ஆனைமலை தகித்திருந்தது. ஒத்த சுடுகுஞ்சி கூட இல்லை.
மலைமேலிருக்கும் சமணமுனிவ சிற்பங்கள் எல்லாம் சூரியக் குளியலில் லயித்திருந்தன.
தூரத்திலிருந்துப் பார்க்கும் பொழுது யானையின் பின் தோற்றத்தை நினைவூட்டுவதால் அதற்கு அந்தப் பெயர் வந்திருக்கலாம். யானை மலை ஆனை மலை ஆயிற்று.
மலைக்குச் சற்றுத் தள்ளி வீரனார் கோயிலும், மலையடிக் கருப்பணசாமி கோயிலும் இருந்தது.
வெட்டவெளிப் பொட்டலில் பீடமேதுமில்லாமல் சிலைகள் மாத்திரம் இருந்தன. புரவிகளும், வேல்கம்பு ஏந்திய வீரர்களும் காவல்காத்து நின்றிருந்தார்கள். கோயிலைச் சுற்றிய ஆவாரங்காடு மஞ்சள் மலர்களால் குலுங்கியது.
ஏறுவெயில் நேரம்......
“ஊரான் ஊரான் தோட்டத்தில
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்...'
வைரவன் பாடிக் கொண்டு போக சில குலவான்கள் கூடவே பாடிக் கொண்டு போனார்கள். நொண்டிச்சாமி தொரட்டிக் கம்போடு சூராம்புதர் பக்கமாய் கண்களை இடுக்கிக் கொண்டு நின்றிருந்தான்.
மதியக்கஞ்சிக்கு அவர்களின் போசிகளில் கம்மஞ் சோறு காத்திருந்தது.
தீராதாகம் கொண்ட ஆடுகள் பாசியூத்து ஊரணியை அப்படியே குடித்து விடுவதைப் போல அதன் விளிம்பில் நின்று வாய் வைத்தன.
“ஏய்... எளந்தரிகளா... உச்சி வெயிலு உடம்பக் கிழிச்சிக்கிருக்கு... வெரசா வாங்கப்பேய்.. பசி வேற வவுத்தக் கிள்ளுது..'
தொங்கு மீசைப் பெரியாம்பளை வீரனார் கோயில் முக்கில் நின்று கத்தினார்.
“தே! தே!... ரெய்ய்...ரெய்....'
வைரவனும், நொண்டிச்சாமியும் ஆடுகளைப் பத்திக் கொண்டு வீரனார் கோயிலுக்கு வந்துவிட்டார்கள்.
புளிய மர நிழலில் அமர்ந்து கம்மஞ்சோற்றை உருட்டினார்கள். கருக்கலில் வெறும் வயிற்றோடு வந்ததில் கம்மஞ்சோறு மளமளவென்று உள்ளிறங்கியது.
தொங்கு மீசைப் பெரியாம்பளையும் கூட்டணியில் சேர்ந்து கொண்டார். அவர் போசியில் வரகுச் சோறு இருந்தது. கூடவே கருவாட்டு வெஞ்சனம் மணத்தது.
“என்னாப் பெரியாம்பளை... வரகுச்சோறும் கருவாட்டு வெஞ்சனமுமா?'
“செத்த நேரத்துல செமிச்சுப்புருவ!.....'
வைரவன் எகடாசி பேசினான். அதைக் கேட்ட நொண்டிச்சாமி நரிச்சிரிப்புச் சிரித்தான்.
“ஆமாப்பா! எளந்தாரி..... செமிச்சிப்புட்டு சட்டியத் தாரேன்! வாங்கி வேணா வாசனை பிடி!'
தொங்கு மீசையை தடவிக் கொண்டே பதிலுக்கு பெரியாம்பளை தன் எகடாசியை வீசினார். ஒரே நையாண்டிப் பேச்சும், கெக்கலிப்புமாய் இருந்தவர்களின் உரையாடல் சோற்றிலிருந்து நாட்டுப் பிரச்சினைக்குத் தாவியது.
“நாடெல்லாம் வெள்ளக்காரன் வசமாயிருச்சு!
பாஞ்சாலங்குறிச்சியில ஊமைத்துரையும், செவத்தத் தம்பியும் மாண்டு போனாங்க. திருப்பத்தூர்ல மருதுராசாக்கள் கதை முடிஞ்சது. நம்ம பாளையத்தையும் வெள்ளக்காரன் புடிக்கப் போறான்னு சேதி..!'
புறங்கையை நக்கிக்கினான் வைரவன்.
