ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

வாசனை

ஆத்மார்த்தி

முதல் முதல்ல நான் சேமிச்சிக்கிட்ட வாசனை எது தெரியுமா..?  எனக்கு அஞ்சி வயசா இருக்கும்போது எங்கப்பார் ஒரு வெள்ளைக் கார் வாங்கிக் குடுத்தார். மெட்ராஸ் போயி கட்சி மீட்டிங்குக்குப் போயிட்டு வரும் போது அந்தக் காரை எனக்குன்னு வாங்கிட்டு வந்தாரு. அப்பா அப்ப யூனியன்ல பெரிய ஆளா இருந்ததால அவரே நேரா காசு குடுத்து வாங்குனாரா அல்லாட்டி யாராச்சும் அவரோட ஏவலடிமைகள் வாங்கித் தந்தாங்களான்னு தெரியாது. அந்தக் கார் பொம்மைலேருந்து லேசா ப்ளாஸ்டிக் கலந்த வாசனை அடிக்கும். முகத்தோட அந்தக் காரை வச்சித் தேச்சிக்குவேன். ஒரு வாசனையை எப்பிடி சொந்தமாக்கிக்கிறதுன்னு தெரியாத அந்த வயசுல ரொம்ப நாளைக்குத் தூக்கத்துலல்லாம் கூட அந்த வாசனை அடிச்சிருக்கு. 

தெருவில டெய்லி கிரிக்கெட் வெள்ளாடுவோம். எங்க வீட்டு வாசல்ல சிமெண்ட் கரைகளோட  சாக்கடை ஓடும். தெருவில கிரிக்கெட் வெளாடும் போது எல்லாருக்கும் ஒரே ரூல் தான். சாக்கடையில பந்து விழுந்தா பேட்டிங் பண்ணவன் தான் எடுக்கணும். ஒரு ஓரத்தில வாளி தண்ணியும் கப்பும் இருக்கும். இடது கையால பந்தை எடுத்து அதை கப்ல தண்ணி எடுத்து கழுவிட்டு கையையும் கழுவிட்டு மறுபடி வெளையாடணும். 

சாக்கடையில விழுந்த பந்து என்னதான் கழுவினாலும் சாக்கடைக்குன்னு ஆதாரமா இருக்குற ஒரு வாசனையைத் தன்னோட உடம்புல பூசிக்கிட்டாப்லயே இருக்கும். இது எனக்கு மட்டும் தான்னு இல்லை பட்டாம்பூச்சின்னு பட்டப்பேரு உள்ள என் பக்கத்து வீட்டு சத்யராஜூக்கும் இதே தோணுனதா சொல்லி இருக்கான். அதை எடுக்க நேர்ந்தப்பல்லாம் பின்னால வீட்டுக்குள்ற நொழஞ்சதுமே திட்டு விழும். பாரு சாக்கடைக்குள்ள கைய விட்டுட்டு திரியுது பன்னிமாதிரின்னு அம்மா வைய்யும்.

எறி பந்துன்னு ஒரு வெளாட்டு. ஓடும் போது அடுத்தவன் முதுகைக் குறிபார்த்து எறியணும். மிஸ் ஆவுறதுக்காகவே வளைஞ்சி வளைஞ்சி ஓடுவம்.ஆனாலும் பந்து முதுகுல படுற ஒரு கணம் தீ பிடிச்ச காடாட்டம் எரிச்சலா இருக்கும்.சத்யராஜ் அதுல கில்லாடி. அவன் அடி வாங்காம ஓடுறதுனாலயும் அவன் எறியுறப்ப மிஸ் ஆவாம மத்தவங்க அடி வாங்குறதாலயும் சொல்றேன். அவனுக்கும் எனக்கும் ஒரு ஏற்பாடு இருந்திச்சி. அவனை நான் எறிஞ்சா பிரச்சினையே இல்லை. அவனை குறிபார்த்து எறிய வராது எனக்கு,. என்னை அவன் எறியப்ப மாத்திரம் வேணும்னே வலிக்காம எறியணும். பதிலுக்கு அவனுக்கு நான் ஃபில்டர் சிகரட் வாங்கித் தரணும். 

