கிழவி கொல்லைப்பக்கம் போவதற்கு எழுந்தாள். கொல்லைப் புறத்தில்தான் கக்கூஸ் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே எல்லாம் இருக்கிற குச்சாக அவள் இருப்பிடம் இருக்கவில்லை.
குளிக்கத் தனியிடம், ஒதுங்கத் தனியிடம் என்று பின்னால் பெரிதாகக் கட்டிப் போட்டிருந்தான் மகராஜன் லூர்துசாமி. வீடும் பெரிய வீடு.
நீளமும் அகலமுமாய் லூர்துசாமியின் மனதைப் போலவே பெரிதாக இருந்தது. லூர்துசாமியின் சொத்து விவகாரத்தில் கிழவியின் கணவர் - பெரிய வக்கீல் - பிரமாதமான வெற்றியைத் தேடித் தந்தார். அதனால் இந்த வீட்டில் அவரையே இருக்கும் காலம் வரை இருக்கச் சொல்லி விட்டான். வாடகை அது இது என்று எதுவும் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். ஆனால் ஜம்புநாதன் பிடிவாதம் அதற்கும் மேலே இருந்தது. குடக் கூலி தராமல் ஒரு வீட்டில் குடியிருப்பது வேஷ்டி இடுப்பில் தங்காமல் நழுவி விடுமோ என்று பயந்து நடுங்கும் நிர்ப்பந்தம் போல என்று அவர் லூர்து சாமியிடம் சொல்லி விட்டார். ‘சரி, மாசம் இருபது ரூவா குடுங்க. நான் குடுக்கற பெல்ட்டா இருக்கட்டும்‘ என்று அவனும் சிரித்துக் கொண்டே போய் விட்டான். முப்பது வருஷத்துக்கு முன்னயே இந்த வீட்டு வாடகை நூத்துக் கணக்கிலே இருந்திருக்கும். கிழவியின் கணவர் போன பிறகும் லூர்துசாமி கிழவியை வீட்டைக் காலி பண்ணச் சொல்லவில்லை. வாடகையும் அதே இருபது ரூபாய்தான்.
கிழவி எழுவதற்கும், வாசல் வழியாக வந்த உருவம் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. மாலி. நல்ல உயரம். விரிந்த நெஞ்சும், முன்னால் குடமாக வந்து விழுந்து விடாத வயிறும், நீளமான கைகளும் கால்களும் விறைப்பாக நின்றன.
‘மாலியா? வா. வா. இப்பதான் வழி தெரிஞ்சுதா?‘ என்று கிழவி மலர்ச்சியுடன் வந்தவரைப் பார்த்துச் சிரித்தாள். ‘நேத்திதான் மாரிமுத்து மூட்டை அரிசியும் பருப்பும் குடுத்துட்டு போனான்.‘
‘பத்து நாளைக்கு மின்னதானே இங்க வந்து ஆளை அடிக்கிற ஏழெட்டு பூரி கிழங்கை சாப்டுட்டு அரை சேர் காப்பி குடிச்சிட்டு போனேன் ‘ என்றார் மாலி ஊஞ்சலில் உட்கார்ந்து சுற்றிலும் பார்வையை செலுத்தியபடியே. அவர் முதல் முறையாக வந்த போது கூடத்தில் தென்பட்ட இருட்டும், கசட்டு நெடியும் காரலும் முற்றிலும் நீங்கி அந்தி மாலையிலும் ஒரு பூசிய வெளிச்சம் இப்போது மலர்ச்சியுடன் வலம் வருவது போல் இருந்தது.
‘ஆமா. இங்க வரதுக்கு நாள் கணக்கு பாக்கணுமாக்கும்!‘ என்ற கிழவி சமையல் அறையைப் பார்த்து ‘அம்பா, காப்பி எடுத்துண்டு வா. மாலி வந்திருக்கான்‘ என்று கத்தினாள்.
‘இதோ வந்துண்டேயிருக்கேன்‘ என்று கையில் புகை விடும் டவரா டம்ளருடன் அம்பா வந்தாள்.
‘எள்ளுன்னா எண்ணெங்கறது இதானா?‘ என்று அவர் சிரித்தார். கிழவி மாட்டுப் பெண்ணைப் பெருமையுடன் பார்த்தாள்.
‘சித்தே இருங்கோ. ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாம்‘ என்றாள் அம்பா.
‘இங்க வரணும்னா வரதுக்கு முன்னாடி நாலு நாள், திரும்பிப் போனதுக்கு அப்புறம் நாலு நாள்னு வாயைக் கட்டி வயத்தை அமுக்கினாதான் பழைய உடம்பாறது. எனக்கு ஒண்ணும் வாண்டாம். நா கிளம்பிண்டே இருக்கேன்‘ என்றார் மாலி.
