ரெட்டிபாளையம் சாலைக்கு மாற்றாக இந்தப்பாதைக்கு மயான சாலை அல்லது பிணச்சாலை என்று பெயர் மாற்றுவது பொருத்தமாயிருக்குமென யோசித்தவாறு, கைலியை ஏற்றிக் கச்சை கட்டிக்கொண்டு, அதே சாலையில் சிதறிக்கிடந்த பூக்களை மிதிக்காமல் தன் காலடியை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நடக்க முயற்சித்தான் தனாவுல்லா. பெரும் பிரயத்தனம் அது. அன்றலர்ந்த ஆயிரமாயிரம் பூக்கள். பிணத்தைச் சுமந்த வாகனம், இவனுக்கு ஒரு உத்தேசமாய் இருபதடிக்கு முன்னால் பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது. சுற்றமும் நட்புமாய் சில வாகனங்கள் பின் தொடர்ந்தன. கொஞ்சம் பேர் பாதசாரிகளாகவும், எவர் முகத்திலும் துயரத்தின் மெல்லிய சாயலேனும் தென்படவில்லை. சிரித்து மகிழ்ந்து வாயாடிக்கொண்டே அவர்கள் சென்றது இவனுக்கு என்னவோ போலி ருந்தது.
சாவு மேளத்தின் ஓசை செவியைக் கிழித்தது. போதாத குறைக்கு சீறிச்சென்று வெடித்த பட்டாசுகளும் சேர்ந்து கொண்டு மண்டலத்தையே கதிகலங்கச் செய்தது அந்தக் கல்யாண சாவு ஊர்வலம். குத்தகைக்கு எடுத்தாற்போல ஏக உரிமையுடன் எல்லா வீட்டுச்சுவர்களிலும் ஐந்தடிக்கொரு கண்ணீரஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ‘இமயம் சரிந்தது’ என ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததன் மேல், இந்த இமயம் சரிந்ததுவும் சேர்ந்துகொள்ள, எத்தனை இமயமடா சரியும் ஈஸ்வரான்னு முணுமுணுத்தான் தனாவுல்லா.
எழுபத்தைந்துக்கும் அதிகமான வயதுகள் கொண்ட, ஆனால் புஷ்டியான திரேகங்கொண்டு, செவிகளில் பாம்படம் தொங்கிய ஒரு ஆயி வயதுக்குப் பொருந்தாத பாவனையுடன் போஸ்டரில் சிரித்தாள். பாவம், சிரிக்கத் தெரிந்த பெண்ணொருத்தியைக் காலன் கைப்பற்றிக் கொண்டான் என்று இவன் நினைத்துக்கொண்டான். பெயர் குருவம்மா என்று போட்டிருந்தார்கள். வயதைக் குறிப்பிடும் இந்த மலர்ந்தது - உதிர்ந்தது, எது ஒன்றையும் காணோம். ‘என்ன கண்ணீரஞ்சலி போஸ்டர் அடிக்கிறாய்ங்க’ - என்று ஒருத்தர் சலிப்புடன் சொல்லிக்கொண்டே மூத்திரம் பெய்ய முக்கு தேடிக்கொண்டிருந்தார்.
சொல்லமுடியாது - குறிப்பிடப்படாத வயதுக்கு, கிழவியின் உத்தரவு கூட ஒரு காரணமாயிருக்கலாம். நவீன காலக் கிழவிகள் புருவத்தைச் செதுக்கி, பருவத்தை மறைக்கத் தெரிந்தவர்கள். குருவம்மா என்கிற பெயரில் தனாவுல்லாவுக்கு இயல்பாகவே ஒரு வித கவர்ச்சி கிளர்ந்தது.
16 வயதினிலே படத்தில் காந்திமதி ஏற்றிருந்த குணச்சித்திரத்துக்குப் பெயர் குருவம்மா. நடிகர், நடிகையின் பெயர் குறிப்பிடாமல் சப்பாணி, மயிலு, பரட்டையன், குருவம்மா - என்றுதான் டைட்டிலே காட்டுவார் பாரதிராஜா. சும்மா சொல்லக்கூடாது, ஒரு அச்சு அசலான தெக்கத்திக்காரியாக அதில் வாழ்ந்துதான் காட்டியிருந்தார் காந்திமதி. இவனுக்கானால் அந்தப் படத்தில் குருவம்மாவும், வெள்ளையம்மாவும் சண்டைக்கட்டுகிற சீன், போஷாக்கு. இவனுடைய உம்மாவும் வாப்பும்மாவும் அப்படித்தான் சண்டை கட்டிக்கொள்வார்கள்.
