ஓவியம் பி.ஆர். ராஜன்
சிறுகதைகள்

வணக்கம் பி.ஏ.சார்

பாக்கியம் சங்கர்

தொண்டைமானுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒருவித கர்வம் மண்டைக்குள் ஏறி, கண்களின் வழியே எட்டிப்பார்த்தது. யாரையாவது கூப்பிட்டு சண்டையிழுத்துக் குத்த வேண்டும் போலிருந்தது. விதானம் நோக்கிக் கண்கள் மூடினாலே, தனக்கு கிடைக்கப் போகும் மரியாதைகள் முன்னால் பணிந்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தன. இனி, இந்த உலகம் எந்த வகையிலும் தன்னை ஏளனமாகப் பார்க்காது என்று நினைத்தபோது, சிகரெட்டை மிகவும் நிதானமாக உள்ளிழுத்து சுருள் சுருளாகப் புகையை விட்டான் தொண்டைமான். அவனது முகத்தில் வழிந்து கொண்டிருந்த அகம்பாவத்தைக் கவனித்த அமிர்தம் “டேய் பிரதமருக்கா பி.ஏ வா போற... கவுன்சிலர் ராணியாண்டதான எடுப்பா போற... அதுக்கு ஏண்டா இப்டி மூஞ்ச வச்சிகினு இருக்க... பகுலு தூக்குனவன்லாம் பிகுலு ஊதக் கூட லாயக்கு இல்லாம போவானுங்கன்னு சொல்லுவாங்கோ... நவுறு நவுறு” என்று புவனாவின் முன்னால் அம்மா சொன்னது தான் தொண்டைக்கு பெருத்த அவமானமாக இருந்தது. புவனாவும் அம்மா சொன் னதற்கு எகத்தாளமாகச் சிரித்தது இன்னமும் கடுப்பாக இருந்தது அவனுக்கு. இருந்தாலும் சமாளிக்கும் விதமாக “பர்சனல் செகரட்டரிக்கும்... எடுப்பு சோறுக்கும் வித்தியாசம் தெரியாத உன்கிட்ட... இன்னா சொல்றதுன்னே தெர்ல... கியுவுல நின்னு கிருஷ்னாயிலு வாங்குற உனக்கு ரிப்பன் பில்டிங்க பத்தி இன்னா தெரியும்... நம்ம பரம்பரைல பஸ்ட்டு அரசியல்வாதிய கலாய்க்குற... ரெகமண்டேசன் லட்டருக்கு வருவல்ல அப்ப வச்சுக்கிறேன் உனுக்கு” கித்தாப்பை விட்டுக் கொடுக்காமல் தொண்டை பேசியதை புவனா ரசித்தபடியே கடந்தாள். “மத்தியானம் சோத்துக்கு... வூட்டுக்கு வராத... ரிப்பன் பில்டிங்லயே பிரியாணி போடுவாங்களாம் சாப்புட்டு அங்கியே இருந்துக்கோ...” என்று ஜிலேபி மீனைச் சட் டியில் கொட்டி கல்லு உப்பை ஆய்வதற்காக எடுத்துப் போட்டாள். ஜிலேபியின் குழம்பு வாசம் தொண்டைக்கு இப்போதே அடித்த காரணத்தால் “யம்மோவ் மொத நாளு வேலைக்கு போறன் கலாய்க்குற... நாலு ஜிலேபிய வறுத்து வையி சரியா” என்று அம்மாவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி முத்திவிட்டு கிளம்பினான். அமிர்தம் சிரித்துக் கொண்டே ஜிலேபியை ஆய உட்கார்ந்து கொண்டாள்.

ராணி மங்கம்மாள் 4வது வார்டு கவுன்சிலர் என்கிற பெயர்பலகை பொன்னிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. தனது ஹீரோ சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான். ரெண்டு அடுக்கு மாடி வீடு. கீழ்தளம் அலுவலகமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில கரை வேட்டிகள் சோர்ந்த முகமாக உட்கார்ந்து கொண்டு கட்சிப் பத்திரிகையில் தலைவரின் புரியாத அறிக்கைகளோடு மல்லாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து நாயர் கடை தேநீர் வந்தவுடன்தான் சோர்ந்த முகங்கள்யாவும் மலர்ச்சி கொண்டன. கட்சிக்கொடி பொதித்த நீலநிற ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. தொண்டைக்கு பெருமிதமாக இருந்தது. இன்றிலிருந்து இந்த ஆட்டோவில் தானும் ஒருவனாக வலம் வரப் போகிறோம் என நினைத்த போதே உடம்பெல்லாம் சிலிர்த்து சில்லிட்டது. நேதாஜி கழுவுவதற்காக பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வைத்த போதுதான் தொண்டையை கவனித்தார். நேதாஜிக்கு புது வேலையாள் என்பது புரிந்து விட்டது. “வேலைக்கு புதுசா சேந்துக்குறியா...?”  “ஆமாண்ணா எப்டிண்ணா கண்டு புட்ச்சே”

