ஓவியம்:பி.ஆர். ராஜன்
சிறுகதைகள்

மோக சாயை

மாத்தளை சோமு

வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தவாறு சுந்தரமூர்த்தி குருக்கள்  கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி ஜானகி சங்கரக் குருக்கள் வீட்டுக்குப் போய்விட்டாள். வீட்டினுள்ளே நாற்காலியில் உட்கார்ந்து, நின்று கொண்டிருந்த கௌசல்யாவை ரசிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். வகிடு எடுத்து சீவி விடப்பட்ட நீண்ட கூந்தல். பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாத அளவாய் ஆன நெற்றி. அந்த நெற்றியின் உச்சியில் ரத்தச் சிவப்பாய் உதயமாகிற கதிரவனின் நிறக் குங்குமப் பொட்டு. மை பூசிய புருவங்கள். மீனையொத்த விழிகள். எடுப்பான மூக்கு. சிரித்தால் குழி விழுகின்ற கன்னங்கள். நிமிர்ந்த மார்பு. வளைந்த இடை. அவனுக்கேற்ற  உயரம்.

அவன் கண்கள் அவளின் தலை முதல் கால் வரை ஊடுருவி அணு அணுவாய் நகர்ந்து ரசித்தன. அவனுக்கு அவள் மனைவியாகி ஏழு நாட்கள் தான் ஆகின்றன. ஆனால் ஒவ்வொரு தடவையும் அவளைப் பார்க்கிற போது புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கிறான்.

‘‘என்னை ஏன் இப்படி பார்க்கிரேள்? நேத்து பார்த்த கௌசல்யா தான் நான்'' என்றாள் கௌசல்யா.

‘‘நீ நேத்து பார்த்த கௌசல்யா தான். ஆனா இப்ப பார்க்கிரப்ப வேற மாதிரி தெரியிர..'' என்று அவளில் மயங்கியவன் போல் பேசினான் கணேசன்.

‘‘தெரியும். நன்னாத் தெரியும். மோகம் முப்பது நாள்னு சொல்ரா. இப்ப ஏழு நாள் போயாச்சி. இன்னும் இருபத்தொரு நாள் பாக்கி இருக்கு.''

‘‘முப்பது வருசமானாலும் உன்னை நான் பார்ப்பேன். இன்னைக்கி பார்க்கிரதுக்கும் அப்ப பார்க்கிரதுக்கும் வித்தியாசம் இருக்காது...''

அவன் சொற்களில் கௌசல்யா வெட்கமுற்று நின்றாள். கணேசன் மெல்லமாய் எழுந்து அவளை நெருங்கினான். அவன் நெருங்கினால் என்ன செய்வானென்று அவளுக்குத் தெரியும். கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னத்தை வைத்து அழுத்தி அப்படியே உதட்டோடு உதட்டை உரசி..

''உங்க அப்பா திண்ணையில் இருக்கார்'' என்று ஞாபகம் ஊட்டியும் கணேசன் நெருங்கிய போது, ‘‘கணேசா.. இங்க வாப்பா'' என்ற அப்பா கூப்பிடும் சத்தம் கேட்க கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்..

கணேசனுக்கோ அப்பா மீது மனதுக்குள் கோபம் வெடித்தது. கல்யாணமாகி ஏழு நாள் தான் ஆகிறது. அதற்குள், ‘‘கணேசா.. க  ணேசா...‘‘ என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்..  

வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான். வெளியே திண்ணையில் அப்பாவோடு இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்து, ‘‘வாங்கோ‘‘ என்றான்.

‘‘இவாள்ளாம் வலையூரிலிருந்து வர்ரா. அவா குலதெய்வம் அய்யனார்  கோயில் வலையூர்ல  இருக்கு  நேக்குநன்னாத் தெரியும்.கோயில் பூசாரி அப்பா தவறிட்டா. பூசாரி தீட்டு முடிஞ்சு வர்ர வரைக்கும் நீ தான் பூச செய்யணுமாம். வெள்ளி, திங்கள் காத்தால மட்டும்...என்னை கேக்கிரா. எனக்கு வயசாயிட்டுது. பஸ்சில ஏறி போக முடியாது. நீ போயிட்டு வா...''

கணேசன் பதில் பேசாமல் வந்தவர்களையே பார்த்தான். அவர்களில் ஒருத்தர் பேசினார்.

 ‘‘கார்த்தால எட்டு மணிக்கு மணச்சநல்லூர்ல இருந்து பஸ் போவுது. அதில ஏறுனா ஒம்பதுக்குள்ள வலையூர் போகலாம். வண்டியில வர்றதுனா  எட்டுக்கு திருப்பஞ்சலியில புறப்பட்டா போதும்... துறையூர் மெயின் ரோட்டுல திருவெள்ளறையில இருக்கிற சந்தியில வலது பக்கமா திரும்பி நேரே போனா பதினைஞ்சு நிமிசத்தில வலையூர்ல...''

அவன் சொல்வதற்குள் அப்பா முடிவு கட்டி பதில் சொன்னார்... ''வண்டியில வந்திருவான். காத்தால பஸ் புடிக்கிரது சிரமம். ரெண்டு பஸ் புடிக்கணும்..''