“ அடி மானங்கெட்டவளே, ரோஷங் கெட்டவளே, வெட்கங்கெட்டவளே..எம் வீட்ல கொதிக்கிற கோழிக்கொழும்பு ஒம் மூக்கத் தொலச்சிதுன்னா அதுக்கு ஏண்டி ஊரக்கூட்டிக்கிட்டு சண்டைக்கி வர்ரே, சக்களத்தி..”
“ ம்ம்ம்...இந்த வெள்ளையம்மா ஒண்ணும் வெறுஞ்சிறுக்கி இல்லேடி”
கிராமியப் படங்களுக்கே உரித்தான மிகை யதார்த்தச் சண்டைதான். என்ன, அந்த சம்பாஷனைகளைக் கேட்க சுவையாக இருக்கும். சண்டை உச்சக்கட்டமடைகிற நேரம், வசனங்களை ஆஃப் செய்துவிட்டு ராஜா உறுமி மேளம் போட்டிருப்பார்.
இவனுடைய உம்மாவும், வாப்பும்மாவும் சண்டைக் கட்டுவதில் காந்திமதி கோஷ்டியைக் காட்டிலும், அடிபட்டையைக் கிளப்புவார்கள். நிறைய இடங்களில் ‘பீப்’ சவுண்ட் போட வேண்டியிருக்கும். ‘ம்ம்...அது எல்லாம் ஒரு பொற்காலம்’ என்று கிண்டலாக நினைத்துக் கொண்டான். வாப்பும்மாவும் ‘அல்லாபுரம்’ போய்ச்சேர்ந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. உம்மாவோ உடல் பருத்து, கால் வீங்கி, நடக்க இயலாத துயரத்தில் ஊரில் ஒரு மூலையில் தசைப்பொட்டலம் போல் கிடக்கிறாள்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. என்னடாது, மோளச்சத்தம் ஓய்ந்ததே என தனாவுல்லா காலடிப்பூக்களிலிருந்தும், கண்ணீரஞ்சலிகளிலிருந்தும் தலையை நிமிர்த்தியபோது, ஊர்வலம் இந்தியன் ஸ்கூலை கடந்திருந்தது. மைதானத்திற்கு வெளியே தார்ச்சாலையை ஒட்டினாற்போல, அடர்பச்சை நிறத்தில் குடை மாதிரி விரித்திருந்த மரத்தடியில் மோள கோஷ்டி ‘மருந்து’ சாப்பிட்டுக்கொண்டிருக்க, இவனுள் பொறாமை பொங்கிற்று. இவனுடைய ஜில்லு இந்த விஷயத்தில் ரொம்பத்தான் கறார். வெளியிலிருந்து இவன் வீடு திரும்பும் வேளைகளில் கதவருகிலேயே பதுங்கி நின்று, என்னவோ ட்ரங்க் அண்ட் ட்ரைவைப் பிடிக்கிற போலிஸ் மாதிரி ‘வாய ஊதுங்க ஊதுங்க..’ என்று கெடுபிடி காட்டுவாள். ஒரு தடவை இவன் தன் கண்டக்டர் சிநேகிதன் பீர்பாண்டியிடம் விசில் ஓசி வாங்கிக்கொண்டுவந்து, ஜில்லு ‘ஊதுங்க’ எனக்குரல் தந்ததும் ஊதினான். பெரிய மண்டை காய்ச்சலுடன், பிறகொரு தடவை ரெட்டிபாளையம் கூத்துக் கலைஞர் ஒருவரிடம் நாயனம் இரவல் பெற்று, தில்லானா மோகனாம்பாள் சிவாஜி ஸ்டைலில் ஊதிக்காட்டினான். இந்த மொக்கை தமாஷ்களுக்கெல்லாம் அவள் மசிகிறதாகத் தெரியவில்லை. ‘செப்டம்பர் பத்தொன்பதை மறந்துடாதீங்க. இப்படியே நீடிச்சதுன்னா நான் உங்களுக்கு குல்உ கொடுக்கிறாப்ல ஆயிடும்’ என்று பகிரங்கமாகவே மிரட்டினாள். ‘பாழாய்ப் போன செப்டம்பர் பத்தொம்பது’ என்று இவன் அந்த நாளை நினைத்துக்கொண்டான்.