 “எல்லாத்தியும் ஆச்சர்யமாப் பாத்தாலே புதுசுன்னுதான் அர்த்தம்” நேதாஜியின் வெளிப்படையான பேச்சு தொண்டைக்கு நெருக்கமாக இருந்தது. அலுவலகத்தைக் காண்பித்து உட்காரச் சொன்னான் நேதாஜி. “ஆட்டோ கழுவிட்டு வந்துர்றேன்... பேப்பர்ல நம்ம கட்சி மேட்டருலாம் பட்சி வச்சிக்கோ... அக்கா வந்தா சொ ல்லணும் புரிதா... இன்னிக்கு மேயர் கூட்டம்... அக்கா இப்போ வந்துடும் போ...” ஆட்டோவின் முன் கண்ணாடியில் ஒரு குவளைத் தண்ணீரை நேதாஜி மொண்டு ஊற்றினான். தொண்டை பயபக்தியோடு அலுவலகத்திற்குள் நுழைந்தான். சுற்று முற்றும் பார்த்தான். அறை முழுக்கச் சட்டம் போட்ட புகைப்படங்கள் வரிசைக்கிரமமாக மாட்டப்பட்டிருந்தது. கண்கள் விரியப் படங்களை பார்த்துக் கொண்டிருந்தான். கவுன்சிலர் ராணி மங்கம்மாள் அதிகார சிநேகிதங்களோடு இயல்பாய் புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் அவை. ஒரு படத்தில் தலைவரோடு ரவா கேசரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொன்றில் பெரிய மாநாட்டில் தலைவர் முன்னிலையில் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். விருதுகளும் மாலைகளும் ராணியைப் பற்றி தொண்டைக்குச் சொல்லிக் கொண்டிருந்தன. நேதாஜி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தனக்கான இருக்கையில் அமர்ந்தான். பிரபல நாளிதழ்கள் அத்தனையும் டேபிளில் காத்துக் கொண்டிருந்தன. இதுவரையிலும் தனது தலைவரின் கிசு கிசுவையும் படச் செய்தியையும் படித்தவன் முதல் முறையாக அரசியல் நிகழ்வுகளையும் படிக்க ஆரம்பித்தான். படிக்கப் படிக்கத் தொண்டைக்கு களோபரமாகிப் போனது. எல்லாத் தலைவர்களும் மாறி மாறி திட்டிக் கொள்கிறார்களே தவிர நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உருப்படியான எந்தத் திட்டத்தையும் அறிக்கையாக சொல்லவே இல்லையே என்று தீவிரமாகச் சிந்தித்தான். அப்போதுதான் அந்தச் செய்தி கண்ணில் பட்டது “மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோதல்” . தொண்டைக்கு உற்சா கமாகிப் போனது. முதல் நாளே பரபரப்பான செய்தி. அதுவும் ராணி மங்கம்மாள் சம்பந்தபட்ட செய்தி. உன்னிப்பாக படித்தான். ஒரே கட்சியைச் சேர்ந்த 5வது வார்டு கவுன்சிலர் நீதிதாசனும், 4வது வார்டு கவுன்சிலர் ராணி மங்கம்மாவும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் மேயர் தலையிட்டு பதினைந்து நாள் இருவரையும் சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் செய்தி சொல்லியது. தனது பேட்டையின் கவுன்சிலர் நீதிதாசனுக்கும் ராணிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கும். வழக்கமாக எதிர்க்கட்சியோடுதான் அடித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம் சொந்த கட்சியிலேயே சூன்யம் வைத்துக் கொள்கிறார்களே என்று சிரித்துக் கொண்டான். ஆனாலும் நீதி தாசன் கவிதையாகப் பேசும் மேடைப் பேச்சை அவ்வப்போது தொண்டையும் ரசித்ததுண்டு. நீதி தாசனே தன்னிலை மறந்து களமிறங்கினார் என்றால் ராணி ராணிதான். ஆஜானு பாகுவான நீதிதாசனிடமே மல்லுக்கு நிற்பதால்தான் என்னவோ தலைவரோடு கேசரி சாப்பிடும் அளவிற்கு ராணி அக்கா வளர்ந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான் தொண்டை.