ஓவியம்

சிகரட்டோட வெலையோ அல்லது அதை வாங்குறதோ கூட பிரச்சினையில்லை. பதிமூணு பதினாலு வயசுப் பசங்க அதை அடிக்கிறதுக்குப் படாத பாடு படணும். ஒரு சிகரட்டை அடிக்க கிட்டத்தட்ட அஞ்சாறு கிலோ மீட்டர்கள் நடந்தோ சைக்கிள்லயோ போயிவருவம். ஒண்ணே ஒண்ணா அடிக்கமுடியும்..? ரெண்டு மூணை அடிச்சிட்டு வரவேண்டியது தன். நான் பக்கத்ல வேடிக்கை பார்ப்பேன். எனக்கு ஒரு இழுப்பு தருவான் சத்யராஜ். நான் வேணா வேணான்னு சொல்லிட்டே அதை இழுப்பேன். சிகரட் வாசனை தூரத்ல ஒரு மாதிரி இருக்கும். பக்கத்ல நெடி தூக்கும். அடிச்சவங்க அதை மறைக்க பாக்கு ஏலக்கா எதுனா மிட்டாய் இதயெல்லாம் ட்ரைபண்ணா சிகரட் வாசமும் அதுவும் சேர்ந்து இன்னொண்ணா மாறும்.வாழ்க்கையே இன்னொண்ணா மாறுறது தானே..?

 பத்தாவது லீவுல என் வாழ்க்கையை ரெண்டா புரட்டிப் போடுற சம்பவம் ஒண்ணு நடந்துச்சி. இப்ப நெனைச்சாலும் அந்த நிகழ்ச்சி எனக்குள்ள முழுசா படருது.எத்தினி நாளானாலும் சில விசயங்களை மறக்க முடியாது இல்லீங்களா..?

சத்யராஜ் வீட்டு மாடில பானுன்னு ஒரு பொண்ணு. நாங்க பத்தாப்பு படிக்கும் போது அது காலேஜ் முத வருஷம் படிச்சிது. கொஞ்சம் ஒசரமா ஒடிசலா இருக்கும். அந்த வயசுக்கேத்த வளர்த்தி இருக்கும்.அழகா சிரிக்கும். எனக்கு அதைப் பார்க்குறப்ப எல்லாம் அப்ப ஃபேமஸா இருந்த ஒரு நடிகையோட சாயல்ல அவ இருக்கறதா தோணும். சத்யராஜ் என்னைய விட ஒரு வயசு மூத்தவன்.அவன் பானுவை விரும்பினான். அவனே எங்கிட்ட பலதடவை சொல்லிருக்கான்..‘டே...அவ இல்லாட்டி நா செத்துருவேண்டா..‘ அப்டின்னுவான். காதல்னு வந்துட்டா எப்பேர்ப்பட்ட ஆம்பளையும் கொழஞ்சி தானே போயிடறான்..? சத்யராஜூக்கு துணை நானு.எப்பவும் நா இல்லாம எங்கயும் போகமாட்டான்.கல்யாணத்துல தொணை மாப்பிள்ள மாதிரி. பானு பின்னாடியே போவம். நானும் சத்யராஜூம். 