மருந்து தேவையான அளவு உள்ளேறியதும் மோளச்சத்தம் கனகச்சிதமாக ஒலித்தது. ஊர்வலத்தோடு போய்க்கொண்டிருந்த இன்ன பிற மருந்து கோஷ்டியினர் டான்ஸ் போடத் தொடங்கிவிட்டிருந்தனர். மோளச்சத்ததுக்கும் டான்சுக்கும் பொருத்தமே இல்லாதிருந்தது. என்னவோ தான் ஒரு பெரிய சாவு டான்ஸ் கலைஞனாட்டம் தனாவுல்லாக்கு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கச் சகிக்காது. பொசுக்கென்று கோபம் வரும். இப்போதும் அப்படித்தான். ‘பொருந்தாத டான்சு போடும் இவன்களின் கால்களை முறித்தால் என்ன ராஸ்கல்ஸ்’ என்று முனங்கினான். எப்படி ஸ்டெப் போடுவதென மனதுக்குள் ரிகர்ஸல் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்சம் போனால் ஆடிவிடுவான் போலிருந்தது. ஒலித்த மோளம் அப்படி, ஆளை உசுப்பேத்திவிடும் தரத்திலானது. அப்படிக்கிப்படி இவன் உணர்ச்சிவயப்பட்டு விடுவானேயானால், அவ்வளவுதான் எதிர்ப்படும் ‘முமீன்கள்’ இவனுக்கு ‘காஃபீர்’ பட்டங்கட்டி ‘பத்வா’ கொடுத்துவிடுவார்கள். ‘அடங்குடா’ என்று இவனே தன்னை அடக்கிக்கொண்டான்.
முன்னே போய்க்கொண்டிருந்த மரண ஊர்தியைப் பார்த்தான் தனாவுல்லா. பிணத்தினடியில் இரண்டு ‘மருந்து கேஸ்கள்’ இடமும் வலமும் குத்தவைத்து அமர்ந்து குரங்கு கை பூமாலை - உதாரணம் போல பூக்களைப் பிய்த்தெறிந்து கொண்டே வந்தனர். அப்புறம், வழியெங்கிலும் ஒட்டிக்கிடந்த கருப்பு வெள்ளைப் போஸ்டர்களின் பலனாக, குருவம்மா இவன் மனதில் வலுவாகப் பதிந்து போயிருந்தாள். போஸ்டரில் குருவம்மா துல்லியமாக வெளிப்பட்டதும் அதற்கொரு காரணம். கேமராவுக்கு அஞ்சாத, அதைக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாத, அலட்சியமான பார்வை. அத்தனை வயதில் எவளுக்காயிருந்தாலும் கண்கள் நொள்ளையாயிருக்கும். குருவம்மாவுக்கோ தீட்சண்ய மாயிருந்தன. கீழதட்டுக்கருகில் ஒரு மரு, அதில் இழையோடிய ஒரு மயிர், அடடா... தனாவுல்லாவுக்குள்ளிருந்த சல்லிப்புத்தி, இவள் தன் இளமையில் எப்படி இருந்திருப்பாள் என்று யோசிக்க வைத்தது. அக்கணமே தெக்கத்திக் கிராமம் ஒன்றின் வயல் வரப்பில், வழிய வழிய எண்ணெய் பூசி கோணலாக வகிடெடுத்துத் தலைசீவி, பூப்போட்ட சீட்டித்துணிப் பாவாடை தாவணியில், கரும்பு கடித்தவாறே நடக்கும் ஒரு குமரிப்பெண்ணின் சித்திரம், இசைஞானியின் பிஜிஎம்முடன் மனதில் விரிந்தது.