தழைய தழைய வெளிர் மஞ்சள் நிறப் பட்டுப் புடவையில் மாடியிலிருந்து இறங்கி வந்தார் கவுன்சிலர் ராணி மங்கம்மாள். கொஞ்சம் பூசினார் போன்ற உடம்பு என்றாலும், ஒரே நேரத்தில் இரண்டு கர்லாக்கட்டைகளை சுற்றுமளவுக்கு தோள்கள் திரண்டு திமிறியிருந்தன. நெற்றியில் ஒற்றை ரூபாய் நாணயம் போல வட்டமாய் பொட்டு வைத்திருந்தாள். இரட்டை வடம் தங்கச்சங்கிலியை தொங்கவிட்டபடி நடந்து வரும்போது சில கரை வேட்டிகளின் கடைவாயில் சால்னா வழிந்து கொண்டிருந்தது. விடமேறிய கன்னியாகவே ராணி இருந்தாள். அந்த தேன்கலந்த விடத்தைக் குடித்து விடத்தான் எத்தனை கரை வேட்டிகள் ஆளாய்ப் பறந்து கொண்டிருக்கிறது என்பதைக் கரைகளின் சால்னா விளக்கியது தொண்டைக்கு. நேதாஜி ஆட்டோவோடு தயாராக நின்று கொண்டிருந்தான். தொண்டை பேப்பர் கட்டிங் குகளைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு நேதாஜியோடு சேர்ந்து கொண்டான். “இன்னா மாமே முந்தா நாளு... மாவட்டத்தாண்ட பொங்கலு வாங்கினியாமே... நீ மட்டும் சாப்ட்டுக்குற.... எங்களுக்குலாம் கொஞ்சம் குத்துருக்குலாம்ல...” என்று ஒரு மூத்த கரை வேட்டியை கலாய்த்து அவரது இடுப்பில் கிச்சிலிக்கா மூட்டினாள் ராணி. “அட நீ வேற ராணி... நந்தா ஒயின்சாப் புல சுண்டல் கடை போட்றதுக்கு மச்சானுக்காக கேட்டா... இன்னா மூடுல இருந்தாப்லனு தெரில... ரோயர் ரோயரா கேட்டாப்புல” மூத்த கரை வருத்தப்பட்டுக்கொண்டது.