ஒரு நாள் புதூர் பஸ் ஸ்டாண்டுலேருந்து 22ஆம் நம்பர் பஸ்ஸூல ஜன்னலோர சீட்ல உக்காந்திருக்கா பானு. அன்னிக்குன்னு பார்த்து சத்யராஜால வர முடியலை போல. எனக்கு அவன் தகவல் தெரிவிக்காததால வழக்கம் போல நா பானு காலேஜ் வரைக்கும் போயி வழியனுப்பிட்டு வந்துர வேண்டியது தான். கம்யூனிகேஷன் இல்லைன்னாலும் கடமை இது.தவறக் கூடாது. நா பஸ்ல ஏறிட்டேன். பானு என் பக்கத்ல நிக்கிறா. சரியான கூட்டம்.  நா கிட்டத் தட்ட பானுவோட நிழல் மாதிர் அவ உடம்புக்கு அத்தினி பக்கத்ல நிக்கிறேன். அவ அன்னிக்கு மஞ்சள் தேச்சி குளிச்சிட்டு வந்திருக்கா. தலையில மல்லியப் பூ  சரம் தொங்குது. அவ முகத்துலேருந்து வியர்வை சின்னச் சின்ன நதிகளா கொட்டுது.எனக்கு வழியே தெரியலை. அவளை ரசிக்கிறது தப்புன்றதை விட சத்யராஜுக்கு நா செய்ற துரோகம்ன்றதை விட எனக்கு அந்த நிமிசம் ரொம்ப முக்கியமாப் பட்டுது. என்னால என்னைக் கட்டுப்படுத்த முடியலை. கோரிப்பாளையம் பாலத்ல போயிட்டிருக்கப்ப ட்ரைவர் புண்ணியவாளன் சடர்ன் ப்ரேக் ஒண்ணு போட்டான். பஸ் பயங்கரமா குலுங்கிச்சி. அந்த தேவ வினாடி என் பக்கத்ல நின்ன பானுவோட கழுத்துல என் உதட்டால தேச்சேன். முந்தின நிமிசத்தோட கனவு ஒண்ணு அடுத்த நிமிசம் நனவாகுறதை விடவா சந்தோசம் வேணும்..?என்னால அந்த நொடியை மறக்கவும் முடியலை. அதை எடுத்துச் சொல்லவும் முடியலை. சத்யராஜோட அடிமையா அந்த பஸ்ஸூல ஏறின அதே நான் அப்டி ஒருத்தனை எனக்குத் தெரியவே தெரியாதுன்ற மனோபாவத்ல எறங்குனேன்.

இருங்க இன்னும் முச்சூடும் சொல்லி முடிக்கலை நானு. அவ கழுத்ல என் உதட்டை வச்சி தேச்சேன்.அவ்ளோ தான் அந்த நாலைஞ்சு நொடிகள்ல சாத்தியமாச்சு. ஆனா கழுத்து வியர்வையோட உப்பா அவ எனக்குள்ள நொழஞ்சிட்டா. சத்தியமா சொல்றேன். நான் பக்குவப்பட்டிருந்தேன்.அதுவரைக்கும் கொட்டுற மழையில திசை தெரியாத வண்டிக் கண்ணாடி மாதிரி சிதிலமா இருந்த வாழ்க்கை திடீர்னு மழை நின்ன நிமிஷம் எது திசை எது பாதைன்னு சரியாத் தெரியுறாப்ல பளிச்சுன்னு இருந்திச்சி...எனக்கு எது வேணும்னு தீர்கமா தெரிஞ்சுச்சி...சத்யராஜ் கிட்டேருந்து வெலகிடலாம்னே முடிவுக்கு வந்திட்டேன்.

சத்யராஜ் நல்லவன். எனக்கு என்னவோ கோவம் வருத்தம்னு தான் யோசிச்சானே தவிர என் மனசுக்குள்ள புகுந்த சைத்தானை அவனால அடையாளம் கண்டுக்க முடியலை. ரெண்டொரு தடவை என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணான். அப்பறம் விட்டுட்டான். நீயே வருவடா நாயேன்னு போயிட்டான். நானாவது வர்றதாவது.

முத்துன்னு ஈபி ஆபீஸ் ஸ்டாப் மேல மெக்கானிக் ஷாப் வச்சிருந்தவர் எனக்கு தூரத்து சொந்தம் அவர் கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். தொழிலை கத்துக்க செல்வம்னு எங்கப்பா கண் கலங்க சொன்னாரு.ஒழுங்கா படிச்சிருக்கலாம்லன்னு அக்காவும் அம்மாவும் அழுதாங்க...எனக்கு என்னவோ இவர்களது அன்பை விட பானுவின் மீதான மோகம் என்னை உந்தித் தள்ளுச்சி.

பானுவை தினமும் பஸ்ல ஏறி உக்கார்றாளான்னு பார்த்துட்டு தான் வேலைக்குப் போவேன். அவ திரும்பி வர்ற நேரம் டான்னு எதாச்சும் வண்டியை ட்ரையல் பாக்குறாப்ல புதூர் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து அவளை பார்த்துட்டு தான் வேலைக்குத் திரும்புவேன். ஞாயித்துக்கெழமை அவ எங்கனா கௌம்புனா நானும் பின்னாடியே போய்டுவேன்.