கைலி கட்டிக்கொண்டு, அந்த சவ ஊர்வலத்துக்குச் சற்றும் பொருந்திவராத, விதம் விதமான முகப்பாவனைகளோடு நடந்து கொண்டிருக்கும் இவனை, எவரும் அந்நியமாய்க் கவனியாதது ஆறுதலாக இருந்தது. ஆஞ்சநேயர் கோயில் முக்கு வந்ததும், இவன் கூட்டத்திலிருந்து தன்னை வலிய துண்டித்துக்கொண்டான். முன்னெச்சரிக்கை. இரண்டு கட்டிடங்கள் கடந்து, மாடியில் தான் இவன் வீடு. ஜில்லு பார்த்துவிட்டாளானால் தலையடித்துக்கொள்வாள். ஏற்கனவே பெயர் டேமேஜ். வாசல் நெருங்கியதும், நல்லபிள்ளை மாதிரி தலையை கோதிவிட்டுக்கொண்டான். நெற்றியில் வலியப் படித்திருந்த சிகையை மேலேற்றி, கைலியால் முகம் துடைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு கள்ளப்பூனையின் பாவனையுடன் மாடிப்படிகளில் ஏறினான். சாய்ந்திருந்த நெல்லிமரக்கிளை காற்றிலசைத்து, ரெட்ட மஸ்தான் தர்கா மயிலிறகாய் இவன் தலையை வருடியது. அதை ஒரு ஆசிர்வாதம் போல ஏற்றுக்கொண்டு, மேலும் சில படிகளேறி, அழைப்பு மணியை வலிக்காமல் அழுத்தினான். அப்போது இளமைக்கால குருவம்மா வந்து கதவைத் திறந்தாள், குழந்தைகள் சூழ.
இவனுக்கு நெஞ்சைப் பிசைகிறாற்போல என்னவோ செய்தது. அச்சத்தில் மயிர்க்கால்கள் விறைத்து நின்றன. அப்படியே எல்லாம் இவனுடைய ஜில்லு சைஸில் - ஆனால் முகம் மட்டும் குருவம்மா. என்னடா இது, கண்ணீரஞ்சலி போஸ்டர்களை கண்ணிமைக்காமல் பார்த்ததன் பலனா..கருமாந்தரம் கதவு திறந்தால் முன் எப்போதும் இவனுக்குக் கிடைத்திராத இன்முக வரவேற்பு. ‘வாயை ஊதுங்க..’ ‘குல்உ கொடுத்து விடுவேன்..?’ போன்ற கெடுபிடியோ, மிரட்டலோ இல்லை. சரி, குழந்தைகள்? அட, நம்ம நசீமாவும், யாசரும் தான். சரியான வீட்டுக்குத்தான் வந்திருக்கிறோம். நம்ம பார்வையில் தான் என்னவோ கோளாறு. போஸ்டர் ரிஃப்ளக்ஸனாகக் கூட இருக்கலாம். சிலபோது இப்படியெல்லாம் நேரும்.
சாயங்காலம் சதர்ன் ஆப்டிகல்ஸ் போய் கண் பரிசோ தனை செய்து கொண்டு, ஒரு கண்ணாடி கூட மாட்டிக் கொள்ளலாம். அவ்ளவு தான், கவலையை வுடு.. இவன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வீட்டினுள் நுழைந்து, வழக்கமான இருக்கையில் அமர்ந்து, மெல்ல கடைக்கண்ணால் அவளை நோட்டமிட்டான்.