அம்பா மாமியாரைப் பார்த்தாள். கிழவி ‘அவன் போக்கில விடு. ஒரு வார்த்தையா அவன்
சொன்னா சொன்னதுதான். சரி. காப்பியைக்
குடிச்சிண்டிரு. ரெண்டு நிமிஷம் நான் கொல்லப் பக்கம் போயிட்டு வந்துடறேன்‘ என்று சொல்லி விட்டுப் போனாள்.
காப்பி நன்றாக இருந்தது. அம்பாவின் கை மணம் அப்படி. மாலி அதை அவளிடம் பலதடவை
சொல்லியிருக்கிறார். ‘சும்மா சொல்றேள்‘ என்று அவள் அதை இரண்டு வார்த்தைகளில் மறுத்து விடுவாள்.
‘குழந்தை நான் வரச்சே வெளியே ஓடிப் போயிண்டிருந்தானே. பெரீப்பான்னு ஒரு கத்தல். கண்ணைத் தூக்கிப் பாக்கறதுக்குள்ளே மாயமா மறைஞ்சிட்டான்‘ என்று அம்பாவைப் பார்த்துச் சிரித்தார்.
‘சாயங்கால டியூஷனுக்கு போயிருக்கான்‘ என்றாள். பிறகு அவளாகவே தொடர்ந்து ‘அவரும் இன்னிக்கி ஆபீஸ் ஜோலின்னு காலங்காத்தாலயே மாயவரம் போயிருக்கார்‘ என்றாள். அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார்.
அம்பா வெடவெடவென்று கொடி சம்பங்கி போல நின்றாள். சாயங்காலக் குளியலை முடித்து விட்டுக் கோடாலி முடிச்சு போட்டிருந்தாள். நெற்றியில் நாலைந்து கறுப்பு மயிர்கள் முன்னால் வந்து விழுந்து அவளது சிவப்பு நிறத்துக்கு சவால் விட்டன. மஞ்சள் நிறத்தில் ஒரு சாதாரணப் புடைவையும்
இளஞ்சிவப்பு நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். காதில், மூக்கில், கழுத்தில் எதுவும் இல்லை. ஆனால் இந்த இல்லாததையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் போ என்று முகத்தில் அப்படி ஒரு பளபளப்பும் பொலிவும் மின்னின.
அவர் அவளைப் பார்த்த போது அம்பாவும் அவரை நோக்கினாள். போலிக் கூச்சம், அரைக்கண் பார்வை, வேண்டாத வெட்கம் எதுவுமின்றி நேரடியான கூர்மையான பார்வை. தீட்டினாற் போன்ற கரும் புருவங்களின் நிழலில் அலையும் கண்கள்.
மாலி அவளிடம் ‘நேத்திக்கி சீமாவ தஞ்சாவூர் பஸ் ஸ்டான்ட்ல பாத்தேன். இங்க எங்கேன்னு கேட்டேன். அவன் பேத்தி அமெரிக்காலேர்ந்து வந்திருக்கு, அதுக்கு கார்த்திகை தீபம்
காமிச்சிட்டு திருவண்ணாமலைலேர்ந்து திரும்ப வரேன்னான். பேசிண்டிருக்கச்சே பரமுவைப் பத்திச் சொன்னான். இன்னிக்கி இங்க வரப் போறேன்னான். பரமு கடன் பாக்கியப் பத்தி கவலைப்படாம டிமிக்கி குடுத்துண்டுருக்கான். வீட்டு வாசல்ல வந்து நின்னு கத்தி அவன் மானத்த வாங்காம விடப்போறதில்லேன்னு என் கிட்டயே கத்த ஆரம்பிச்சுட்டான்‘ என்றார்.
அவருக்கு எதிரில் நின்றிருந்தவள் அங்கிருந்து வந்து அவருக்கு வலது பக்கத்தில் சற்றுத் தள்ளி நின்றாள். அங்கிருந்து அவள் பார்வைக்குக் கொல்லைப்புறம் தெரிந்தது.
‘சீமா வரது தெரிஞ்சுதான் அவர் மாயவரம் போயிருக்கார். எவ்வளவு நாள் இப்பிடி ஓடி ஒளிஞ்சு திரிய முடியும்? எட்டு மாசமா அவருக்கு வட்டி கூட குடுக்கலை. இன்னும் ரெண்டு மூணு பேர் கிட்ட வாங்கியிருக்கார். அவா சீமா மாதிரியில்லை. உள்ளூர்க்காரா. சம்பளம் வந்த அன்னிக்கி ஆபீஸ் வாசல்ல போய் நின்னு கிடுக்கிப் பிடி போட்டு வட்டியை வாங்கிண்டு போயிடறா. இப்பல்லாம் வேலைக்கு ஒழுங்கா போய் முழு மாசச் சம்பளம் வாங்கினோம்னு இல்லவே இல்லையே. இதெல்லாம் போக இன்னும் உங்களுக்கு கொடுக்க வேண்டியது வேற தனியா இருக்கு‘ என்றாள் அம்பா மெல்லிய குரலில்.
