொண்டு ஓடும் ஆற்றுப் படுகையில் நொண்டிச் சென்றவனின் கால்களை தண்ணீர் உறைபனியைப் போல வெட்டியது. அதனால் அவனது கணுக்கால் வலித்தது. பாதம் மரத்துப்போயிற்று. சில சமயம் தண்ணீர் முழுங்கால்வரை நனைத்தது. எதிர்பாராத ஆழம் அவனை மேலும் தள்ளாட வைத்தது. பாறை வழுக்கவே அவன் ஒருமுறை விழுந்துவிட்டான். அப்போது அவனின் கம்பளி மூட்டைகள் முழுமையாக நனைத்துபோயின. ஒரு நிமிடம் திக்குமுக்காடிப் போனவன் தடுமாறி காலை ஊனறிக்கொண்டான். அதே சமயத்தில் வலி பொறுக்காமல் கத்தினான். தலை கிறங்கியது. விழாமலிருக்க ஒரு பற்றுகோடை எடுத்துக்கொண்ட அவன் அதன் துணையுடனேயே அந்த ஆற்றை கடந்தான்.

 6. அப்போது ஆற்றங்கரையில் ஒரு பெண் தனியே நின்றுகொண்டிருப்பதை கண்டான். அந்த பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.  அவள் பொன்னிறத்திலான மீன்களை பிரசவித்து கொண்டிருந்தாள். அவளின் அலறல் ஒடுங்கிய நேரம் நூற்றுக்கணக்கான மீன்கள் அவளிடமிருந்து வெளியேறி அந்த ஆற்றங்கரைக்குள் விழுந்து நீந்திச் சென்றன. அந்த மீன்கள் யாவும் ஆற்றில் மின்னி மறைந்தன.

 அவளின் அருகில் சென்ற டிமிட்ரி அவளின் இந்த விநோத ஆற்றலுக்கான காரணத்தை அறியமுற்பட்டான்.

 "யார் நீ? எப்படி உனக்கு இப்படியான விநோத ஆற்றல் வாய்க்கப் பெற்றது?"

 "விநோதமா? எது? இது என்னுடைய சாபம்!"

 "என்ன சொல்கிறாய்?"

 "நான் செய்த பாவத்திற்கான கூலி‌ இது!"

 டிமிட்ரி புரியாமல் குழம்பிப் போய் நிற்க, அந்த பெண் பேச்சை தொடர்ந்தாள்.

 "பிறந்து எட்டே மாதங்களான என் பெண் குழந்தையை என்னுடைய பணத் தேவைகளுக்காக விற்றுவிட்ட பெரும்பாவி நான். அந்த பாவத்தின் விளைவாக நான் தினமும் இந்த ஆற்றங்கரைக்கு வந்து மீன்களை பிரசவிக்கிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் நான் இந்த வலியை தினமும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். என்னுடைய சாபமும் இதுதான், விமோசனமும் இதுதான்."

என்று அவள் சொல்லி முடிக்க டிமிட்ரி திகைத்துப் போய் நின்றான். அவனை சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் எண்ணற்ற புதிர் முடிச்சுகளில் சிலவற்றை அந்த பெண்ணினுடனான சந்திப்பு அவிழ்த்து விட்டிருந்தது. டிமிட்ரி இதனை யோசிக்கும் தருவாயில் அந்த பெண் மாயமாக மறைந்தாள்.

  7. பல பொழுதுகள் கடந்த பின், டிமிட்ரி அந்த மலை சரிவை வந்தடைந்தான். அங்கே அவன்‌ களவாடிய வீடுகளை ஒன்றுக்கு இரண்டுமுறை சரியாக நினைவுகூர்ந்து பின், ஒவ்வொரு வீடாக சென்று அவரவருக்கு உரிய பொருட்களை யாருமில்லாத நேரம் பார்த்து வீடுகளின் முகப்பில் விட்டுச் சென்றான். இவ்வாறாக அவன் கம்பளி மூட்டையின் கணம் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. இருப்பினும் டிமிட்ரிக்கு தூக்கம் வாய்க்கவில்லை.

  8.  ஓராண்டு காலம் ஓடியது. டிமிட்ரி இப்போது ஏறக்குறைய தன்னுடைய பயணத்தின் இறுதிகட்டத்தை எட்டியிருந்தான். அவனிடமிருந்த ஒரு கம்பளி மூட்டையின் கணம் கூட பாதி அளவிலேயே இருந்தது. அதனுள் மீதமிருந்த பொருட்கள் - சில வெள்ளி மற்றும் செப்பு பாத்திரங்கள், ஒரு அரிக்கேன்‌ விளக்கு, ஒரு நீல நிற குடை, புலி நகத்தால் செய்யப்பட்டிருந்த ஒரு கழுத்தாணி மற்றும் ஒரு பழமையான கைக்கடிகாரம். இவற்றை சுமந்தபடியே அவன் வடக்கு திசையில் பயணப்பட்டான்.