ஓவியம்

தற்செயல்னு நம்ம வாழ்க்கைல நடக்குற எல்லாத்துக்கும் பின்னாடி யார்னே தெரியாத யாரோட திட்டமோ இருக்குங்க.. எனக்கு அப்டி ஒண்ணு நடந்துச்சி..மே மாசம் வெக்கேஷன்ல பானு ஒரு நாள் எங்கயோ கௌம்புனா. நான் அன்னிக்கு லீவு. திடீர்னு அம்மா சொல்லிச்சி. இன்னிக்கு விசேசம்டா அம்மன் கோயிலுக்குப் போயிட்டு வந்துருன்னு. நானும் போனேன்.கோயில்ல சாமி கும்பிட்டு முடிச்சிட்டு பிரகாரத்ல ஒக்காந்து ஒரு நிமிசம் கண்ணை மூடித் திறக்குறேன் என் பக்கத்ல ஒக்காந்திருக்கா பானு. அவளோட சொந்தக்கார பொண்ணும் கைக்கொழந்தையைத் தூக்கிட்டு கோயிலுக்கு வந்திருக்காங்க. குழந்தையை பானு கையில தந்திட்டு அந்தக்கா எங்கயோ போச்சு. எங்களுக்குப் பேச சந்தர்ப்பமாச்சு. நா கை நீட்டினதும் அந்தக் குழந்தை எங்கிட்ட வந்திடிச்சி. ஒரு பட்டுக்குட்டி மாதிரி எல்லா திசையிலயும் பூத்த பேரில்லாத பூ மாதிரி பொக்கை வாயால சிரிக்கிது. என்ன பேர்னு கேட்டேன். ஷாதிகான்னு சொன்னதும் தன்னைத் தான்னு புரிஞ்சுகிட்டு மறுபடி சிரிச்சது.தூரத்லேருந்து பாக்குற யார்க்கும் அந்தக் குழந்தையோட பெற்றோர்னு என்னையும் பானுவையும் நினைக்க வாய்ப்பிருக்குல்ல..அந்த எண்ணமே எனக்குள்ள ஜிலீர்னுச்சு.அந்தக் குழந்தையோட மேனியிலேருந்து நெருக்கமா ஒரு பால்வாசனை கலந்த ஒரு நெடி அடிச்சிது.என் வாழ்க்கையில அத்தனை நெருக்கமா ஒரு குழந்தையை கவனிக்கிறது மொதல் தடவை.

பானு நேரா என் கண்ணப் பார்த்து கேட்டா செல்வம் என்னைய ஃபாலோ பண்றியா அப்டின்னா. நா எதுமே பேசாம இருந்தவன் இங்க நீ வருவன்னு தெரியாது பானு ஆனா உன்னைய தினமும் ஃபாலோ பண்ண தான் செய்றேன். எனக்கு உன்னைய ரொம்பப் பிடிக்கும்னு சொல்றதுக்குள்ள அவ கண்ண ரெண்டு தடவை பார்த்து மின்சாரம் தாக்கி நாக்கெல்லாம் உலர்ந்திட்டுது எனக்கு.

எதுமே பேசாம எழுந்து போறா. பின்னாடியே போனேன். பானு எதுனா சொல்லிட்டு போயேன் அப்டின்னு சொல்றேன். இன்னைக்கு தானே சொல்லிருக்க..கொஞ்சம் வெயிட் பண்ணு. சொல்றேன். ஆனா ஒண்ணு.வெயிட் பண்ணா பிடிக்கும்னு தான் சொல்வேன்னு தப்பா முடிவு பண்ணிராத..பிடிக்காதுன்னு சொன்னாலும் போயிடணும் என்ன என்றவள் நிற்காமல் போய்ட்டா.