‘என்னோடது பத்தி இப்ப என்ன?‘ என்றார் மாலி முகம் சுருங்க. அதைப் பார்த்து அம்பா ‘இல்லயில்ல. தப்பா நினச்சுக்க வாண்டாம்‘ என்றாள்.
மாலி அவளிடம் ‘நா சீமா கிட்ட சொன்னேன். பரமுவோட தோப்பனாருக்கும் என்னோட சித்தப்பாக்கும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் வியாஜ்யம் இருந்தது. என் சித்தப்பா அவருக்கு தர வேண்டியதை வாங்கி உன் கிட்ட தந்துடறேன். நீ அனாவசியமா அங்க போய் கூச்சல் குழப்பம் பண்ணிண்டு நிக்காதே முக்யமா என் சித்தப்பா பண விவகாரம் பத்தி பரமு கிட்ட மூச்சு விடாதே. அவனுக்கு தெரிஞ்சா இப்ப நேரா என் சித்தப்பா கிட்டயே போய் நின்னு வாங்கிண்டு போயிடுவான்னு சொல்லியிருக்கேன்‘ என்றார்.
அம்பா அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள். ‘எனக்கு இது மாதிரி ஒண்ணு இருக்குன்னு தெரியவே தெரியாதே‘ என்றாள்.
மாலி ‘இருந்தாத்தானே?' என்றார் மென்னகையுடன். அவள் பார்வை கொல்லையை அளைந்தது. காற்றில் ஆடும் செடியின் இலைகளைத் தவிர வேறு நடமாட்டத்தைக் காணோம். வாசல் கதவருகே சென்று தாழ்ப்பாளைப் போட்டாள். திரும்ப வந்து ஊஞ்சலுக்கும் சமையல் அறை வாசலுக்கும் நடுவே நின்றாள். அவரை விழுங்கி விடுவது போலப் பார்த்தாள். அவர் எழுந்து அவளருகே சென்றார். திரும்பி வந்து ஊஞ்சலில் உட்கார்ந்த போது உடம்பு வெத வெதவென்று சுட்டது. மஞ்சள்பொடியின் வாசனையும் ஏதோ பவுடரின் நறுமணமும் சேர்ந்த கலவையின் மென்மை நாசியருகில் உரசிக் கொண்டு நின்றது.
அம்பா போட்ட தாழ்ப்பாளை நீக்கி விட்டுப் பழைய இடத்தில் வந்து நின்றாள்.
‘இந்த மாசமாச்சும் சம்பளம் கொஞ்சம் ஜாஸ்தியா வந்ததா?‘ என்று கேட்டார்.
‘எப்படி வரும்? வேலைக்கு ஒழுங்காப் போனாத்தானே? எதுக்காக அந்தக் கம்மனாட்டி இந்த மாதிரி அழிச்சாட்டியம் பண்றான்னு தெரியலியே' என்று அவர் கேள்வியைக் கேட்டுக் கொண்டே கொல்லையிலிருந்து உள்ளே வந்த கிழவி பதிலையும் சொன்னாள்.
தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்த அம்பா சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள். கிழவி தொடர்ந்து ‘கொழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். நாளைக்கு தான் கடேசி நாளாம். ட்யூஷன் வாத்திக்கும் ரெண்டு மாசம் சம்பளம் பாக்கி. அவன் என்னோட ஒண்ணு விட்ட தங்கையோட மாப்பிள்ளை. என்னதான் ஆயிரம் சொந்தம்னு இருந்தாலும் வேளா வேளைக்கு அவனுக்கும் வயத்துல மணி அடிக்காதா என்ன? பரமுவானா எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி எனக்கென்னன்னு கெடக்கான். ஒழுங்காதான ஆபீஸ் போயிண்டு வந்ததுண்டு இருந்தான். யார் கண் பட்டதோ?‘ என்று கோபமும் ஆற்றாமையுமாகப் பொரிந்தாள்.
‘சரி, பீஸு சம்பளமெல்லாம் எவ்வளவு ஆகும்னு எனக்குத் தெரியல' என்று மாலி தனது பர்சிலிருந்து ஒரு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கிழவியிடம் கொடுத்தார்.
‘இவனோட அப்பா இருந்த வரைக்கும் இங்க லக்ஷ்மி கொழிச்சு தாண்டவமாடிண்டு இருந்தா. கையை நீட்டிண்டு தினம் பத்து பேர் வந்து பணம் வாங்கிண்டு வயிறார சாப்டுட்டு போவா...இந்தக் கையாலேயே எவ்வளவு பண்ணியிருக்கேன்? இவன் என்னடான்னா ஆத்துல இருக்கற மூணு ஜன்மத்தைக் கூடக் காப்பாத்தத் துப்பில்லாம திரியறான். ஆறு மாசத்துக்கு மின்னால ஆரமிச்சு இன்னிக்கு வரைக்கும் நீயும் குடுத்துண்டேஇருக்கே. நாங்களும் வாங்கிண்டே இருக்கோம். மளிகைக்காரன் மானம் போற மாதிரி கத்தறத நிறுத்தினயே‘ என்று கிழவி மாலியைப் பார்த்தாள்.