“உன் அனுபவம்... என் வயசு... ஆனா இன்னாத்தக் கிழிச்ச... காத்தால கௌம்பி வந்துர்றது... ஊர் கதய பேசிட்டு... கேட்டா அரசியல்வாதின்னு வெளிய பீத்திக்கிறது...” மூத்த கரைக்குக் கொஞ்ச நாட்களாகவே வாஸ்து சரியில்லை. நேற்று கூட இப்படித்தான் ஒரு சிறுவனை இவர் அரசியல் பராக்கிரமத்தால் மிரட்டப்போக “ங்கோத்தா வாய ஒட்சிடுவேன்... மூடிக்கினு போய்டு” என்று எல்லோர் முன்னிலையிலும் ஏகமாய் பேசி விட்டான். இவருக்கு என்ன செய்வதென்றே புரியாமல் நாயரைப் பார்த்து “ஸ்டாராங்கா ஒரு டீடா சேட்டா” என்று சொல்லியிருக்கிறார். நாயர் மட்டுமின்றி சக கரை வேட்டிகளும் சிரித்திருக்கிறது. இப்போது தன் பங்குக்கு ராணி வேறு என்று நொந்தபடி பார்த்தார். ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள் ராணி. நேதாஜி ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். தொண்டைமான் நேதாஜியின் பக்கத்திலேயே ஒண்டிக் கொண்டான். தன் மனநிலைக்கு ஏற்றார்போல நாளுக்கு ஒரு கரை வேட்டியை பேச்சுத்துணைக்குக் கூடமாட அழைத்துக் கொள்வாள். கரை வேட்டிகளை தேர்வு செய்தபோது தெய்வம்தான் கண்ணில் பட்டார். “தெய்வமே இன்னிக்கு நீதான்... வா... ராஜா... வா” என்று கருணையோடு கலாய்த்தாள். தெய்வமும் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு நகர்வலத்துக்கு தயாரானது. மூத்த கரை ராணியைப் பார்த்தபடியே நின்றது. “ஊர்க்கதய பேசுறத உட்டுட்டு... உன் கதய ஊரு பேசுறா மாதிரி ஏதாவது பண்ணியிருந்தன்னா... நீ தான்யா இன்னிக்கு மாவட்டம்... போயி நாலு பஞ்சாயத்தயாவது புட்சிகினு வா... கமிசனாவது கெடைக்கும்... சின்னப்பசங்களாண்ட ஒண்டிக் கொண்டி நிக்காத” என்றவள் நூறு ரூபாயை எடுத்து மூத்த கரை ஜோபியில் திணித்தாள், மூத்தகரை வெற்றிலைக் கரை தெரிய ராணியைப் பார்த்துச் சிரித்தபோது “வண்டிய உட்றா” என்று தொண்டைமானை பார்த்தாள். நேதாஜி கர்மசிரத்தையாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். “ஒரு வாசகன்னாலும் திருவாசகமாத்தான் சொன்ன... பெருசு உக்காந்துகினு ஊரு கதயத்தான இவ்ளோ வருசமா பேசிக்கினு இருந்துச்சு... நம்மள மாரி அரசியலா பண்ணுச்சு” தெய்வம் இப்படிச் சொல்லி ராணியின் வெகுமதிக்குக் காத்திருப்பதைப் போலப் பார்த்தார். “உனுக்குலாம் தெய்வம்னு யாருய்யா பேரு வச்சது... செய்யறதுலாம் மொள்ளமாரித்தனம்... இதுல தெய்வன்னு உன்ன கூப்பிடனும்... ஒழுங்கா பேர மாத்து... இன்னா சொன்ன... நீ அரசியல் பண்ற... ம்... நேத்து நீதிதாசன் ஆபிசாண்ட உன்ன யாரோ பாத்ததா சொன்னாங்கோ.. ஆங்..” நேதாஜி டாப்கியரை போட்டு உற்சாகமாக வண்டியை செலுத்தினான். தெய்வத்திற்கு முகம் ஒரு போக்கில் போனாலும் சமாளித்துக்கொண்டு “உன்னாண்டையே கை ஓங்கியிருக்கான்னா... சும்மா பாத்துகினு இருக்கச் சொல்றியா... வங்காரம் வச்சிக்கலான்னுதான் போனன்... ஜஸ்ட் மிஸ் ஆயிட்டான் மைக்கண்ணன்” பிசிறில்லாமல் பொய் சொல்லி விட்டு முகத்தைச் சாந்தமாக வைத்துக் கொண்ட தெய்வத்தை பார்த்தபோது ராணிக்குக் கோபத்தைக் காட்டிலும் சிரிப்புதான் வந்தது. அடக்க முடியாமல் சிரித்தாள். “டேய் நேதாஜி உனுக்கு சிரிப்பு வரல” என்று சிரித்தாள். நேதாஜி கோழி கத்துவதைப் போல சிரித்தான். தொண்டைமானை தட்டி ராணி சிரித்து கொண்டே “உன் பேரு இன்னா...”

‘தொண்டைமான் மேடம்”

“தொண்டைமானு... உன் பர்ஸ்ட் வேல இன்னா தெரியுமா... தெய்வத்தப் பாத்து சிரிக்கணும்... ங்கோத்தா தெய்வம் நாக்குப் புடிங்கிச் சாவுறா மாறி கேவலமா சிரிக்கணும்.”