கோயிலைச் சுத்தும் போது எண்ணெய் விளக்கு, இருட்டு, சூடம் இன்னபிறவெல்லாம் சேர்ந்து எரியுறப்ப அதோட புகையோட சேர்ந்து ஒரு வாசனை வரும். அதை வேற எங்கயுமே உணரமுடியாது.கூட்ட நாட்கள்ல மனுஷனோட வியர்வை மழையாப் பொழியும். அதோட எண்ணெய் எரியுற வாசனை சேரும். அதை அடிக்கடி கண்டுருக்கேன்.அன்னிக்கும் அப்டி தான் அதையும் பானுவோட வார்த்தைகளையும் சேர்ந்து பிசைஞ்சி ஞாபகமாக்கிக் கிட்டேன். கிட்டத்தட்ட பானுவோட நெனப்புலயே குடித்தனம் நடத்த ஆரம்பிச்சிட்டேன். அவ மூணாவது வருசம் படிச்சிட்டிருந்தா. திடீர்னு  ஒரு நாள் என்னையக் கூப்டா ‘நாங்க காலேஜோட கொடைக் கானல் டூர் போறம். நீயும் வந்துரு‘ன்னா. எங்கிட்டே நேரடியா சம்மதம் சொல்லலைன்னலும் இது பத்தாதா..?நான் ஒரு ஷோகன் வண்டியை எடுத்துக் கிட்டு முதுகுல காலேஜ் பசங்க போட்ற பேக் கண்ல கூலிங் கிளாஸூ ஷூன்னு பந்தாவா கௌம்பி போனேன். பானுவோட காலேஜ் பஸ்ஸை கிட்டத் தட்ட எஸ்கார்ட் குடுக்குறாப்ல ஃபாலோ பண்ணிப் போனேன். மறுநா காலம்பற பார்க்ல என்னையப் பார்க்க வந்தா பானு.. எங்காச்சும் போயிட்டு வரலாம் வான்னா. எனக்கு கிறுகிறுன்னு வந்திச்சி..என் வாழ்க்கையில தங்கமான ஒரு நாள் ரயில் சப்தத்த விட அதிகமா என் இதயம் துடிச்சதுன்னா பொய்யில்ல

பானுவைக் கூட்டிகிட்டு எடம் கிடைக்காம அலைஞ்சேன். கொடைக்கானல்லேருந்து பன்னெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு எடம். சினிமால்லாம் கூட ஷூட்டிங் எடுப்பாங்க.. இருட்டா காடாட்டம் இருக்கும். அங்கன தோதா ஒரு எடத்ல வண்டியை பார்க் செய்துட்டு லவ் பண்ணோம்.அவளுக்கும் என்னை ரொம்பவே பிடிச்சிருந்தது. நூறு முத்தம் குடுத்திருப்பேன். அதே பின்னங்கழுத்துல என் நாக்கை வச்சி தேய்ச்சேன். என் காதலோட தலைவாசல் இல்லியா...? அவ கண்ண மூடிக் கெறங்குனா.. அவளோட கை காலெல்லாம் முத்தமிட்டேன். வழக்கமா எல்லா இடத்துலயும் கிடைக்கிற பவுடர் தான் அவளும் போட்டிருந்தா.வழக்கமா எல்லாரும் உபயோகிக்கிற செண்ட்டைத் தான் அவளும் பூசியிருந்தா. ஆனாலும் சத்தியமா சொல்றேன். அவளோட உடம்புலேருந்து உற்பத்தியாகிற வாசனையை எந்தலோகத்திலயும் அனுபவிக்க முடியாது. நா தெணறினேன். என்னால அந்த வாசனையை ஞாபகத்தைத் தவிர வேறெந்த வழியிலயும் சேமிச்சிக்க முடியாதுன்னு நினைச்சப்ப அடைச்சிது. அதானே நெசம்..?

ஒரு உத்தமமான நகர்தலப்ப திடீர்னு போதும் செல்வம்னு எழுந்து கையைக் கட்டிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டா பானு. நா எதுமே பேசலை. முழுசா அவளோட கட்டுப்பாட்டுக்குள்ள வந்திருந்தேன்னு மட்டும் புரிஞ்சது. நான் அவளை மறுபடி கொண்டாந்து அடுத்த எடத்ல காலேஜ் க்ரூப்போட சேர்த்து விட்டேன். யாரும் கண்டுபிடிக்கலை நல்லவேளை.அவளோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருக்கு மாத்திரம் விசயம் தெரியும். அம்பிகா மாதிரி இருப்பா ஒருத்தி என்னை பார்த்து சிரிச்சா. நான் கௌம்பி மதுரைக்கு வந்திட்டேன்.