 இந்த ஓராண்டு தொடர்ந்து பிரயாணம் மேற்கொண்டதன் விளைவாக, டிமிட்ரியின் உடல்வாகு வெகுவாக மாறியிருந்தது. அவன் உடல் வற்றி உருக்குலைந்து போயிருந்தான். பசி அவனை பிடுங்கி தின்றது. வழியில் அவ்வப்போது தென்பட்ட காய்களையும் கிழங்குகளையும் பிடுங்கி தின்றான்.

 இத்தகைய நெருக்கடிகளுடன் சேர்ந்து மழைக்காலம் வேறு அப்போது தொடங்கியதால் அவனின் சூழல் மேலும் மோசமானது. அடிக்கடி நின்று நின்று போக வேண்டி இருந்தது. இருப்பினும் அவன் தளராமலயே இருந்தான். தன்னை மீறிய ஏதோ ஒன்று அவனை உந்தித் தள்ளுவதாக நினைத்து தொடர்ந்து பயணித்தான்.

  9. இப்போது அவன் எல்லாவற்றையும் கொடுத்தாயிற்று. ஒன்றை தவிர. அது அவனிடமிருந்த நீல நிற குடை. அது முன்னெப்போதோ ஒரு மழைக்காலத்தில் பசி தாளாமல் ஆளில்லாத வீடு ஒன்றிற்குள் நுழைந்து அவன் சமைத்து சாப்பிட்டுவிட்டு வந்தபோது, வெளியே மழை அடித்துக் கொண்டிருந்ததால் எடுத்துவந்த குடை. அந்த குடையை தவிர அவனிடம் இப்போது வேறெந்த பொருளும் இல்லை. எல்லாவற்றையும் அதன் உரியவர்களிடத்திலேயே சென்று சேர்த்துவிட்டான். அந்த குடையே அவனின் இறுதி நம்பிக்கையாக இருந்தது.

அந்த குடைக்கு சொந்தமான வீட்டை அவன் அடைந்தபோது அங்கே ஒரு பெண் வாசலில் தனியே அமர்ந்தவாறு வானத்தை பார்த்து  கொண்டிருப்பதை கண்டான். அந்த பெண் வீட்டினுள்ளே செல்வதற்காக காத்திருந்தான். வெகுநேரமாகியும் அவள் உள்ளே செல்லாததால் டிமிட்ரி அயற்சியுற தொடங்கினான். பசி அவனுக்குள் ஒரு கரையானை போல ஊர்ந்து உடல் முழுவதையும் அரிக்க தொடங்கியது. நா முழுவதும் கசந்தது. தொண்டை வறண்டு போனது.

 "தண்ணீர் தண்ணீர்" என தனக்குள்ளே முனங்கினான். அந்த பெண் உள்ளே சென்றுவிட்டாள என அவ்வப்போது மறைந்திருந்து பார்த்தான். அவன் பார்வை மங்கிப் போய் இருந்தது. அந்த பெண்ணின் உருவம் மட்டும் கலங்கலாக அவனுக்கு தெரிந்தது.

 விருட்டென்று எழுந்தவன் தள்ளாடியபடியே அந்த பெண்ணை நோக்கி நடந்தான். அவள் அவனின் நிலையை முழுவதுமாக அறிந்தவளை போல மிகுந்த கரிசனத்தோடும் அன்போடும் அவனை வரவேற்று பின் ஒரு கோப்பை நிறைய தண்ணீர் எடுத்துவந்தாள்.

 "வெகுதூரம் பயணம் செய்து வந்திருக்கிறாயா?" என்று அந்த பெண் கேட்டாள்.

ஒரு திருடனின் உருமாற்றம்

டிமிட்ரி இன்னும் ஒரு வித மயக்க நிலையிலேயே இருந்தான். அவனை மெதுவாக பிடித்து அமர வைத்தாள். அவன் சாப்பிடுவதற்காக கொய்யா பழங்களையும் வேகவைத்த கிழங்கு வகைகளையும் எடுத்து வந்தாள். பசி பொறுக்காமல் அவன் வேகமாக சாப்பிடவே தொண்டை அடைத்தது. பல வருடங்கள் கழித்து டிமிட்ரி பசியாற‌ சாப்பிட்டான்.