ஜில்லுவைப் போல் அசலான உடற்கூறுகளுடன் முகம் மட்டும் குருவம்மா. இளம் பிராயத்து குருவம்மா. கரும்பு கடிக்காதது மட்டுமே குறை. எப்போது பார்த்தாலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்ற ஜில்லுவின் முகத்துக்கு இது தேவலை. வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டாமோ. பார்த்தமுகத்தையே எத்தனை காலத்துக்குப் பார்கிறது? இருந்துவிட்டுப் போகட்டுமே. குழந்தைகளுக்கொன்றும் பிரச்சனை இல்லை போல, இருந்திருக்குமானால் ‘இது எங்க அம்மா இல்லை. வேறு எவளோ..’ என்று கூப்பாடு கிளப்பியிருப்பார்கள் தானே? இந்த இடத்தில் தனாவுல்லாவுக்கு நெருடியது. தன்னிடம் தான் கோளாறு என்பது புரிந்துவிட்டது. ஜில்லுவா, குருவம்மாவா, என்ன சொல்லி இவளை அழைப்பது? இதிலும் இவனுக்குத் தான் பிரச்சனை. குருவம்மாவின் முகத்துடன் இருக்கும் இவளை ஜில்லு என்று அழைக்கவோ, சகஜமாகப் பழகவோ இயலுமா? இல்லை. இந்தப் பிரச்சனை தீரும் வரைக்கும் இவளை நெருங்காதிருப்பதே நல்லது. அதுவும் இயலுமா? இரவில் படுக்கையறையில், குழந்தைகளற்ற தனிமையில்? படச்சவனே உன் நல்லடியானுக்கு இது என்ன சோதனை. விசாவுக்காக இந்த எளியவன் எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. அந்த நேரத்திலெல்லாம் கூட, என் ரப்புவே, உன்னை ஒரு வார்த்தை நிந்தனை செய்திருப்பேனா? ‘இந்தாளுக்கு புத்திவரட்டும், புத்திவரட்டும்’ என்று ஒவ்வொரு வேளைத்தொழுகையிலும் ஜில்லு உன்னிடம் கோரிக்கை வைப்பாளே, அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு அவளுடைய துஆவைக் கபூலாக்கி விட்டாயா? அதனால் தான் எனக்கு இந்த சோதனையா?
மனம் ஒரு நிலைப்படாமல் அதை எங்கெங்கோ வெவ்வேறு திக்குகளில் அலையவிட்டு, இவன் நிம்மதி பறிபோய் இருக்கையில் கிடந்தான். டிவி.யில் குழந்தைகள் குஜாலாகப் பேய் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சீஸன் ஆயிற்றே. இப்படி ஒருபாடு படங்கள் இறங்கிவிட்டன. ஆனாலும் அவர்களுக்கு அலுக்கவில்லை. நசீமாவிடமிருந்து ரிமோட்டைக் கைப்பற்றி அடுத்த சானலுக்கு மாறினான் யாசர். அங்கும் ஒரு பேய் படம். ஒரு மந்திரவாதி பேயைத்தன் கட்டுக்குள் கொண்டு வரப் பெரும் பிரயத்தனங்கள் மேற்கொண்டான். அது அவனுக்கு ஆட்டம் காட்டியது. கிட்டத்தட்ட இவனுடைய நிலைமையும் அப்படித்தான் இருந்தது.
மந்திரவாதியை டிவி.யில் பார்த்ததும் இவனுக்குச் சிந்தனை தடம் புரண்டது. இவனை வழிக்குக் கொண்டு வருவதற்காக ஜில்லு உருவாக்கிய பல விதமான மிரட்டல்களில் ஒன்று - மலையாளத்துத் தங்ஙள். அவளுடைய கொடுங்கல்லூர் மாமுவிடம் சொல்லி பரப்பணங்காடி குஞ்ஞாலித் தங்களைத் தருவிப்பது. ஆஹா.. தங்களைத் தானில்லாத நேரத்தில் தருவித்து எதுவும் நிகழ்த்திவிட்டாளோ? உடனே இவன் ஒரு மோப்ப நாயாக உருமாறி சுற்றிலும் முகர்ந்து பார்க்கத் தொடங்கினான். குழந்தைகளை பேய்படத்திலிருந்து கவனத்தைத் துண்டித்துக்கொண்டு, இவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
“ஹைய்... வாப்பா நாய் மாதிரி பண்றாரு..”
யாசர் கத்திக் கூப்பாடு போட்டான். நசீமா அவனைத் தொடையில் கிள்ளி அமைதிப்படுத்தினாள். ஆனாலும் அவளுக்குள் ஒரு நமட்டுச்சிரிப்பு தெரிந்தது. முகர்ந்து பார்த்ததில் எதுவும் புலப்படவில்லை. காலையில் ஜில்லு வைத்திருந்த கோழிக்குருமா வாசனை கூட. ஆனால் கக்கூஸில் மாட்டியிருந்த ஓடோனில் வாசனை வீசியது. நல்ல வேளை..வேறெதுவும்..