ஓவியம்

என்குரோச் மெண்டுன்னு முத்து மெக்கானிக் கடையை தூக்கிட்டாங்க கார்பொரேஷன்ல.வேலை இல்லாத சும்மா இருந்தேன். திடீர்னு ஒரு நாள் எங்க வீட்டு கதவை யாரோ தட்டுறது தெரிஞ்சு கதவ திறக்குறேன். அழுது வீங்குன மூஞ்சோட நிக்குறா பானு. என் கிட்ட ‘நாளைக்கு சாயந்திரம் தெப்பக்குளம்‘னு சொல்லிட்டு போயிட்டா. மறு நா தெப்பக்குளத்ல சந்திச்சம்.அவங்கப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபராம். காஞ்சிபுரம் போறாங்களாம். இன்னும் ரெண்டு நாள்ல அங்க போயிடுவாங்களாம். காலேஜையும் மாத்த போறதா அவங்கப்பா சொல்லிட்டார் போல.‘நான் போயி புது அட்ரஸ் காலேஜ் எல்லாத்தையும் எழுதி உனக்கு இன்லாண்ட் லெட்டர் அனுப்புறேன்.ராஜான்னு ஃப்ரம் அட்ரஸ்ல எழுதிருப்பேன். நீ யாரோன்னு நெனச்சி தூற எறிஞ்சுராத‘ன்னு அழுதா.‘என்னை மறந்துடாத‘ன்னு அழுதப்ப தலைல அடிச்சி சத்தியம் செய்தேன்..‘ஏய்...நீ என் பொண்டாட்டிடீ...மறக்குறதாவது‘ அப்டின்னு தைரியம் சொல்லி அனுப்பிச்சேன்.திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக்கிட்டே கௌம்பிப் போனா.

எந்த ஊருக்குப் போனானு தெரியல. எனக்கு எந்த லெட்டரும் வரலை. பத்து மாசம் ஆச்சி..பைத்தியக்காரனா ஆனேன். ஒரு நாள் எதுவுமே நடக்காதுன்ற உண்மை என்னை பார்த்து பரிகசிச்ச துக்கத்துல என் கையை நானே அறுத்துக்கினேன். ஆஸ்பத்திரில இருந்தப்ப ஒரு ஆஸ்பத்திரின்றது எத்தினி வாசனைங்களோட கூடாரம் தெரியுமா நண்பா..? மருந்து வாசனை ரத்தத்தோட வாசனை பினாயில் வாசனை. ஈரம் காயாத சுண்ணாம்பு வாசனை. வாந்தி பேதின்னு உடம்புலேருந்து உபாதைகளோட வாசனை. கையை அறுத்து நினைப்பு தப்புறப்ப செத்துருவேன்னு தான் தோணுச்சி..அந்த நேரத்துக்கு சத்யராஜோட அண்ணன் பாலாஜி கார்ல வந்துருக்க என்னைய கார்ல அள்ளிப் போட்டுட்டு ஜீஹெச் தூக்கிட்டுப் போனதால பொழச்சேன். சண்டாளி என் வாழ்க்கையில வந்து என்னைய ஒரு நாய் மாதிரி தூர எறிஞ்சுட்டு போயிட்டா..அவ அப்பிடி போனதே எனக்குத் தெரியாத அப்ராணியா இருந்திருக்கேன் பாருங்க.

அதுக்கப்பறம் ஒரு ஆறுமாசம் கழிச்சி கோரிப்பாளையத்ல ஒரு செருப்புக் கடையில வேலைக்கு சேர்ந்தேன். என் கூட சலீம் முரளின்னு ரெண்டு பேரு வேலை பார்த்தானுங்க.. நா அதிகமா பேசமாட்டேன்றதால என்னைய அவனுங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருச்சி போல..நான் எதுனா கேட்டா பயந்து செய்வானுங்க..எனக்கு ரெண்டு உபதளபதிகள் அவனுங்க..அங்கே புதுச்செருப்புக்களை பிரிச்சா ரப்பர் லெதர் ரெக்ஸீன்னு பலதரப்பட்ட மூலப்பொருட்களோட வாசனை அடிக்கும். எனக்கு லெதர் வாசனை ரொம்பப் பிடிக்கும்.