உலகத்தில் முதல் நாள் வேலையில் இப்படியொரு ஆரம்பம் எதிரிக்குக் கூட வாய்க்கக்கூடாதெனக் கருதினான். ஆனால் திடீரென சிரிக்கச் சொன்னால் சிரிப்பு வந்தும் தொலையாது. அதுவும் தெய்வத்தைப் பங்கப்படுத்துவது போல சிரிக்க வேண்டும். தான் கேவலமாகச் சிரிக்கப் போவது என்னதான் இருந்தாலும் ஒரு அரசியல்வாதி என்பதையும் அவன் கருத்தில் கொண்டான். சிரித்தால்தான் வேலை நிச்சயம் என்பதால் தெய்வத்தைப் பார்த்து ‘ப்பூபுப்பூ’ என்றும் ‘ஹஹ்ஹா’ என்றும் முகத்தை ஏழு கோணலாக ஆக்கிச் சிரித்தான். தெய்வம் நின்று கொல்லும் என்பதாக இவ்வளவு கேவலங்களுக்கு மத்தியிலும் “நேதாஜி ரேடியோவ தட்டி உட்றா” என்றது தெய்வம். அரசியலில் நுழைந்து மக்களுக்குச் சேவை புரிந்து தான் ஒரு மக்கள் தலைவனாக ஆக வேண்டுமென்று பார்த்தால், அரசியலே இப்படி சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறதே என்று நொந்து கொண்டான் தொண்டை. சிரித்துச் சிரித்து ராணிக்குக் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டே“மைக்கண்ணனாண்ட போயி... சூப்பர்பானு சொல்லிட்டு... அப்டியே கவுத்து போட்டு பகுல்ல ரெண்டு குத்த வேண்டியதுதானனுன்னு அவுன்த தடவி உட்டுட்டு... இங்க வந்து வங்காரம் வக்கப் போனனுன்னு           சிங்காரமா பேசுனா... நம்பிருவனா நானு...” தெய்வத்துக்கு நடந்ததை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல இருந்தது. “எனக்கும் நீதிக்கும் மாவட்டத்துக்கு முன்னாடி பஞ்சாயத்து பைசல் ஆவுது... இப்ப நீ இன்னா பண்றனா... என்ன போட்றதுக்கு மைக்கண்ணன் உன்னாண்டயே ஸ்கெட்ச்சு கேட்டான்னு நீ சொல்ற... புரியுதா...” என்ன சொல்வதென்று தெரியாமல் பாவமான பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டார். நேதாஜிக்கு ராணியின் ஸ்கெட்ச் புரிந்தது போல வண்டியை உற்சாகமாக மாநகராட்சி கட்டிடத்திற்குள் திருப்பினான். தொண்டைக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை. ஆட்டோ மாநகராட்சி கேண்டின் அருகில் நின்றது. “டபுள் டாபரே வா டிபன் சாப்புடலாம்” என்று அழைத்தபோது தெய்வம் கண்கலங்கி விட்டார். தான் துரோகம் செய்தது தெரிந்தும், தன் பசியை ஆற்றுகிறாள். இவளுக்குப் போய்... என்று தன்னைத் தானே நொந்துகொண்டார். இவரது எண்ண ஒட்டத்தினைப் புரிந்துகொண்ட ராணி “தெய்வமே இப்டி பாவமா மூஞ்சிய வச்சிக்கறத எங்க தெய்வமே கத்துக்குன...? என்றபோது முகத்தை சகஜமாக்கிச் சிரித்து வைத்தார்.

நால்வரும் கேண்டினுக்குள் நுழைந்து வழக்கமாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்தனர். “தெனமும் நாலு டீ... ரெண்டு வட... என் பேரச் சொல்லி வாரத்துல நாலஞ்சு பஞ்சாயத்துன்னு சொகுசாத்தான இருக்குற... அப்புறம் எதுக்கு இங்க நடக்குறதெல்லாம் எடுத்துகினு போயி மைக்கண்ணனாண்ட சொல்ற... இதுல என்ன வேற குனியவச்சு பகுல்ல குத்தணும்.... என்னாண்டயே டீ, பன்னு மாறி துண்ட்டு என்னையே குத்துவ... எங்க குத்து... குத்துடா” புடவையை விலக்கி இடுப்பைக் காண்பித்தாள். கேன்டீனின் கண்கள் இடுப்பின் வளைவுகளை மொய்த்துக் கொண்டிருந்தபோது சட்டெனத் திரை மூடப்பட்டது.

“ங்கோத்தா மூட்டப் பூச்சி மாறி இருந்துக்குனு நசுக்கிடுவன்... பாத்தியாடா நேதாஜி இவன” என்று உட்கார்ந்தாள். அதே கோபத்தில் இட்டிலியை பிசைந்து அடித்தாள். தெய்வம் பொங்கலில் குழிவெட்டி மெதுவடையை உதிர்த்துப் போட்டு சின்ன வெங்காய சாம்பாரை குழியில் சிந்தாமல் சிதறாமல் ஊற்றி சப்புக்கொட்டி சுவைத்துக் கொண்டிருந்தார். தொண்டை முதல்நாள் என்ற அச்சத்திலிருந்து வெளிவராத நிலையில் இட்லிக்கே வலிக்காமல் பதுவுசாக பிய்த்துச் சாம்பாருக்கே தெரியாமல் தொட்டு சல்லிசாக விழுங்கினான். ஒரு நொடி தெய்வத்தைப் பார்த்த போது பொங்கலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். ஊரே கழுவி ஊற்றி காறி உமிழ்ந்தாலும் தெய்வத்தை போல எந்த சலனமுமில்லாமல் துடைத்து விட்டு முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டால்தான் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியும் எனவும் நினைத்துக் கொண்டான் தொண்டை. அப்போது ராணிக்கு மாவட்டத்திடமிருந்து அழைப்பு வந்தது “சரிங்க தலைவரே வந்துர்ரேன்” என்றவள் தெய்வத்தைப் பார்த்தாள். கையை நக்கிக் கொண்டிருந்தது தெய்வம். “தெய்வமே எந்திரி போலாம்” என்றாள். தெய்வம் மீதிப் பொங்கலை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஏக்கத்தோடு பார்த்தது. “ஏய்.. ச்சீ வா” என்றதும் கையை நக்கியபடியே ராணியின் பின்னால் வீறு கொண்டு நடந்தது தெய்வம்.