இவன் மீண்டும் அவளை கடைக்கண் கொண்டு பார்த்தான். இப்போதைக்கு அவனால் இது மட்டுமே முடியும். அவள் நூல் சேலையில், எண்ணெய் வழியாது நன்கு திருத்திய முகத்தில் மெல்லிய முறுவல் பூத்திருக்க, தரையில் அமர்ந்து காய்களை நறுவிசாக நறுக்கிக் கொண்டிருந்தாள். அந்த நூல் சேலை ஜில்லுனுடையது தான். ஆனால் அந்த முகம்? சரி, முகத்தைக்கூட விட்டுவிடலாம். ஏன் தன்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசாமலே இருக்கிறாள்? இந்நேரம் ஜில்லுவாயிருந்தால் ஒரு கதாகாலட்சேபமே நிகழ்த்தி இருப்பாளே. அந்த மர்மம் பொதிந்த மெல்லிய முறுவலுக்குப் பின்னே என்ன இருக்கிறதோ.
இவனுடைய இத்தனை நேரத்து மனசஞ்சாரத்தைக் கலைப்பது போல நசீமா அருகில் வந்து கைகளைப் பற்றியவாறு “ ஏன் வாப்பா வந்ததுலயிருந்து இஞ்சிகுடிச்சாப்ல உர்ர்ருன்னு மூஞ்ச வச்சிருக்கிங்க?” என்று கேட்டுச் சிரித்தாள். யாசரும் அவனோடு கூடி குருவம்மாவும் சிரித்தனர். வீட்டில் சிரிப்போசை வலுவாக ஒலிக்கும்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது.
ஆனால் தனாவுல்லாவால் சிரிக்கமுடியவில்லை. நசீமா கேட்டதற்காக அவளிடம் கண்களைத் திரட்டி, உருட்டி, கைகளை உயர்த்தி, பயம் காட்டுகிறாற்போல் “ம்...கொஞ்சம் முன்னாடி பேய்ப்படம் பார்த்தோம்ல, பயந்துட்டேன்..பாரு..உச்சா கூட வந்திருச்சி..” என்று கைலியைக் காட்டி பாவ்லா செய்தான். மீண்டும் வீட்டில் சிரிப்பின் பேரோசை எழுத்து அடங்குவதற்கு முன், அவன் விறுவிறுவெனப் படியிறங்கி சாலையில் நடக்கலானான்.
பகல் மங்கிக்கொண்டிருக்கிறது.
சோனா குமரேசன் தன் பட்டறையில் ஒரு பழைய நகையை நெருப்பில் காட்டி ஊதி ஊதிப் புதுப்பித்துகொண்டிருந்தார். இவன் தஞ்சாவூருக்கு வந்த நாள்முதல் சோனா குமரேசன் நெருங்கிய சிநேகம். வாழ்வு குறித்த எந்த சிக்கலுக்கும் விரல் நுனியில் தீர்வு வைத்துள்ள ஒரு நபரின் பந்தம் யாருக்குக் கசக்கும்?
சோனா என்றால் தங்கம் என்று அர்த்தம். இவனோடு நட்பு பாராட்டுவதிலும் அவர் தங்கம்தான். என்ன அவருடைய பாக்கெட் கொஞ்சம் கனமாக இருக்கவேண்டும். இருந்தால் கணக்குப் பார்க்காமல் பொழிந்து தள்ளிவிடுவார். சோனா ஜூவல் ஒர்க்ஸ் என்று பட்டறைக்கு பெயர். ஆக சோனா என்கிற டைட்டில் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. பிறகானால் சோனா என்றே அவரை சுருக்கமாக அழைக்கும்படியாயிற்று. உற்சாகமான அமர்வுகளின் போது இவன் அவரை ‘சோனா’ என்றழைப்பதும், உடன் மாற்றாக அவர் இவனை ‘என்ன தனா?’ என்று கேட்பதும்...ஒரே பிரவாகம்தான் அந்த இடத்தில்.