ஒரு நாள் கண்ணாடி போட்டு தலைமுடியை ஒரு பக்கமா ஒதுக்கி ஒருத்தி வந்தா. கூட ரெண்டு பொண்ணுங்க இருந்தாங்க.. அன்னிக்கு கடையில நானும் முரளியும் மாத்திரம் தான். முரளி மேலே குடோவ்ன்ல இருந்தான். நா தான் சர்வீஸ் பண்ணேன்.கிட்டத் தட்ட முப்பது ஜோடிக்கு மேல காமிச்சும் அவளுக்கு எதுமே பிடிக்கலை.ஒரு கட்டத்ல எனக்கு எரிச்சலாய்டுச்சி..அவ கேட்க கேட்க தருவிச்சி நான் அவ காலுங்க முன்னாடி வப்பேன் .நீயே பார்த்துக்கன்றாப்ல..அவளுக்கு எதுவுமே பிடிக்கலை.திடீர்னு அவ முகத்தைப் பார்க்குறேன்.மெலிசான குரல்ல எங்கிட்ட அவ நீங்க செல்வம் தானே.. நா பானுவோட கிளாஸ்மேட் அப்டின்னா..அவளை எனக்கு அப்பத் தான் அடையாளம் தெரிஞ்சுது.. போகும்போது என் கைல ஒரு துண்டு சீட்டை கொடுத்தா. இது என் நம்பர்.நைட் எட்டு டு எட்டரை மாத்திரம் பண்ணா நா எடுப்பேன். வீட்ல டீவீ பார்ப்பாங்க. முந்தியோ பிந்தியோ பண்ணி நான் எடுக்கலைன்னா எதுனா பேர் சொல்லி கேட்டுட்டு வச்சிடுங்கன்னு போயிட்டா..

அன்னிக்கு விட்டுட்டு அடுத்த நாள் ஃபோன் பண்ணேன். அவ எடுத்தா. நா ஜமுனான்னேன். அவ எங்கிட்ட கேஷூவலா நாலைஞ்சு நிமிஷம் பேசுனவ தெப்பக்குளத்துக்கு ஞாயித்துக் கெழமை வாங்க.. சாயந்திரம் ஆறுமணிக்குன்னு சொல்லிட்டு வச்சிட்டா.

நா போனேன். பானு பத்தி கதை கதையா சொன்னா. பானுவுக்கு என் மேல லவ்வெல்லாம் இல்லையாம். சும்மா ஒரு கிக்குக்காக என்னைய நாய் மாதிரி அலைய விட்டாளாம்.கொடைக்கானலுக்கு என்னைய வர வச்சி திரும்பி அனுப்புனது தன் மேல ஒருத்தன் எப்பிடி பைத்தியமா இருக்கான்னு எல்லார் கிட்டயும் பீத்திக்கிறதுக்குத் தானாம். அவங்கப்பா பார்த்த மாப்பிள்ளையைக் கட்டீட்டு சிங்கப்பூர் போயிட்டாளாம். என் கிட்ட பழகுனதெல்லாம் ட்ராமான்னு அவ சொல்லும் போது எனக்கு அழுகை வந்திச்சி. நா அழுதேன். ஜமுனா எனக்கு ஆறுதல் சொன்னா. உன்னை பார்த்தா பாவமா இருக்கும். அப்ப என்னால எதும் சொல்ல முடியலை. நீ அவளுக்காக கையெல்லாம் அறுத்துக்கினேன்னு தெரிஞ்சு ரொம்ப ஃபீல் பண்ணேன் அதான் உன்னை பார்த்ததும் உண்மைகளை சொல்லிடலாம்னு நினைச்சேன்னா.  எனக்குள்ளே எல்லாத்தையும் அப்பழுக்கில்லாம நம்பிட்டிருந்த ஒருத்தன் செத்துட்டான்னு தோணுச்சி. இப்ப இந்த ஜமுனா பிள்ளை வந்து எங்கிட்ட தகவல் தெரிவிக்கிறது கூட என் மேல உண்டான பரிதாபமா அல்லது பானு தான் இன்னமும் அந்தக் கதையை எழுதிட்டிருக்காளான்னு தெரியலை.எங்க போறதுன்னு தெரியாதவன் எந்தத் திசையில போனா என்ன..?