தொண்டைக்கு விவரம் புரிந்தது.. நேற்று கூட்ட விவாதத்தில் நீதிதாசனுக்கும் ராணிக்கும் நடந்த போர்க்களத்தைதான் இப்போது ‘மாவட்டத்தின்’ முன் பைசல் பண்ண வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டான்.

“ரெண்டு பேருக்கும் இன்னா தாண்ணா ப்ரச்சன...?” “லவ்வுதாண்டா” முகத்தைக் கதை சொல்லும் பாணியில் வைத்துக் கொண்டு சிகரெட்டை இழுத்தான் ஜவஹர். தொண்டை இப்படியான பதிலை எதிர்பார்க்கவில்லைதான்.

“இன்னாண்ணா சொல்ற...?”

“இப்பதாண்டா அந்த நீதிதாசன் பகுதிச் செயலாளர், கவுன்சிலர் எல்லாம்... பத்து வருஷத்துக்கு முன்னாடி காலிப் பெருங்காய டப்பாடா அவன்... ஆனா அப்பவே நம்ம வட்டத்துக்கு ராணிக்காதான் செயலாளரு... மைக்கண்ணன கட்சிக்கு இட்டாந்து உட்டதே அக்காதான். அவன உயிரா லவ் பண்ணிச்சுடா” சிகரெட்டை மண்ணில் புதைத்து அடக்கம் செய்தான். ‘நீதிதாசனுக்கு ஏரியால மைக்கண்ணன்னு எப்படிணா பேரு வந்துச்சு”

 “நீதிக்கு பூனக்குட்டி புருவம்... எறா குஞ்சு மீச... ராணிக்காதான் மையால புருவத்தையும் மீசையையும் வெளிய தெரியாதமாறி வரஞ்சு உடும்... அப்டி வரையும் போது ராணிக்கா முகத்தப் பாக்கணுமே, அவ்ளோ அழகா இருக்கும்... ஆம்பளன்னா          கெத்தா புருவமும், கொத்தா மீசையும் இருக்கனும்னு ராணிக்கா அடிக்கடி சொல்லும்...” அரசியலை விட அரசியல்வாதிகளின் காதல் கதை மிகுந்த சுவாரஸ்யத்தை கொடுத்தது தொண்டைக்கு. மேனி முழுதும் காதுகளாக்கிக் கேட்கத் தொடங்கினான். “இப்டி எல்லாத்தையும் பாத்துப் பாத்து செஞ்சு,,, தலைவராண்ட என்னலாம் பண்ணமுடியுமோ பண்ணி... மைக்கண்ணனுக்கு வட்டச் செயலாளர் போஸ்டிங்க வாங்கிக் குடுத்துச்சு... ஆனா அந்த பாடு மாவட்டத்து பொண்ண உசார் பண்ணிக் கல்யாணம் பண்ணிட்டான்.. மைக்கண்ணனான்ட போயி வங்காரம் வச்சிச்சு... அதுக்கு அவன்                     சொல்லிருக்குறான்.... சம்சாரிகளோடதான் குடும்பம் நடத்த முடியும்னு... ராணிக்காக்கு இன்னா வந்துச்சுன் னே தெர்ல... ஆங்கரமா ஆயிடுச்சு... எறாகுஞ்சு மீச வச்சிகினு இருக்குற பையன் நீ... என்ன தேவிடியான்னு சொல்றியா... ஆமாடா நா படுத்துதான் உனக்கு போஸ்டிங் வாங்கி குடுத்தேண்டா டாபரே... பொதுவுல இருந்தா ஒரு பொண்ணு எல்லாரோடவும் படுத்துருவான்ணு நெனக்கறல்ல... இனி நீ என் மயிருக்கு சமானம்... லவ்வுன்னா என்னான்னு தெரியாத நீ தாண்டா பாடுபையன்... த்தூன்னு கொத்தாத் துப்பிட்டு வந்துச்சு... ஆனா அன்னிக்கு ராவு பூரா அழுதுகினே இருந்துச்சு... போதையில என்னப் பாத்துக் கேட்டுச்சு... நான்லாம் குடும்பம் நடத்த லாயக்கு இல்லியான்னு... எனுக்கும் இன்னா சொல்றதுன்னு தெர்ல... நானும் அழுதுகுனே வந்துட்டேன்” தொண்டை இப்படியொரு காதல் கதையை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் ராணி மங்கம்மாவின் மேல் ஏதோவொரு மரியாதை அவனுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது.