“நாங்க்கூட கேள்விப்பட்டனப்பா...... பாளையத்தையெல்லாம் ஒழிச்சுப்புட்டு ஜமீந்தாரி முறை வரப்போவுதாம்.. நம்ம ராசா மகன் ரெண்டு வருசமா கும்பினிக்குக் கட்ட வேண்டிய வரியைக் கட்டலயாம்! ஏற்கனவே ரெண்டு ஊரை ஜப்தி பண்ணிட்டாய்ங்க! இப்ப என்னப் பண்ணப் போறாய்ங்களோ?'
தொங்குமீசைப் பெரியாம்பளையின் பேச்சு கிலியை உண்டாக்கியது.
“ராசா பாடு ராசாவோட... நம்ம பாட்டைப் பார்க்கப் போவோம்... எந்திரிச்சி வாங்கப் பேய்....'
நொண்டிச்சாமி போசியோடு கிளம்பினான். அவர்கள் பாசியூத்து ஊரணியில் போசிகளை அலம்பிவிட்டு தொரட்டிக் கம்புகளோடு கள்ளிக் காட்டைக் கடக்கையில் ஆடுகளும், மாடுகளும், ஓணாண்களும், உடும்புகளும் ஒடுங்கும் படிக்கு குதிரைகளில் கும்பினியாட்கள் கோவிந்தம் பாளையத்துக்குப் போகும் பாதையை மின்னலெனக் கடந்தார்கள். வெள்ளைக் குதிரைகளின் குளம்புகள் செம்புழுதி கிளப்பிப் பறந்தன.
வானதேவி மாற்றுச் சேலை உடுத்தத் துவங்கியிருந்தாள் அரண்மனை மாடத்தில் கோவிந்தம் பாளையத்தின் இருவதாவது பட்டக்காரன் வரதராசப்ப நாயக்கன் உலாத்திக் கொண்டிருந்தான்.
சிந்தனை வசப்பட்டவனாய் இருந்தான். சமீப காலமாய் பாளையக்கார்களின் நிலை ஒன்றும் சரியில்லை. கும்பினிக்குக் கட்டுப் பட்டு நடக்கிறவனுக்கு யோக காலமாய் இருந்தது. சுய மரியாதையோடு நடக்கிறவனுக்கு போதாத காலமாய் இருந்தது.
வெள்ளைக்காரனுக்கு காவடி தூக்கிய சேவகராசாக்கள் ஜமீன்தார்கள் ஆனார்கள். கும்பினிக்கு விரோதமாய் செயல்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்.
வரதராசப்ப நாயக்கன் கும்பினியார்க்கு செலுத்த வேண்டிய வரி நிலுவையில் நின்றது. ஏற்கெனவே மூன்று ஊர்களை ஜப்தி செய்து விட்டார்கள். அந்தப் பஞ்சாயத்தே இன்னும் தீரவில்லை. அதற்குள் புதிய புதிய பஞ்சாயத்துகள் முளைத்து விட்டன. வரதராசப்பனின் பாரியாள் லீலாவதி கர்ப்பவதியாய் இருந்தாள்.
அவள் கருவுற்ற காலந்தொட்டே அவனுக்கும் கவலைகள் கருவுறத் துவங்கிவிட்டன மனசில். அவன் தகப்பன் திருமலை ராமப்ப நாயக்கன் மகனுக்கு கச்சிராய பாளையத்தில் பெண் பார்த்து பேசி முடித்தான்.
லீலாவதி நல்ல குணவதி, கோதுமை நிறத்துக்காரி. குலதெய்வம் வீரசக்கம்மாவைப் போல வடிவும் வீரமும் ஒருங்கே கொண்டவள்.
லீலாவதிக்கு இது தலைப்பிரசவம். சில தினங்களுக்கு முன் பாதங்கள் வீங்கிக் கொண்டு ஆயாசமாய் இருந்தது. வைத்தியர் அளித்த சூரணத்திற்குப் பிறகு தேவலாம். உபாதை ஒன்றுமில்லை.
“உங்கள் மைந்தன்தான் வயிற்றில் தனது பிஞ்சுப் பாதங்களால் அவ்வப்போது உதைத்துக் கொண்டிருக்கிறான்!' என்றது வரதராசப்பனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“ஹ்ஹ்ஹா... ஹ்... ஹா” “ஹ்ஹ்ஹா... ஹ்...ஹா' சிரிப்பு அடங்க சில மணித்துளிகள் பிடித்தது. சிரிக்கும்பொழுது அவனது இடப்புறம் கன்னத்தில் குழி விழுந்து அவனது கறுப்பழகை மேலும் மிளிரச் செய்தது. அவன் மீசைகள் இருபுறமும் போர்வாள்களாய் மெலிந்து நீண்டு கம்பீரமாய் நெளிந்திருந்தன.