ஜில்லுவின் முகத்தில் குருவம்மா அப்பிக்கிடந்தது குறித்து இவன் கவலை தொனிக்கக் கூறியதை அக்கறையுடன் கேட்டுக்கொண்டார் சோனா. சரி, பட்டறையில் வைத்துப் பேச வேண்டாமே என்று இருவரும் தெற்கு வீதியை விட்டே வெளியே வந்தனர். “சிவகங்கைப் பூங்காவுக்குப் போகலாமா” என்று இவன் கேட்டதற்கு உடனே தலையை ஆட்டி மறுத்தார். “நூலகம்?” ம் ஹீம்..அங்கே பேச முடியதில்லையா..” “ பெரிய கோவில்?” “எதுக்கு, கூட்டமால்ல இருக்கும்?” “ வேற எடம் கிடையாதே?”
எதுவும் மிண்டாமல் திலகர் திடலை ஒட்டிய கிளினிக்குகளை வேடிக்கை பார்த்தவாறு நடந்துகொண்டிருந்தார் சோனா. அந்திச்சந்தை காய்கறி வர்க்கங்களுடன் கலகல வென்றிருந்தது. சந்தை முனையில் ஒரு மதுச்சாலை உண்டு. ஒரு வேளை பிரச்சனையின் உக்கிரம் கருதி,
சோனா தன்னை அங்கே அழைத்துச் செல்கின்றாரோ? இவனுக்கு அப்படியான நினைப்பே மயக்கமும், மகிழ்வும் அளித்தது. உரையாடலுக்குச் சாதகமான தருணம் அது. பிரச்சனைக்கு அவ்வேளை தீர்வும் கண்டெடுக்கலாம். ஆனால் சோனா மதுச்சாலையைக் கடந்து ஸ்டேட் பாங்க் முனையில் நின்று எதிரும் புதிருமாய்க் கடந்து சென்ற வாகனங்களின் மேல் கவனம் கொண்டார். மெல்லிய சினம் தலைக்கேறிற்று இவனுக்கு. வெறுமனே மதுச்சாலையைக் கடந்து செல்வதைவிடவும் துயரார்ந்த சந்தர்ப்பம் எதுவும் இருக்குமா?
சோனா சற்றுப் பூடகமான முகப்பாவனை கலந்து தெரிந்தார். இவன் சற்று கழிவிரக்கத்துடன் அவரைப் பார்த்தான். “எலேய் கம்னாட்டி பார்த்துப்போடா” என்று கையை வேகமாக வீசி தொலைவில் போய்விட்ட டூவீலர் காரனைத் திட்டினார் சோனா. அவனால் பாதிப்புக்குள்ளாகவிருந்து தப்பித்த மற்றொரு டூவிலர்காரன் சற்று நன்றியுடன் இவரிடம் தலையை ஆட்டினான். அப்போதைக்கு சோனாவின் முகம் கர்வத்தில் முக்குளித்து அடங்கிற்று.
“இந்நேரம் செப்டம்பர் பத்தொம்பது கதையாயிருக்கும், தப்பிச்சிக் கிட்டானுவோ..”
சொல்லிவிட்டுத் தானாகச் சிரித்துக்கொண்டார். இவன் வேறுவழியில்லாமல் செப்டம்பர் பத்தொன்பதை நினைவில் கொண்டுவந்தான். “ கரந்தை தாண்டினா அங்கொரு காட்டுக்குள்ள பனங்கள்ளு எறக்கி ஃப்ரெஷ்ஷா குடுக்கறானுவோ தனா. ஏறுங்க வண்டியில்” அன்று சாயங்காலம் போல வீட்டுக்கு முன் வந்து நின்று சோனா அழைத்தபோது, தனா தீர்க்கதரிசனமாய் அதை நிராகரித்திருப்பானேயானால், ஜில்லு இப்போது போல ஏகக்கெடுபடி காட்டியிருக்க வாய்ப்பே இல்லை.