கிழவியின் அரற்றலைப் பார்க்க அவருக்கு வருத்தமாக இருந்தது. விரிந்தும் பரந்தும் தழைத்திருந்த மரம் கொஞ்சம் கொஞ்சமாய் சாய்வதைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லைதான்.
‘ஆமா. லக்ஷம் லக்ஷமா கொண்டு வந்து இங்க கொட்டிப்பிட்டேன். என்னவோ அவசரத்துக்கு நம்மளால முடிஞ்சா உதவி பண்றோம். அதுவும் முடியறதுனால பண்றோம்' என்றார் மாலி.
கிழவி சொன்னது சரிதான். பரமு சுமாராக சம்பாதித்துக் கொண்டு இருந்தான். ஒரு பெரிய அரசாங்க விற்பனைக் கம்பனியில் வேலை பார்த்தான். ஏப்ரலிலிருந்து செப்டம்பர் வரை வருஷாந்திரக் கணக்கை முடிக்க வேண்டும் என்று பகல் இரவு பாராமல் வேலை பார்ப்பார்கள். அந்த ஆறு மாதத்தில் ஓவர்டைம் நிறைய வரும்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அதன்பின்னர் பரமுவுக்கு கிளாவருடனும் ஜாக்குடனும் ஜோக்கருடனும் பழக்கம் ஏற்பட்டு அதனால் ஆபீஸ் விட்டதும் வெளியே போய் விடுவான் என்றும் சம்பளப் பணம் பாதி போகக் கடன் வேறு வாங்கி விளையாடித் தோற்று கடன்காரர்களைச் சம்பாதித்திருக்கிறான் என்றும் தெரிந்தது.
அந்த சமயத்தில்தான் மாலியின் வருகை நிகழ்ந்தது. பரமுவின் பெரியப்பா பையன்.
சிறு வயதிலேயே ஆர்மிக்குப் போனவர் என்று அவ்வப்போது குடும்பத்திலும் விசேஷங்களிலும் அடிபட்ட பெயர். சர்க்காருக்கு உழைத்தது போதும் என்று திரும்பி வந்தார். மரூரில் பத்து ஏக்கர் செழிப்பான விவசாய நிலத்தைக் குத்தகைக்காரன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பதான்கோட்டிலிருந்தே அவர் காபந்து பண்ணிக் கொண்டிருந்ததால் இங்கே வந்த போது வழக்கமாக நடக்கும் குத்தகைக்காரத் தகராறு எதுவும் ஏற்படவில்லை.
திருவையாறுக்கு வந்து ஒரு மாதம் கழித்து அவர் கிழவியைத் தேடிக் கொண்டு வந்தார். இரவு மணி எட்டரை இருக்கும்.
மாலியைப் பார்த்த கிழவி ‘அம்பா, யாரோ வந்திருக்காளேடி, யார் பாரு‘ என்றாள்.
அம்பா அவரைப் பார்த்து ‘வாங்கோ வாங்கோ‘ என்றாள். கிழவியிடம் ‘என்னம்மா இது? யார் வந்திருக்கான்னு தெரியலையா?‘ என்றாள்.
அவர் அம்பாவை அரை நொடி பார்த்தார். கண்ணைக் கூச வைக்கும் சௌந்தர்யம். அவர் கண்ணைப் பிட்டு கிழவி மேல் வைத்தார்.
‘‘ஒரு மாசம் கழிச்சு தாமசமா வந்ததுக்குதானே இந்தத் திட்டு ! மன்னிச்சிக்கணும்'' என்று கிழவியை நமஸ்காரம் செய்தார்.
‘மகாராஜனா, தீர்க்காயுசோட இரு‘ என்று கிழவி சிரித்தாள். ‘நீ மட்டும்தான் வந்திருக்கியாமே. பொண்டாட்டி குழந்தைகள்லாம் வடக்கேதான் இருக்கான்னு சொன்னா. இந்த திருவையாத்துக் கிராமத்துல வந்து அதுகளும் என்ன பண்ணும்? கோயிலா காவேரியா என்ன இருக்கு இப்ப அப்ப மாதிரி? அப்பர் ஸ்வாமிகள்னா போறபோக்கில அரித்து ஒழுகும் வெள்ளருவின்னுட்டு போனார். இப்ப அது பஞ்சாயத்து போர்டு குளம் மாதிரின்னா தேங்கிண்டு நிக்கறது? பையன இஞ்ஜினிரிங் காலேஜ்ல போட்டிருக்கியாமே? பொண்ணுக்கும் ஏதோ வரன்
திகைஞ்சிருக்குன்னு சொன்னா. இப்பல்லாம் எம் பி ஏ படிச்ச பொண்ணுன்னா கொத்திண்டு போகத் தயாரா இருக்காளே. சினேகாவும் அதானே படிச்சிருக்கா?'
எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு பழசையும் புதுசையும் அப்டேட்டாக வைத்திருக்கும் கிழவியை மாலி ஆச்சரியமாகப் பார்த்தார்.
அம்பா அவருக்கு அருகே காப்பி கொண்டு வைத்தாள். நீண்ட விரல்களும், சிவந்த கைகளும் கண்ணில் பட்டுப் பிரிந்து போயின..
காப்பியை எடுத்துக் குடித்தார். ‘மாரிமுத்து என்ன சொல்றான்?‘ என்று கிழவி கேட்டாள். ‘குத்தகைய நானே பாத்துக்கிறேன். வேற யாருகிட்டயும் குடுக்க வேண்டாங்கறான்.‘
‘அந்தக் காலத்து ரத்தம் ! விச்வாசத் தைக் கக்கிண்டு நிக்கறது. நல்ல வேளை, அவனுக்கு பிள்ளை பேரன்னு யாரும் கிடையாது. இருந்தா கையில ஒரு கொடியை பிடிச்சிண்டு அய்யரே நீ எதுக்கு இப்ப இங்க வந்தே, போய் நாட்டை காப்பாத்து. நாங்க நெலத்தை எடுத்துக்கறோம்பாங்கள்‘ என்றாள் கிழவி.
அம்பாவும் மாலியும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.
‘என்ன ஒரே சிரிப்பா இருக்கு?‘ என்று கேட்டபடி பரமு உள்ளே வந்தான். மாலியைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் நின்றான். பிறகு சமாளித்துக் கொண்டு ‘வா, வா‘ என்றான். அம்பா சமையலறையை நோக்கிச் சென்றாள்.
‘எப்படி இருக்கே பரமு?' என்று மாலி கேட்டார்.
‘ஓ, நன்னா இருக்கேனே‘ என்றான். தலை கலைந்திருந்தது. கசங்கிய அரைக்கைச் சட்டை, மடிப்பு இல்லாத கால்சட்டை, கையில் சாயம் போன பிடி வார் அறுந்த ஒரு கறுப்புத் தோல் பை. வீடு கூட அவனை மாதிரிதான் அழுது வடிகிறது என்று ஒரு நினைவு ஓடி மறைந்தது. வெளிச்சம் சமையல் அறையில் மட்டும்தான் நின்று கொண்டிருக்கிறது..
அவர் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தினார்கள். சாப்பிட்டுக் கிளம்பும் போது அவர் கூடவே பரமுவும் வெளியே போனான். அவன் போனதுக்குக் காரணம் பதினைந்து நாள் கழித்து மாலி அவர்கள் வீட்டுக்கு வந்த போது தெரிந்தது
அன்று உள்ளே வரும் போதே மாலி அம்பாவைப் பார்த்து ‘ உடனே வரமுடியாம போயிடுத்து. மெட்றாஸ் போனேன். போன இடத்துல தங்க வேண்டியதாப் போச்சு. நேத்திக்குத்தான் வந்தேன். சித்திக்கு இப்ப எப்படி இருக்கு? டாக்டர் டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டு களேபரமா ஒண்ணும் சொல்லலியே?' என்று கேட்டார்.
அம்பா திகைப்புடன் அவரைப் பார்த்து ‘வாங்கோ. அம்மாவுக்கு ஒண்ணும் இல்லியே? டாக்டர், டெஸ்ட், களேபரமா நியூஸ் இதெல்லாம் என்ன? எனக்கு ஒண்ணும் புரியலையே‘ என்று விழித்தாள்.
அவர் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார். ‘சித்தி எங்கே?‘ என்று கேட்டார்.
‘இன்னிக்கி சங்கடகர சதுர்த்தின்னு கோயிலுக்குப் போனார். வர நேரம்தான்' என்றாள்.
மாலி சொன்னதிலிருந்து முந்தைய தடவை பரமு அவருடன் வெளியே சென்ற போது மறுநாள் தன் அம்மாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்றும், அவளது இருதயம் வீக்காக இருப்பதால் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறி அவரிடம் கடனாக ஆயிரம் ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டானாம். அடுத்த மாச சம்பளம் வந்ததும் அவரிடம் திரும்பத் தந்து விடுவதாகக் கூறினானாம்.
அவள் ஒன்றும் பேசாமல் நின்றாள். பரமுவின் உண்மை முகத்தை அவருக்குத் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது. பிறகு அவரிடம் மெதுவான குரலில் ‘இனிமேல் அவர் பணம் கேட்டா ஒண்ணும் குடுக்க வாண்டாம்.' என்றாள்.