லீலாவதியிடம் அவன் பாளையத்து பஞ்சாயத்துக்களை அவிழ்க்கவில்லை. கர்ப்பவதி கவலையில்லாமல் இருக்க வேண்டும்.
“கோவிந்தம்பாளையத்துக்கு இருவத்தியோராவது பட்டாக்காரன் வரட்டும்...! பிறகு பார்! பாளையத்தின் கொண்டாட்டங்களை...' என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாளையத்து வீரனொருவன் அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தான்.
அரவம் கேட்ட வரதராசப்பன் “என்ன சங்கதி?' எனக் கேட்ட கேள்விக்கு, தாமதமின்றி பதில் வந்தது அவனிடமிருந்து “ராசா சமூகத்திற்கு... தங்களைக் காண கும்பினி ஆட்கள் சிலர் வந்துள்ளார்கள்' .
“வருகிறேன்... போ!' என்ற வரதராசப்பன் லீலாவதியை உறங்கச் சொல்லிவிட்டு சயன அறையை விட்டு வெளியேறினான். அரண்மனை முகப்பில் மான்கொம்புகளை வெறித்தபடி அவனுக்காக சில நரிகள் காத்திருந்தன.
காசநோய்க்காரர்களும் கண்ணுறங்கும் சாமத்தில் வரதராசப்பன், கலெக்டர் பிராங்க்ளினிடமிருந்து வந்த லிகிதத்தின் வரிகளையே வாசித்துக் கொண்டிருந்தான்.
கோவிந்தம்பாளையத்தின் இருபதாவது பட்டக்காரனாகிய ஸ்ரீ வரதராசப்ப நாயக்கன் அறிவது... பிரிட்டிஷாருக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி நிலுவையில் உள்ளது. மேலும் நிர்வாகத்தின் கேள்விகளுக்கு இதுவரை யாதொரு பதிலும் இல்லை. மேற்படி இதுநாள்வரை கட்ட வேண்டிய வரிபாக்கி 6000 வராகன் விரைவில் செலுத்த வேண்டியது. தவறினால் பாளையத்தின் ஊர்கள் மேலும் ஜப்திக்குள்ளாகும். அது மட்டுமின்றி, பிரிட்டிஷ் நிர்வாகத்தின் புதிய ஆயுதத்தடை சட்டத்தின்படி பாளையத்தின் ஆயுதங்களை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கத் தாமதமேற்படும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்படும்!
கோவிந்தம்பாளையத்துக்கு வந்த சோதனையை நினைத்து நினைத்து வெம்பினான் வரதராசப்பன். குலதெய்வம் வீரசக்கம்மாவை மனமுருகப் பிரார்த்தித்தான்.
கல்குதிரையைப் போல விஸ்வநாத நாயக்கர் காலந்தொட்டு கம்பீரமாய் நிற்கிறது கோவிந்தம் பாளையத்துக் கல்கோட்டை. ஆங்காங்கே காவல் மாடங்கள். ஆயுத அறைகள். அலங்கங்கள். நெடுங்கதவம். எதிரிகள் எவரும் அசைத்துவிட முடியாத வேழமென முகப்பு. ஒவ்வொரு கல்லிலும் ரெங்கசாமியப்ப நாயக்கனின் கனவும், கோட்டைய எழுப்பிய குடிமக்களின் குருதியும் வியர்வையும் கலந்திருந்தது. கோட்டையின் நாற்புறமும் மாடகோபுரங்கள் கிரீடமென மிளிர்ந்தன.
கோட்டையின் ஒரு புறத்தில் வீரசக்கதேவிக்கு ஒரு கோயில் அமைந்திருந்தது. கோட்டைக்குள்ளிருந்த அரண்மனை திருமலைசௌரியின் சொர்க்க விலாசத்தின் சாயலிலேயே கட்டப்பட்டிருந்தது. அழகிய விதானங்கள். புறாக்கள் சிறகடிக்கும் மாடங்கள்.
வீரசக்கம்மாவின் முன் மனமுருகி நின்றான் வரதராசப்பன்.
“சக்கம்மா! உன் சனங்களைக் காப்பாற்று! சந்ததியைக் காப்பாற்று! வியாபாரஞ் செய்ய வந்தவனெல்லாம் உன் மண்ணைக் களவாடுவதா? உன் மக்களை அடக்கியாளுவதா? இன்னும் என்ன மௌனம்? இன்னும் உயிர்கள் வேண்டுமோ? குருதி வேண்டுமோ? கொய்த சிரங்கள் வேண்டுமோ ? நாளம் வேண்டுமோ? சதைத் துண்டங்கள் வேண்டுமோ? கட்ட பொம்முவும், வீர மருதுகளும், ஊமைத்துரையும், செவத்தத் தம்பியும் போதாதா?