லேசாக இருட்டியது. மழை வருவதற்கான சகுனம் தெரிந்தது. மாவட்டம் நடந்து வருவதை நேதாஜி கவனித்துவிட்டான். மாவட்டத்தின் இடதுபுறம் ராணியும், வலது புறம் நீதிதாசனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். தெய்வமும் வந்து கொண்டிருந்தது. நேதாஜியும் தொண்டையும் மாவட்டம் கார் முன்பு வந்து நின்று கொண்டார்கள்.

“யோவ் நீதி ராணிய போட்றதுக்கே ஸ்கெட்ச்சு போட்ற... போட்றுவியா...?” இப்படிக் கேட்டுவிட்டு ராணியை வழிந்து பார்த்து “இன்னா ராணி போட்றுவாப்புலயா...?” என்று மாவட்டம் கண்ணடித்து சிரித்தார். ராணிக்கு மாவட்டத்தின் சங்கேதக் கண்ணடித்தல் புரிந்தது. “இவன் எறா குஞ்சு மீசக்காரப் பையன்ணா... இவன் என்ன போட்றுவானா... ஆங்” என்று ராணியும் மாவட்டத்திடம் சங்கேதம் சொல்லிக் கண்ண டித்தாள். இருவரும் சிரிக்க நீதிதாசன் தெய்வத்தை வெறிகொண்டு முறைத்தார். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லாமல் சொல்வதைப் போல இருந்தது தெய்வத்தின் முகம். ராணி மட்டும் சிரித்துக் கொண்டே இருந்தாள். நீதிதாசன் மேல் வைத்திருந்த தன் காதலை இப்படித்தான் தானே குத்திக் கிழித்து ஒருவித சந்தோஷத்தை அடைந்து கொள்கிறாள்.  “தலைவரே எப்டி லோலாயி மாறி சிரிக்கிறா பாத்திங்களா...?” “சிரிக்குறதுல என்னடா லோலாயி வேலாயி..” என்று மீண்டும் சிரித்தாள். மாவட்டம் காரில் ஏறிக் கொண்டார்.

“ஒரே கட்சில இருந்துகினு காப்ரா பன்னிக்கினே இருக்காதீங்கோ... எதிர்க்கட்சிக்காரன் கழுவி ஊத்துறான்.. யோவ் நீதி ராணியாண்ட எதுவும் வச்சிக்காத புரியுதா.. நாளைக்கு ஆபிஸாண்ட வா...” என்றதும் பவ்யமாக வணக்கம் வைத்துவிட்டு ராணியை முறைத்தபடியே சென்றார்.

மாவட்டம் ராணியைப் பார்த்தார். அதே சங்கேத பார்வையில் “நைட்டு ஆபிஸாண்ட வா” என்றார். ராணி சிரித்துக்கொண்டே “ஒகே தலைவரே” என்றதும் மாவட்டத்தின் கார் உற்சாகமாகக் கிளம்பியது.