‘சரி‘ என்றார் மாலி. அவர் மேலே ஒரு வார்த்தை அதற்குப் பிறகு அதை பற்றிப் பேசவில்லை. அவள் அணிந்திருந்த சிவப்புப் புடவையும், பரமுவைப் பற்றி பேசும் போது அவள் கண்களில் ஒரு முறை மின்னி மறைந்த கனலும் அவருக்கு அவள் மீது ஒரே சமயத்தில் பயத்தையும் இரக்கத்தையும் ஏற்படுத்தின.
இது நடந்து ஒருநாள் காலையில் மாலி பரமுவின் வீட்டுக்கு வந்தார். அவர் கூடவே ஒரு ஆள், காரியஸ்தன் மாதிரி இருந்தவன், வந்தான். கையில் கொண்டு வந்திருந்த ஒரு பெரிய மூட்டையைக் கூடத்தில் வைத்து விட்டுப் போனான் கிழவி அதைப்பார்த்து விட்டு மாலியிடம் ‘இதென்ன இவ்வளவு பெரிய மூட்டை ஆளை அடிக்கிறாப்பல?‘ என்று சிரித்தாள்.
மாலி ‘ஒண்ணும் பேசப்படாது' என்றபடியே மூட்டையைப் பிரித்தார். உள்ளேயிருந்து இரண்டு புடவைகளும், வேஷ்டி துண்டு சட்டைகளும், குழந்தை டிரஸ்களும் வெளியே வந்தன.
‘என்ன பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா?' என்றாள் கிழவி.
‘அதுக்கு இன்னும் பெரிசான்னா பண்ணணும்!' என்றார் அவர். கிழவியிடம் ‘சித்தி, எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைங்கோ. தீபாவளி வரதில்லையா? நான் பெரியவனாகி சம்பாதிக்கப் போய் சித்திக்குன்னு ஒண்ணும் பண்ணவே இல்லியே, அதுக்குத்தான்...' என்று நிறுத்தி விட்டார்.
கிழவி ‘எனக்கு ஒண்ணும் சொல்ல வரலை' என்று தழுதழுத்தாள் . அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது. ‘பிள்ளையாட்டம்னா நீ செய்யறே, நான் என்ன வாண்டாங்கறது? அம்பா, இங்க வாடி. மாலிக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிக்கோ‘ என்றாள்.
தீபாவளியன்று அவர் வந்த போது பரமுவும் வீட்டிலிருந்தான். எல்லோரும் புதிய ஆடைகளை அணிந்திருந்தனர். பரமுவின் முகத்தில் சந்தோஷம் எழுதி ஒட்டியிருந்தது. அவரைப் பார்த்ததும் ‘இந்த வருஷம் தீபாவளியை கிராண்டா பண்ண வச்சுட்டே' என்று சிரித்தான். அம்பா அவர் வாங்கிக் கொடுத்திருந்த கறுப்பும் மெஜந்தாவும் சேர்ந்த காஞ்சிவரம் பட்டுப் புடவையில் ஒளிர்ந்தாள்..குழந்தை ‘பெரீப்பா, வெடி வெடிக்கலாம். வாங்கோ' என்று அவர் கையைப் பிடித்து இழுத்தான். அவன் தொந்திரவு பொறுக்காமல் பரமு அவனை வெளியே கூட்டிச் சென்றான்.
‘தீபாவளி பட்சணம் எடுத்துக்கோ. நானும் ரெண்டு நிமிஷம் குழந்தை வெடிக்கறதை வேடிக்கை பாத்துட்டு வரேன்' என்று கிழவியும் அவர்களைத் தொடர்ந்தாள்.
அம்பா அவரருகே பட்சணத் தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள். அவர் ‘புடவை பிடிச்சிருக்கா உனக்கு?' என்று கேட்டார்.
‘ரொம்ப அழகா செலெக்ட் பண்ணியிருக்கேள். என் கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு கிடைச்ச ஒரே பட்டுப் புடவை இதுதான்' என்றாள்.
‘மொதல்ல வாங்கறப்போ புடவை ரொம்ப அழகா இருக்குன்னு தோணினது. ஆனா இப்ப நீ கட்டிண்டு வந்து நிக்கறச்சே உன்னோட அழகுதான் அதை அழகாக்கறதுன்னு தோணறது' என்றார். அவள் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்...
ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து அம்பாவே அவரைத் தேடி வந்தாள். காலை பத்து மணி இருக்கும். அவர் அப்போதுதான் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் அவர் கண்கள் விரிந்தன.
‘வா. வா' என்றார். வந்து ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். அவர் ‘ஒரு நிமிஷம்' என்று உள்ளே சென்று ஐந்து நிமிஷங்கள் கழித்து காப்பியுடன் வெளிப்பட்டார்.