நானும் வேண்டுமோ? தாயே? நானும் வேண்டுமோ? சொல்லடி...! அம்மா... சொல்லடி....!' கண்கள் பனித்தன வரதராசப்பனுக்கு. கோட்டைச் சுவரில் கவுளி அடித்தது.
பட்டக்காரனின் விழிகளைப் போல சிவப்பேறிய சூரியன் கிழக்கில் பொன்னாடை போர்த்தி நின்றான். கத்தியேந்தாத கச்சிராய பாளையத்து வீரனொருவன் நல்ல செய்தியொன்றை நாவில் சுமந்து கொண்டு வெண்ணிறப் புரவியில் அமர்ந்தபடி கோட்டைக்குள் நுழைந்தான்.
கச்சிராய பாளையக்காரன் கோவிந்த சின்னைய்ய நாயக்கன் தனது பாரியார் வெங்கட்டம்மாளோடும், அவன் மகள் ஆராவமுத நாயக்கன் அவனது பாரியாள் வீரலெட்சுமியோடும் வந்திருந்தார்கள். சும்மா வரவில்லை தங்கள் குலக்கொடிக்கு கட்டுச் சோறு சுமந்து வந்திருந்தார்கள்.
கச்சிராயபாளைய சமையல்காரன் அன்னய்யா ஏழுவகை அன்னங்கள் அற்புதமாய் படைத்திருந்தான். சர்க்கரைப் பொங்கல், புளி அன்னம், எலுமிச்சை அன்னம், தக்காளி அன்னம், தயிர் அன்னம், மாங்காய் அன்னம், தேங்காய் அன்னம். கூடவே மல்லி, புதினா துவையல், மாங்காய் ஊறுகாய் வற்றல், கத்தரிக்காயுடன் கொண்டைக் கடலை இட்டுச் செய்த கூட்டு என அசத்தியிருந்தான். நளபாகமென்றால் நளபாகம்தான். மா, பலா, வாழை என முக்கனிகளும் அதிரசம் தேன்குழல், லட்டு, கைமுறுக்கு, சீவல், சேவு என பலவகைப் பட்சணங்களும் கூட கூடைகூடையாய் வந்திருந்தன.
லீலாவதி பனாரஸ் பட்டுடுத்தி முத்துச்சரமும், காசுமாலையும், சதங்கைகளும், வைர அட்டிகையும் பச்சைக் கல் தோடுகளும், சிவப்புக்கல் மூக்குத்தியும் அணிந்து அப்சரஸ் என வீற்றிருந்தாள். தாய்வழிச் சமூகத்திலிருந்து வந்திருந்த வயது முதிர்ந்த சுமங்கலி மூதாட்டியொருத்தி வேப்ப வளவியை அணிவித்த பிறகு, பாளையத்துப் பெண்டுகள் பொன்வளவிகளைப் பூட்டினார்கள். கோவிந்த சின்னைய்யநாயக்கன் தன் மகளுக்கு பொன்வளையல்களை பிரத்யேகமாய் கள்ளக்குறிச்சி பொன்னாசாரி எத்திராஜுவிடம் செய்து வந்திருந்தான்.
வளையல் அணிவித்து முடிந்ததும் வரதராசப்பனும் லீலாவதியும் பெரியவர்களிடத்தில் ஆசி பெற்றார்கள்.
தலை வாழையில் விருந்து பரிமாறப்பட்டது. பாளையக்காரர்கள் வாழை இலையில் விருந்துண்ண அரண்மனைக்கு வெளியே குடியானவர்கள் பஞ்சப் பராறிகள் மண்சட்டிகளோடு சாப்பாட்டிற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.
கோவணம் கட்டிய சிறுவர்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். ஆதரவற்றவர்கள் ஒதுங்கி நின்றார்கள். சனங்களைக் கண்ட வரதராசப்பன் அரண்மனை சமையல்காரர்களை அழைத்து அடுப்பு மூட்டச் சொன்னான். உலைகொதிக்கத் துவங்கியது. கம்பும் சோளமும், வரகும் நித்தம் உண்டு சலித்த சனங்கள் நெல்லுச் சோறுக்கு தவமிருந்தார்கள். வந்தவருக்கெல்லாம் சோறு விநியோகம் செய்யப்பட்டது. வாங்கிப் போன சாமான்யர்கள் ‘மவராசன் நல்லா இருக்கணும்‘! என்று வாழ்த்திவிட்டு போனார்கள். அதைவிட வேறென்ன வேண்டும் பாளையக்காரனுக்கு. மனம் குளிர்ந்தது.