இவனைப் பின்னால் அமர்த்திக்கொண்டு சோனா தான் வண்டியை ஓட்டினார். வண்டி கொடிமரத்து மூலையைத் தாண்டும் போதுதான் அந்த ஏழரை வந்தது பிறிதொரு வாகன வடிவில். அடுத்த நிமிடத்தில் சோனா ஒரு பக்கமும் தனா மறுபக்கமுமாய் நடுச்சாலையில் கிடந்தனர். நூற்றி எட்டு வந்ததும் தெரியாது, இவர்களை அள்ளிச்சென்றதும் தெரியாது. மயக்க நிலை.
நினைவு திரும்பி இவன் விழித்தபோது தான் கிடப்பது பிரசித்தி பெற்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று எவரும் சொல்லாமல் புரிந்தது. தலை, கால்கள், கைவிரல்களை எல்லாவற்றிலும் கட்டுகள். தையல் போட்டு முடித்திருந்தார்கள். தலையும், விரலும் வலிக்கவே செய்தது. மயக்க மருந்து பெரிதாக வேலை செய்யவில்லை. எப்படிச்செய்யும்? தலையை லேசாகத் திருப்பினான். ஜில்லு சினிமா கதாநாயகியைப் போல சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். அந்த நிலையிலும் அது இவனுக்கு ஆனந்தம் அளித்தது. அடுத்த கட்டிலில் சோனா. கால்கள் இரண்டிலும் அவருக்குக் கட்டுகள். அவருடைய சகதர்மினியைக் காணோம். அந்த இடத்தில் ஒரு ஃபிளாஸ்க் இருந்தது. நண்பர் துணைக்கு இருக்கிறாரே என்று இவனுக்குப் பெரும் ஆறுதல். கள்ளும் குடிக்காமலே இத்தனை களேபரம் அந்த செப்டம்பர் பத்தொன்பதில்.
சோனா இன்றைக்கு என்ன மாதிரியான நிலையில் இருக்கிறார் என்பது துளியும் பிடிபடவில்லை இவனுக்கு. ஆனால் மெல்ல மெல்ல நகர்த்தி, பழைய பஸ் ஸ்டாண்டுப் பக்கமாக இவனைக் கொண்டு வந்திருந்தார். திருவள்ளுவர் டிப்போ பக்கமாக நிறுத்தி இவன் தோளைத்தொட்டு “ அது ஒண்ணுமில்ல தனா. அடிபட்டப்போ மண்டையோட்டுல ரெண்டு விரிசல் இருக்குன்னு ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து சொன்னானுவுல்ல. இன்னம் கொஞ்சம் நாள் அந்த எஃபெக்டு இருக்கத்தாஞ் செய்யும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மத்தபடி உங்க ஜில்லு ஜில்லுதான். அதுல குருவம்மாவாவது, கருத்தம்மாவாவது. பஸ்ஸூக்கு சில்ற இருக்குல்ல தனா? கெரஹம் என்னுகிட்ட ஐநூறுதாம் கெடக்கு..”
விரல் நுனியில் ஐநூறை எடுத்துக்காட்டி உடனே அதை பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்ட சோனா அடுத்ததாக நடையைக்கட்டி ஜனத்திரளில் கலந்து மறைந்தார்.
“பட்டறையில் கொஞ்சம் வேலை இருக்கு. இல்லேன்னா ஒரு டாஸ்மாக்கா பாத்து உக்காரலாம் தான்” சோனா போனால் போகிறதுங்கிற தொனியில் உதிர்த்துக் கொண்டே சென்ற வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி அரிய சேகரமாக்கிக் கொண்ட இவன், பிற்பாடு பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தான். வாழ்வு குறித்த எந்த சிக்கலுக்கும் விரல் நுனியில் தீர்வு வைத்துள்ள தன் நண்பரைக் குறித்து இவனுக்கு அப்போதும் மாற்று அபிப்ராயம் ஏதுமில்லை.
உம்மா - அம்மா
வாப்பா - அப்பா
வாப்பும்மா - பாட்டி
அல்லாபுரம் - இறைவனிடம்
குல்உ - பெண்ணுக்கான விவாகரத்து உரிமை
மூமீன்கள் - இஸ்லாமியர்
காஃபிர் - இறை மறுப்பாளர்
ரப்பு - இறைவன்
தங்ஙள் - மந்திரவாதி
மாமு - மாமா
நவம்பர், 2016.