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. மாவட்டம் கொடுத்தனுப்பிய வெளிநாட்டு சாராயப் போத்தலை அத்துனை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தது தெய்வம். சரக்கை சரியாக ஊற்றிச்  சோடா கலந்து கொடுத்தான் நேதாஜி. ஒரு கல்ப்பை ஏற்றிக் கொண்டாள் ராணி. தெய்வமும் படையலை ஏற்றிக்கொண்டது. தொண்டை பதார்த்த வகைகளைப் பிரித்து வைத்தபடி இருந்தான். ஒரு லம்பு லம்பி வறுத்த கோழிக்காலைப் பிய்த்து நாராசமாய் கடித்துக் குதறியது தெய்வம். தனக்கு என்ன வேலை என்றே அனுமானிக்க முடியவில்லை தொண்டைக்கு. தொகுதி மக்களிடம் சென்று குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைத்து, மக்களெல்லாம் இவனை போற்றி அகவல் பாடுவதாகக் கண்ட கனவெல்லாம் இனி நடக்காது என்று நினைத்தான். ராணி போதையானது அவள் புடவை சரிந்ததில் தெரிந்தது. “ஒரு வாசகன்னாலும்... திருவாசகமா சொன்ன ராணி” என்று போதையில் ஆரம்பித்தது தெய்வம். சைகையிலேயே வெட்டி விடுவேன் என்பதாக ராணி பாவனை செய்ய, தெய்வம் வேட்டியை இறுக்கிப் பிடித்துக்கொண்டது.

தொண்டையால் அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ளமுடியவில்லை. இந்த வேலையிலிருந்து விட்டு விடுதலையாக வேண்டும் என முடிவெடுத்தான். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நமக்கென்ன என்று முடிவெடுத்து சைக்கிளில் ஏறி உட்கார்ந்த போதுதான் ஒரு பெரியவர் இவனிடம் வந்து நின்றார். “தம்பி என் பேரு வீரபத்திரன்... இங்க பக்கத்து தெருவுலதான் இருக்கன்... இப்பதான் கவுன்சிலரம்மாவ பாக்க முடிஞ்சுது... அவுங்க அலுவலா கௌம்பிட்டாங்க... சமாச்சாரத்த தெய்வம்னு ஒருத்தர் இருப்பாரு அவருகிட்ட சொல்லுங்கன்னு கவுன்சிலரம்மா சொன்னாங்க... ஆபிசும் பூட்டி கெடக்கு.. தெய்வத்த எங்க தம்பி பாக்குறது...?” தெய்வம் போதையில் இந்தச் சமூகத்திலிருந்து விலகியிருக்கிறது என்று பெரியவரிடம் எப்படிச் சொல்லுவது என யோசித்தவன் “தாத்தா நா கவுன்சிலர் பி.ஏ தான்... என்கிட்டயே சொல்லுங்க... என்ன விஷயம்” என்றான். “வணக்கம் பி.ஏ.சார்” என்றார் பெரியவர். தொண்டைக்குக் கௌரவமாக இருந்தாலும்... இந்த மரியாதையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று யோசித்தான். “மாசா மாசம் முதியோர் பென்ஷன் வந்துட்டு இருந்தது பி.ஏ.சார்... இப்போ ரெண்டு வாரமா வர்ல... போஸ்ட் ஆபிஸ்ல போயி கேட்டா சரியா யாரும் பதில் சொல்ல மாட்றாங்க... அதான் நீங்க கொஞ்சம் பேசினீங்கன்னா... ஏதாவது நடக்கும்... பென்ஷன் இல்லாம சோத்துல கைய வச்சா... நரகல தின்றா மாதிரி இருக்குது பி.ஏ.சார்” பெரியவர் தனது வாழ்வாதாரத்தைக் கண்ணீர் மல்கச் சொன்னதும் தொண்டை விக்கித்துப் போனான். தான் சுமந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை தொண்டை உணர்ந்த போது அவனறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இனிதான் தனக்கு நிறைய வேலை இருப்பதாக எண்ணிக் கொண்டான். “நீங்க போங்க தாத்தா... உங்க பென்ஷன் உங்க வீடுதேடி வரும்” பெரியவர் தனது நிஜாரிலிருந்து கசங்கிய அம்பது ரூபாய்த் தாளை எடுத்து தொண்டையிடம் கொடுத்து “என்னால முடிஞ்சது பி.ஏ.சார்” என்றார் பெரியவர். “அதெல்லாம் வேணாம் தாத்தா” என்றான். தனது எழுபத்தி இரண்டு வருட வாழ்வில் முதல் முறையாக ஒருவன் பணம் பெற்றுக்கொள்ளாமல் வேலையை முடித்துத் தருகிறேன் என்று சொன்னது பெரியவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. “அரசியலுக்குப் புதுசா பி.ஏ. சார்” என்றார் பெரியவர். மிகுந்த உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் ஆமாம் என்பதாக தலையசைத்தான் தொண்டை என்கிற தொண்டைமான்.

ஆகஸ்ட், 2017.