ரா ம் மா........ போத்தம்.......! என்று லீலாவதியில் தாயும் தகப்பனும் நல்லநேரத்தில் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்கள். வீரசக்கம்மாவை வணங்கும்வரை புன்னகைத்தபடியே இருந்தவள் சட்டென்று விசும்பினாள். கன்னங்களின் சந்தனக் கரைகளை உடைத்துக் கொண்டே கீழிறங்கியது கண்ணீர் நதி.
கல்யாணம் கட்டியதிலிருந்து ஒருமுறை கூட வரதராசப்பனை பிரிந்ததே இல்லை அவள். முதல் முறை பிரிகிறாள். அரை மனதோடு “போட்ஸ் ஒச்ச...!' என்றவளை கண்களால் தேற்றி “போட்ஸ் ரா...!' என்றான். சூரிய அஸ்தமனத்திற்கும் முன்பாக கோவிந்தம்பாளையம் அரண்மனையிலிருந்து வடக்கே ஒரு வண்டியும் தெற்கே ஒரு வண்டியும் கிளம்பின.
வடக்கே கச்சிராயபாளையம் செல்லும் வண்டியில் லீலாவதி இருபத்தியோராவது பட்டக்காரனைச் சுமந்து அமர்ந்திருந்தாள்.
பரங்கியர் தடை போட நாமென்ன வந்தேறியா? பூட்டன் காலந்தொட்டு புகழ் சேர்த்த பூர்வீக பூமியின் புத்திரனல்லவா? வருவது வரட்டுமென துணிந்து விட்டான் வரதராசப்பன்.
எந்நேரத்திலும் பாளையத்தை நோக்கி ஆபத்து வரலாம். பொழுது புலரும் முன்பே வீரசக்கம்மாவை வணங்கி பூஜையறையில் இருந்த வம்சத்து வாளை அவள் பாதங்களில் வைத்து வணங்கி தன் குதிரையான கண்ணபிரானின் மீதேறி வைரி செட்டிப் பாளையத்தை நோக்கி விரைந்தான். கும்பினியை எதிர்க்க இருக்கும் பலம் போதாது. இன்னும் பலம் தேவை. வைரிசெட்டி பாளையக்காரன் திம்மராசப்பநாயக்கன் தனது கூட்டாளி என்பதால் அவனைச் சந்தித்து படைதிரட்டப் போனான். முந்நூறு வீரர்களோடு அவன் திரும்புவதற்குள்ளாக கும்பினிக்காரன் முந்திக் கொண்டான்.
கேப்டன் கில்லட் தலைமையிலான படை கோட்டையை முற்றுகையிட்டு விட்டது. கோவிந்தம்பாளையத்து வீரர்கள் நிராயுதபாணிகளாய் சரணடைந்தார்கள். பொக்கிஷதாரர் வீராச்சாமி நாயக்கர் உள்ளிட்ட சேவகர்களை திண்டுக்கல் பாராவில் வைத்தார்கள். மாயன், முனியன், கலியன் உள்ளிட்ட வீரர்கள் தமது வாளொன்றை மட்டுமே நம்பி சண்டையிட்டார்கள் பயனில்லை.
கும்பினி வீரர்களிடம் துப்பாக்கிகள் இருந்தன. பாளையக்காரர்களின் வாட்கள் துப்பாக்கிகளின் முன்பு ஊமைகளாயின.
வரதராசப்பன் முந்நூறு வீரர்களோடு வந்து கோட்டை வாயிலை அடைந்தபோது சண்டை தீவிரமானது. கோட்டைக்குள்ளிருந்து தோட்டாக்கள் பாய்ந்தன. பாளைய வீரர்கள் சிதறடிக்கப்பட்டனர். பல வீரர்கள் வீரசொர்க்கம் அடைந்தனர். நிலவரம் சரியில்லாததால் எஞ்சிய வீரர்களோடு மீண்டும் தெற்கே விரைந்தான் வரதராசப்பன்.