அவள் ‘ஐயோ, இதெல்லாம் என்ன?‘ என்று கூச்சத் துடன் எழுந்து விட்டாள்
‘உக்கார். உலகத்துல நன்னா காப்பி போடாம இருக்கறது எப்படின்னு உனக்குத் தெரிய வேண்டாமா?‘ என்று அவள் எதிரே அமர்ந்து கொண்டார் மாலி.
அவள் ஒரே மடக்கில் காப்பியைக் குடித்து விட்டாள்.
‘ஏதோ குழந்தைகள்லாம் விளக்கெண்ணெய் குடிக்கற மாதிரி குடிச்சிட்டியே. தயவு செஞ்சு நன்னா இருக்குன்னு மட்டும் சொல்லிடாதே‘ என்றார். அவள் சிறிய புன்னகையை நழுவ விட்டாள். சற்றுத் தடுமாறும் உடல் மொழியைப் பார்த்தார்.
‘சரி, வந்த விஷயத்தை சொல்லு‘ என்று அவளுக்கு எடுத்துக் கொடுத்தார்.
‘அம்மாதான் அனுப்ச்சார். பணக் கஷ்டம்தான்..‘ என்று தயங்கினாள். அவர் அவள் மேலும் பேசக் காத்திருந்தார்.
‘நேத்திக்கு அவர் ஆபிசிலிருந்து வந்தார். நாலு நாளாய் மளிகைக் கடைக்காரன் ஒவ்வொரு மணிக்கு ஆளை அனுப்பிச்
சிண்டு இருந்தான்.இந்த மாச மளிகையைக் கடைக் காரன் தர மாட்டேன்னுட்டான். அக்கம் பக்கத்தில கடன் குடுத்தவாளும் கையை விரிச்சுட்டா. கொடுத்ததே வருமான்னு சந்தேகம் அவாளுக்கு. நியாயம்தானே? குழந்தைக்கும் ரெண்டு நாளா சாப்பிட சரியா ஒண்ணும் குடுக்க முடியாம எனக்கு அடி வயத்துல பகீர் பகீர்னு பயமும் கோபமுமா தலை கிறுகிறுக்கறது. இப்படி ஆயிடுத்தேன்னு அம்மா சுருங்கிக் கிடக்கார். மூணு மாச பாக்கி மளிகைக்கு. அவர் கிட்ட நேத்திக்கு சம்பள பணம் வந்திருக்குமே, குடுங்கோன்னு கேட்டேன். அவ்வளவுதான். ஒரே ரகளை. ஒரே
சத்தம். கையில ஒரு பைசா இல்லேன்னு என்னைப் பாத்துக் கத்தினார். மறுபடியும் சட்டையை மாட்டிண்டு கிளம்பிட்டார். ராத்திரி ஆத்துக்கு திரும்பி வரலை. நான் இங்க கிளம்பி வர வரைக்கும் கூட வரலை‘ என்றாள்.
‘சரி, எவ்வளவு?‘ என்று கேட்டார்.
அவள் ‘மூணு மாசத்துக்கு எட்டாயிரமா ஆயிருக்கு' என்றாள்.
‘ரெண்டு நிமிஷம் இரு. எடுத்துண்டு வரேன்‘ என்று எழுந்தார்.
‘இல்ல. அவ்வளவு வேண்டாம். ஒரு ரெண்டாயிரம் குடுங்கோ‘ என்றாள் அம்பா.
‘போதுமா?‘
‘முழுப் பணத்தையும் வாங்கிண்டு போய்க் கடனை அடச்சிட்டா அந்த மனுஷன் நல்லதாப் போச்சுன்னு சட்டைக் காலரைத் தூக்கி விட்டுண்டு சீட்டாடப் போயிடுவார். மிச்சமிருக்கற மளிகைக் கடைக்காரன் பாக்கி அவரையும் துரத்தினாதான பணத்தோட அருமை தெரியும்‘ என்றாள்.
அவர் அவளை வியப்புடன் பார்த்தார்.
பிறகு உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவள் பணம் வாங்கிக் கொள்ள இடது கையை நீட்டினாள்.
‘பணம் லக்ஷ்மியாச்சே. வலது கையில் வாங்கிக்கோ‘ என்றார்.
அவள் ஒரு நிமிடம் பேசாமல் நின்றாள். பிறகு அதுவரை புடவைக்குள் மறைத்து வைத்திருந்த வலது கையை வெளியே நீட்டினாள்.
மாலி திடுக்கிட்டார். அந்தக் கை வீங்கியிருந்தது. திட்டுத் திட்டாய்க் கறு ரத்தம் கட்டியிருந்தது.
‘ஐயோ ! என்ன இது?‘
அம்பா ஒன்றும் பேசாமல் நின்றாள்.
‘என்ன ஆச்சு? எப்படி ஆச்சு? மருந்து ஒண்ணும் போட்ட மாதிரி காணமே?‘ என்று கேள்விகளை அடுக்கினார்.