 டிமிட்ரிக்கு இப்போது மெல்ல நிதானம் பிடிபட துவங்கவே தான் வந்த விஷயத்தை தயக்கத்துடன் கூறி தன்‌ கையிலிருந்த நீல நிற குடையை அந்த பெண்ணிடம் கொடுத்தான். திடீரென யாரோ அவன் குரல்வளையை நெறிப்பதை போல குற்றவுணர்ச்சி அவனை அழுத்தியது. வார்த்தைகளை தடுமாறியே உச்சரித்தான்.

 "இது என்னுடைய மகனின் குடை!" என்று கூறியவறே அந்த பெண் அழத் தொடங்கினாள்.

 "இப்போது உங்கள் மகன் எங்கே?"

 "அவன் இறந்து ஓராண்டாகிறது. அவனுக்கு பிறந்ததிலிருந்தே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது. கடந்த வருடம் அந்த பிரச்சினை தீவிரமடையவே ஒரு பெளர்ணமி இரவில் அவன் இறந்து போனான். அப்போது அவனுடைய வயது பத்து மட்டுமே!" பெண்ணின் அழுகை அதிகரித்தது.

 பின் அவள் டிமிட்ரியை தன் மகனின் கல்லறை இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து சென்றாள். வீட்டிலிருந்து எடுத்த வந்த பழங்களையும் வழியில் பறித்த மஞ்சள் நிற மலர்களையும் அவனின் கல்லறையில் மேல் வைத்து பிரார்த்தித்தாள். டிமிட்ரியும் தான் எடுத்து வந்த நீல நிற குடையை சிறுவனின் கல்லறை மேல் வைத்து பின் தொட்டு வணங்கினான்.

 "என் மகனின் மறைவுக்குப் பிறகு இப்போதுதான் இரண்டாவது முறையாக இங்கே வருகிறேன். அவன் எங்கோ தூர தேசம் போயிருப்பதாகவே நான் ஒவ்வொரு நாளையும் கடக்கிறேன். அவன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்ற நினைப்பிலேயே தினமும் என் வீட்டு முகப்பில் அவனுக்காக காத்திருக்கிறேன். அந்த பொய்யான நம்பிக்கையை சுற்றியே என் வாழ்வை அமைத்துக் கொள்கிறேன். ஆனால் பொழுது சாய்ந்த பின்பும் அவன் வீடு திரும்பாத ஏமாற்றம் என்னை ஒவ்வொரு நாளும் உறங்க விடாமல் செய்கிறது. சில நேரங்களில் அவன் திரும்பி வரும் வழியில் விஷப்பாம்புகளும் தேள்களும் அவனை கொத்திவிட்டதை போல் வரும் துர்கனவுகளால் நான் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து விடுகிறேன்‌. நான் சரியாக உறங்கி வெகுநாட்களாகிறது.”

என்று அந்த பெண் சொல்ல.. டிமிட்ரி அந்த பெண்ணின் சோகம் ததும்பும் முகத்தை பார்த்தான். பல நாள் உறக்கம் அவளின் கண்களில் எஞ்சியிருந்தது.

 “என் சூழல் இவ்வாறாக இருக்க.. அமைதியான இந்த கல்லறையும் இந்த குடையும் இப்போது எனக்கு சில உண்மைகளை உணர்த்துகிறது. எனக்கு இந்த உண்மையும் அவ்வப்போது தேவைப்படுவதாகவே இப்போது உணர்கிறேன். இன்று நான் நிம்மதியாக உறங்க வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது."

 "நான் செய்து தவறுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்! உங்கள் மகனின் குடையை நான் எடுத்துச் சென்றிருக்க கூடாது!"

 "ஒரு தவறு தவறென உணரப்பட்ட தருணத்திலேயே ஒருவன் அதிலிருந்து விடுபட்டுவிடுகிறான். உன்னை அழுத்தி கொண்டிருந்த விஷயங்களிலிருந்து நீ விடுபட்டதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது."

 என்று கூறியவறே அவள் மிகுந்த வாஞ்சையோடும் பரிவோடும் அவள் கைகளை கொண்டு அவனை ஆசிர்வாதம் செய்தாள்.

 10. மறுநாள் ஆற்றில் டிமிட்ரி புழுவாக செத்து மிதந்தான். ஆற்றின் சூழல் அந்த புழுவை வேகமாக அடித்துக் கொண்டு செல்ல, இரு பாறைகளின் நடுவே அது தூக்கி எறியப்பட்டது. அப்போது சில பொன்னிறத்திலான மீன்கள் அந்த புழுவை உன்ன.. தூரத்தில் மீன்களை பிரசவிக்கும் பெண் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.