கேப்டன் கில்லட் வரதராசப்பனை துரத்திக்கொண்டே வந்தான். வரதராசப்பனின் வேகம் கண்டு மிரண்டான். சுட்டுப் பிடிக்கலாம் என்று குறி வைத்தான். குறி தவறி குதிரை கண்ணபிரானின் மீது தோட்டாப் பாய்ந்தது. கண்ணபிரான் கால்களை உதறியபடியே உயிர்நீத்தான். கில்லட் துரத்துவதை நிறுத்தவில்லை. “நில்! வரதராச்சப்பா! நில்! வரதராசப்பன் சோளக்காட்டிற்குள் ஓடினான். நெடுந்தூரம் ஓடி ஆறகழூரை செழிப்பாக்கும் வசிஷ்ட நதியில் விழுந்தான். முங்கு நீச்சலிட்டான். அரிவாள் மூக்கன்கள் அலைந்து திரியும் நதிதீரத்தில் தேடிக் களைத்து திரும்பினான் கேப்டன் கில்லட், கண்ணில் படாமல் கச்சிதமாய் தப்பினான் பட்டக்காரன். மறுநாள் பாளையங்களில் தமுக்குக்காரர்கள் அறிவிப்பு ஒன்றினை அறிவித்துப் போனார்கள். “கிணிமிட்டி... கிணிமிட்டி... கிணிமிட்டி... இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், கலெக்டர் மகாதுரை பிராங்க்ளின் அவர்களின் உத்தரவுப்படி, பிரிட்டிஷாரின் துவேஷியான கோவிந்தம்பாளையத்துப் பட்டக்காரன் வரதராசப்ப நாயக்கனை பிடித்துக் கொடுப்பவருக்கு ஆயிரம் வராகன் சன்மானம் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமே, அவனைப் பற்றி துப்பு கொடுப்பவருக்கு ஐநூறு வராகன் சன்மானம் வழங்கப்படும். அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிற ஆட்களுக்கு தீவாந்திர தண்டனை வழங்கப்படும் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
“கிணிமிட்டி... கிணிமிட்டி... கிணிமிட்டி..!'
வசிஷ்டநதியில் விழுந்த வரதராசப்பன் நீந்தி ஆனைமலைக்குத் திரும்பினான். பசி வயிற்றை காந்தச் செய்தது. கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போல உயிரைப் பணயம் வைத்து மேலேறினான். கிளுவை அடர்ந்திருந்தது. ஆங்காங்கே சில வெட்டுக்கள் இருந்தன. வெட்டுகளில் கால் வைத்து சூதானமாய் ஏறினான். தெற்கத்திக் காத்து அவனை அசைத்துப் பார்த்தது. காற்றில் அசையும் மரத்தைப் போல கால்கள் வேராய் நிற்க உடல் மட்டும் அசைந்தது.
சூரியன் மேற்கில் இறங்கவும், அவன் உச்சியை அடையவும் சரியாய் இருந்தது. சமணத் துறவிகள் வசித்ததற்கான தடயங்கள் இருந்தன. கற்படுகைகள் காணப்பட்டன. கோயிலென்று ஏதுமில்லை. குகை மட்டும் இருந்தது. அக்குகைக்குள் தான் கோவிந்தம்பாளையத்தின் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்தன. பாளைய வீரர்கள் மாயனும் முனியனும் முன்பொருநாள் தன்னோடு வந்தது நினைவு வந்தது வரதராசப்பனுக்கு. முனியன் குகைக்குள் செருகி வைத்த தீப்பந்தத்தை எடுத்து கொளுத்தினான்.
பிடிபட்ட பாளைய வீரர்கள் கதி என்னவாயிற்றோ? மடிந்த வீரர்களின் மனைவி, மக்கள் என்ன பாடுபடுகிறார்களோ? இந்த பிழைக்கத் தெரியாத பட்டக் காரனுக்காக நம் குடும்பங்கள் நாசமாகிவிட்டதே என்று ஏசுவார்களோ? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? மானை வேட்டையாடும் புலியைப் போல முந்தைய கவலைகளை விழுங்கின பிந்தையக் கவலைகள். பாறையின் மீது கண்மூடிக் கிடந்தவனை உசுப்பிப் பறந்தன நிலாக்குருவிகள்.
மஞ்சள் வெயிலில் கற்கோட்டை ஜொலித்தது. தவழ்ந்த சுனைநீரில் உடல் நனைத்தான். ஆடைகள் பாறைமீது உலர்ந்தன. யாரோ வருவது மாதிரி இருந்தது.
அரசமர நிழலில் தலைதுவட்டிக் கொண்டிருந்தவன். திடுக்கிட்டு பாறையில் பதுங்கி நின்று பார்த்தான். தூரத்தில் மலையின் மீது மொட்டைத்தலை ருத்ராட்ச மாலைகளுடன் ஒரு பண்டாரம் வருவது தெரிந்தது. அந்தப் பண்டார உருவம் வரதராசப்பனுக்கு கையளிக்க ஒரு மகிழ்ச்சியையும் ஒரு துக்கத்தையும் ஒரு சேர சுமந்து கொண்டு மேலேறியது.
முதல் செய்தி- இருபத்தியோராவது பட்டக்காரன் ஜனித்திருப்பது.
இரண்டாவது செய்தி - பாரியள் மரித்திருப்பது. மகன் பிறந்த இரண்டாம் நாள் ஜன்னி கண்டு இறந்து போனாள் லீலாவதி. பிரசவ வலி கண்டது முதல் அவள் பிதற்றியது ஒரே பெயரைத்தான் அது தனது மணாளனின் திருநாமம்தான்.