அம்பா ‘இல்ல. கீழ விழுந்துட்டேன்‘ என்றாள்.
மாலி ஒன்றும் பேசாமல் அந்தக் கையை எடுத்துத் தன் கையில் வைத்துப் பார்த்தார். வேதனையில் அவள் முகம் சுருண்டது.
‘இது ஒண்ணும் கீழ விழுந்து அடிபட்டது மாதிரி தெரியலையே? அடிச்சானா? விரல்லாம் பதிஞ்சிருக்கே?‘.
அவள் தலையை ஆட்டினாள். கண்களின் ஓரத்தில் நீர் திரண்டதைத் துடைத்துக் கொள்ளவில்லை. அவர் தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டினார். வாங்கி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
‘வீட்டுச் செலவுக்கு பணம் குடுன்னு கேட்டதுக்கு இவ்வளவு கோபமா?‘ என்று கேட்டார் மாலி.
‘இது அடிக்கடி வாங்கறதுதான்‘ என்றாள் அம்பா. ‘கேக்க யார் இருக்கான்னு தைரியம்தான். எங்கப்பாவும் அம்மாவும் அவா ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டுண்டு இருக்கறப்போ, கல்யாணம் பண்ணி அனுப்பிச்சவளைப் பத்திக் கவலைப்பட திராணி எங்க இருக்கு?‘ மறுபடியும் அவள் கண்ணில் நீர் தளும்பிற்று.
மாலி ஒன்றும் பேசாமல் அவளது இடது உள்ளங்கையை எடுத்துத் தனது இரண்டு உள்ளங்கைகளுக்கும் உள்ளே இருத்திக் கொண்டார். அவள் அதைத் தடுக்கவில்லை...
பணத்தைக் கொடுத்து விட்டு சில நிமிஷங்கள் பேசி விட்டு மாலி, கிழவியிடமும், அம்பாவிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றார். இருள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அம்பா வீட்டில் விளக்குகளைப் போட்டாள்.
‘இருட்ட ஆரமிச்சிடுத்து. டூஷனுக்குப் போன குழந்தை இன்னும் வரக் காணமே‘ என்று கிழவி சொல்லிக் கொண்டிருந்த போதே குழந்தை வெளியிலிருந்து ஓடி வந்தான். கையிலிருந்த புத்தகப் பையைத் தூக்கி கூடத்து மூலையில் எறிந்து விட்டு பக்கத்தில் இருந்த பானையிலிருந்து தண்ணீரை எடுத்து 'மடக் மடக்'கென்று குடித்தான்.
‘அம்மா, அப்பாவை நான் கிரௌண்டுல பாத்தேனே‘ என்றான். மைதானத்தைத் தாண்டித்தான் ட்யூஷன் வாத்தியார் வீடு இருந்தது.
‘எப்படா?' என்று கேட்டாள் அம்பா.
‘ட்யூஷனுக்குப் போறச்சே‘ என்றான்.
‘அப்பவேவா? இதுவரைக்கும் வரலயே?'‘ என்றாள் அம்பா.
‘நான் அப்பா கிட்ட ஐஸ்க்ரீம் கேட்டேன். காளி கடையில வாங்கிக் குடுத்தா. அப்ப மாலி பெரீப்பா ஆத்துக்கு வந்திருக்கார்னேன். எப்படா நீ பாத்தேன்னு கேட்டா. இப்பதான் ட்யூஷனுக்கு கிளம்பி வரச்சேன்னேன். அவனுக்கென்னடா இங்க வேலைன்னு கோபமா பல்லைக் கடிச்சா. சரி நீ போ ட்யூஷனுக்குன்னு சொல்லிட்டு வந்த வழிலேயே திரும்பிப் போயிட்டா. ஏம்மா இன்னும் வரலை? ஏதாச்சும் கோபமா?' என்று கேட்டான்.
‘இல்ல. ஏதாவது வேலை இருக்கும். அப்புறமா வருவா. நீ போய் காலைக் கையை அலம்பிண்டு வந்து ஹோம் ஒர்க் பண்ணு‘ என்றாள் அம்பா.
‘கோபம் என்ன வேண்டியிருக்கு கோபம்! குடும்பத்தைக் காப்பாத்தணும்கிற புருஷ லக்ஷணம் இல்லாதவனுக்கு? பொம்மனாட்டி உன்னோட வேலையை செய்யறப்ப மட்டும் அது வேணுமாக்கும்? அவனுக்கென்ன வேலை இங்கன்னு கேக்க நீ யாரு? இங்க வர அவனுக்குப் பிடிச்சிருக்கு. அவளுக்குப் பிடிச்சிருக்கு. நீ யார் கேக்கறதுக்கு?' என்றாள் கிழவி.
அம்பா திடுக்கிட்டு கிழவியின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். கிழவி புடவைத் தலைப்பால் விசிறிய படி, ஊஞ்சலில் படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன.
ஆகஸ்ட், 2020.