எனக்கு எப்பமாச்சும் லைஃப் பிடிக்காட்டி கண்ணன் காலனில சிங்குன்னு ஒருத்தன் பொட்லம் விப்பான். அதை வாங்கி இழுத்தா மனசுக்கு இதமா இருக்கும்னு தோணிச்சி. ஆமாங்க அது தேவமூலிகை. அரசாங்கம் வேற சொல்லும்.அதை இழுத்தப்பறம் உலகம் நமக்கு வேண்டிய வண்ணங்கள்ல தெரிய ஆரம்பிக்கும். அன்னிக்கு எனக்கு அது ரொம்பத் தேவையா இருந்திச்சி..என் கிட்டேருந்தே ஒரு பழவாசனை அடிச்சிது. நான் மழையில அழுதிட்டு வீட்டுக்கு எபிடி வந்து சேர்ந்தேன்னே தெரியலை. மழையோட எல்லாத் துளிகளும் என்னைப் பார்த்து பானு சிரிக்கிறாப்ல தோணிச்சி.

எனக்கு பானு மேல கோவம் வர்லை.கோவமே வர்லை. பானுன்னு நினைச்சாலே எனக்குள்ள எழுந்த மஞ்சக்கெழங்கு வாசனையும் அவ உடம்புலேருந்து பவுடரும் வியர்வெயும் கலந்து எழுந்த வாசனையும் என்னால மறக்கவே முடியலை. முள்ளை முள்ளால எடுக்கணும்னு சொல்வாங்கள்ல.. பானுவோட வாசனையை எனக்குள்ளேருந்து எப்பிடி எடுக்கன்னு தெரில எனக்கு. ஆனா எடுத்தே தீரணும்.

அதுக்கடுத்த காலம் ஒரே இழுவை தான். எனக்குள்ளேருந்து எதோ ஒண்ணை வெளியேத்தணும். சத்தியமா அது பானு இல்லை.எதுன்னு எனக்குத் தெரியலை.இல்லாத நோவுக்கு எல்லாமே மருந்துன்ற கதையா என்னைய நானே துரத்திட்டிருந்தேன். எனக்கு சிக்காம ஓடிக்கிட்டும் இருந்தேன். ஒரு நாள்  பழங்காநத்தம் பாலத்துக்கடில நின்னுட்டிருந்தேன். சாயந்திரம் ஏழு மணி இருக்கும்.என்னையக் கடந்து போன ஒரு ஆட்டோல பானு போறாப்ல இருந்திச்சி. என்னைப் பார்த்து சிரிச்சாப்ல தெரிஞ்சிச்சி.. தொரத்திட்டு ஓடுனேன். ஓடுறதா நினைச்சேன்னு தான் சொல்லணும். என்னாச்சின்னா கடந்து போன கார் ஒண்ணு என்னைய வீழ்த்தி வலது கால் முச்சூடும் கூழாய்டிச்சி. யாரோ வண்டி ஏத்தி ஜீஹெச்சுல சேர்த்தாங்க..எங்க வீட்ல எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னும் பேய் பிடிச்சிருக்குன்னும் அழுதாங்க.

எழுந்து நடக்க ஆறு மாசம் ஆச்சி. இப்ப ஒரு பெட்ரோல் பங்குல வேலை பார்க்குறேன்.பெட்ரோல் நிரப்புரவேலை. எனக்கு இந்த வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலை என் கையில இருக்குற பம்ப்பால வெளியேத்துறேன். வண்டிகளோ வாகனங்களோ அதுல வர்ற முகங்களோ எதுவுமோ எனக்கு ஈர்ப்பில்லை. எனக்குத்தேவை வாசனை. பெட்ரோலால மட்டுந்தான் என்னை எப்பவுமே தன்னோட வாசனைக்குள்ளயே வச்சிருக்க முடியுது. பானுவோட வாசனையில்லை இது. ஒரு அன்பான தாசியோட மடியில எப்போதும் புதைஞ்சு கிடக்குற மாமன்னன் நான். நான் எழும்போதெல்லாம் என்னைப் பிடிச்சி இழுத்து விடாம என்னைக் கட்டியணைச்சிக்குது அந்த வாசனை. நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தலைவா.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

மார்ச், 2018.