மாண்ட மனையாளின் நினைவு வாட்டி வதைக்க தாடியும், மீசையும் அடர்ந்து, கண்களின் கீழே கருவளையம் விழுந்து கன்னங்கள் ஒட்டி பஞ்சம் பிழைக்க பரதேசம் வந்த பரதேசியைப் போல திரிந்தான் பட்டக்காரன்.
சுனைநீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்துவிட முடியுமா? ஏறுவெயில் நேரம் பசி குடலைத் தின்றது. அடிசுட மலைவிட்டிறங்கி பாதங்கள் கொப்பளிக்க வனத்தில் திரிந்தான். கள்ளியும், கத்தாழையும், கிளுவையும் தான் தென்பட்டது. கொய்யா மரங்களைத் தேடினான். அதற்கு இன்னும் தொலைவு நகர வேண்டும். நகர்வதற்கு மனசிலோ? உடம்பிலோ? திராணியில்லை அவனிடம். கும்பினிக்காரனோடு சண்டையிட்டு அன்றைக்கே தோட்டா! பாய்ந்து செத்திருக்கலாம் என்று நினைத்து பைய்ய நடந்தான். தலை கிறுகிறுக்க வீரனார் கோயில் புளிய மரத்தடியில் வெட்டப்பட்ட வாழையெனச் சரிந்தான். பகல் போசனத்திற்கு வீரனார் கோயிலில் கூடும் வைரவனும், தொங்குமீசைப் பெரியாம்பளையும் நொண்டிச்சாமியும் பதறிப்போய் பாசியூத்து ஊரணி தண்ணீரை தெளித்து எழுப்பி உட்கார வைத்தார்கள்.
முதலில் யாருக்குமே பட்டக்காரனை அடையாளம் தெரியவில்லை. ஒட்டி ஒணந்துபோய் கூடுமாதிரி அமர்ந்திருந்தான் வரதராசப்பன். தொங்குமீசைப் பெரியாம்பளை அடையாளங்கண்டு அதிர்ந்துபோனார். “ராசா... ராசா... நீங்களா? “எங்கப் பட்டக்காரச் சாமிக்கா...? இந்த கதி?' வரதராசப்பனிடமிருந்து யாதொரு பதிலும் இல்லை. கஞ்சாப் புகையில் மயங்கியவனாய் அவன் கண்கள் சிவப்பேறி கிறக்கத்தோடு அன்னபோசிகளையே பார்த்துக் கொண்டிருந்தன.
வரகுச் சோற்றையும், கம்பஞ் சோற்றையும் ஆளுக்கொரு கை உருட்டி உருட்டி கொடுத்தார்கள். தாயில்லா சிறுபிள்ளையைப் போல அன்ன உருண்டைகளை ஏந்தி ஏந்தி உண்டான் பட்டக்காரன். ஆடுகளின் தாயுமானவர்கள் அவனுக்கும் தாயுமானவர்கள் ஆனார்கள். பசியைத் தீர்ப்பவன்தானே பரம்பொருள்! அவன் ஏழையாய் இருந்தால் என்ன?
கைக்கு நீருற்றிய நொண்டிச் சாமி மனசுக்குள்ளேயே பேசிகொண்டான். “பொளைக்கத் தெரியாத ராசா! பிச்சைக்காரன் கணக்கா சோத்துக்கு அலைஞ்சி திரியறான்! வெள்ளக்காரன நயந்து வாழத் தெரியாத ஆளா இருக்குறான்! அவனவன் எப்படி சொகுசா இருக்காய்ங்க..!' ஆட்டுக்காரர்களை கையெடுத்துக் கும்பிட்டான். அன்றிலிருந்து மூன்று வேளையும், கம்பஞ்சோறும் வரகுச்சோறும், கேப்பைக்களியும், ஆனைமலைக்கு போனது. வைரவனும், தொங்குமீசைப் பெரியாம்பளையும் ஆளுக்கொரு நாள் மேலேறினார்கள். சில சமயம் இருவருமே சென்றார்கள். நொண்டிச்சாமி நொண்டிச்சாக்கு சொல்லிக்கிட்டு “நான் போகலை' என்று மறுத்துவிட்டான். வரதராசப்பன் வயிறாரச் சாப்பிட ஆரம்பித்தான். அதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை.
“எத்தனை நாளைக்கு இப்படியே ஆடு மேச்சிக்கிட்டு அலையிறது! வகை தொகையா வாழ வேணாமா? ஆள் காட்ட ஆயத்தமானான் நொண்டிச்சாமி.
இரவென்னும் நல்லாள் பூமியை நெருங்கிக் கொண்டிருந்தாள். விண்மீன்கள் இல்லாத வானம் கருத்து எழுத்துக்கள் ஏதுமற்ற கரும்பலகையாய் இருந்தது. துறவிகளோடு துறவியாய் குகைக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் பட்டக்காரன். தீப்பந்தம் பாறைமீது கரிய ஓவியமொன்றைத் தீட்டிக் கொண்டிருந்தது. வழக்கம் போல தொங்குமீசைப் பெரியாம்பாளை அன்னபோசியோடு ஆனைமலை அடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தார். துணைக்கு வைரவன் வந்திருந்தான். அவன் கையில் தீப்பந்தமிருந்தது. அவன் தான் முன்னே சென்று கொண்டிருந்தான்.
மண்வாசனை காற்றில் மணத்தது. எட்டு வைத்து ஏற எத்தனித்த போது சுற்றி வளைத்தது கும்பினி நரிகள். கேப்டன் கில்லட்ட அன்னபோசியை தட்டி விட்டான். கேப்பைப்புட்டு சிதறி மண்மாதாவின் நாவில் ஒட்டிக் கொண்டது. தூரத்தில் கும்பினி ஆட்களுக்கு நடுவில் நொண்டிச்சாமி நின்று கொண்டிருந்தான். ரெண்டுபேரையும் கும்பினி ஆட்கள் தரதரவென இழுத்துக் கொண்டு போனார்கள்.
“ஏலேய்... நொண்டி... உம் புத்திய காமிச்சிபுட்டியேடா!...... வெள்ளக்காரன நம்பி குலசாமிய குழியில் தள்ளிட்டியேடா...!'
“அந்த வீரனார்தாண்டா உன்னையக் கேக்கணும்' பெரியாம்பளை புலம்பிக் கொண்டே போனார். வைரவனுக்கு இன்னும் கலியாணம் காட்சி கூட ஆகலை. விறைத்த உடம்போடு நொண்டிச்சாமியை முறைத்துக் கொண்டே போனான்.
திண்டுக்கல் பாராவோ? தீவாந்திரத் தண்டனையோ? அந்த கலெக்டர் ப்ராங்க்ளினுக்குத்தான் வெளிச்சம்.
அமைதியாய் இருந்த வானம் தூறத் துவங்கியது. தூறல் பெருமழையாய் பிடித்துக் கொண்டது. மலை மேல் பட்டக்காரன் பசியோடு முடங்கிக் கிடந்தான். மழையில் நீராடிய மலை மதயானையென நின்றது. பட்டக்காரன் எங்கே போய் விடப் போகிறான்? அடிவாரத்திலேயே தாவளமிட்டான் கேப்டன் கில்லட். அந்த இரவில் அவன் அருந்திய குளிர் தேசத்து மது ரசத்தை எசமானிடம் வாலாட்டும் நாயைப் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நொண்டிச்சாமி.
மழை ஓய்ந்து பொழுது விடிந்திருந்தது. இளம் வெயிலில் பாறை உலர்ந்து கொண்டிருந்தது.
குகைக்குள் நுழைந்தது கும்பினிக்கூட்டம். மலை உச்சியை அடைந்த கில்லட், வரத ராசப்பனை தேடினான். பட்டக்காரனைக் காணவில்லை. ஆயுதங்கள் மாத்திரம் கிடந்தன. எங்கே போனான்? மலை முழுக்க ராவினான் கில்லட்.
கேப்டன் கில்லட் சுனைக்கருகே சென்றபோது அவன் கண்ட காட்சி அவனை அதிரச் செய்தது. அரச மரத்தினடியில் கோவிந்தம் பாளையத்தின் இருபதாவது பட்டக்காரன் ஸ்ரீ வரதராசப்பன் கழுத்தறுபட்டுக் கிடந்தான். அவனது வலது கரத்தில் வம்சத்து வாள் ரத்தம் தோய்ந்து கிடந்தது. சுனைநீர் அவனது பாதங்களை தழுவிப் பயணித்தது. க்ரா...க்ரா...க்ராக் காகங்களின் கரைப்பொலி கேட்டபடியே இருந்தது.
ஸ்ரீதர் பாரதி மதுரையில் வசித்து வருகிறார். தமது படைப்புகளுக்காக புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் 'தமிழ்நாடு அறிவியல் இயக்க விருது' 'வடசென்னைத் தமிழ்ச்சங்க விருது' ஆகியவற்றைப் பெற்றவர். கவிதைகளோடு சிறுகதைகளும் எழுதி வருகிறார். இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்: செவ்வந்திகளை அன்பளிப்பவன், கருப்பு வெள்ளை கல்வெட்டு, முத்தம் சரணம் கச்சாமி.
ஜனவரி, 2023.