‘‘அப்ப நாங்க வர்ரோம் சாமி  '' என்ற அவர்கள் அப்பாவைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுப் போனார்கள். அவர்கள் சற்று தூரம் நடந்ததும் தயங்கியபடி கேட்டான் கணேசன்... ''கௌசல்யாவையும் அழைச்சிண்டு போகவா?''

‘‘போவலாம். ரெண்டு பேரும் சுத்தமா போவணும்..‘‘.

‘‘ம்'' என்றான் கணேசன்.

அவன் பதிலைக் கேட்ட அவர் தன் மனதுக்குள் எண்ணங்களை ஓட விட்டு புன்னகைத்தார். திருமணமான புதிது. இரவில் ஒன்றாக இருப்பார்கள். அதை நினைத்துத் தான் சொன்னார்.

அடுத்த நாள் திருப்பஞ்சலிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியே ஸ்கூட்டரில் கணேசனும் கௌசல்யாவும் சிறுகுடிக்குப் புறப்பட்டார்கள். கௌசல்யா ஸ்கூட்டரில் அவனுக்குப் பின்னே பக்கவாட்டில் உட்கார்ந்திருந்தாள். இருபக்கம் கால் போட்டு உட்கார்வாள் என எதிர்பார்த்திருந்தான் கணேசன்.

‘‘முதுகப் பிடிச்சிட்டு வரலாமே !''

‘‘ஆசயப் பாருங்கோ. கோயில் பூசை போறப்ப கட்டி புடிச்சிகிட்டு போவணுமா? சாமி குத்தம் வரும். '' என்றாள் கௌசல்யா.

கணேசனுக்கு என்னவோ போலாகிவிட்டது. மேடு பள்ளத்தில் ஸ்கூட்டர் போகும் போது முதுகோடு அவள் மார்பு முட்டும் இன்பம் கிட்டியிருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மண்ணச்சநல்லூர் போகும் போது கௌசல்யா இரு கால்களையும் இருபக்கமாய் போட்டு கணேசனின் தோள்பட்டையைக் கைகளால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் மார்பு தன் முதுகோடு முட்டட்டும் என்று ஸ்கூட்டரை மேடுபள்ளத்தில் இறக்கி ஓட்டினான். அவனுக்கு அவள் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாய் உட்கார்ந்தபோது கூந்தலில் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசம், முதுகை ஒட்டும் மார்பகங்கள் யாவும் ஒரு மோக நிலையைக் கொடுத்தது நிஜம். அது ஒரு வகையான இன்பமாய் இருந்தது. ஆனால் அதை உணர்ந்த அவள் வண்டியை ஓட்டுவது கணவன் தானே என்று மௌனமாய் அவனோடு ஒத்துழைப்பது போலிருந்தாள். ஆனால் இன்று போவது கோயிலுக்கு? எனவே விலகியே இருந்தாள்.

தனக்கு கௌசல்யா போல் அழகான மனைவி கிடைப்பாள் என்று கணேசன் எதிர்பார்க்கவே இல்லை. கல்யாணத்துக்கு முன்னர் கோயிலுக்கு வந்தபோது கௌசல்யாவைப் பார்த்திருக்கிறான். அப்போது அவள் முகமும் முகத்தோடு ஒட்டிய புன்னகை மட்டும் அவனுக்குப் பரிச்சயம்..

கோயில் பூசை செய்யும் இளைஞர்களுக்குப் பெண் கிடைப்பதே கஷ்டமானது என வரன் பார்க்கும் நடராஜக் குருக்கள் சொன்னது அவனுக்குத் தெரியும். அது உண்மை தான். அவன் படித்தது வேதப்  பள்ளியில். மற்றவர்கள் வேறு பள்ளிகளில் வெவ்வேறு தொழிலுக்குப் படித்தார்கள். அவர்களுக்கே பெண் கிடைத்தன. கோயில் பூஜை செய்கிறவர்கள் என்றால் பெண் வீட்டார் கதவை மூடிக் கொள்ளவார். வேதம் படிப்பதையும், கோயில் பூஜை செய்வதையும் அவர்கள் மதிக்கவே இல்லை.

இரண்டு மூன்று இடங்களில் பெண் கேட்டார் கணேசனின் தந்தையார். பதில் சொல்லவே தயங்கினார்கள். ஒரு இடத்தில் பெண் தரமாட்டேன் என்று சொல்லாமல் 'பாரின் மாப்பிள்ளை கேட்டிருக்கார். அதனால முடிவு சொல்ல முடியல' என்று சொன்னார்கள். மகனுக்கு கல்யாணம் ஆகுமோ என்ற கவலையில் ஆழ்ந்த கணேசனின் தந்தையாருக்கு நம்பிக்கை ஊட்டுவது போல ஒரு வரனைச் சொன்னார்.

துறையூர் கோயிலில் குருக்களாய் இருக்கிறவரின் பெண். ஜாதகம் பொருந்தியது. கௌசல்யாவை கணேசன் பார்த்து விட்டு வந்தான். இரு குடும்பமும் சம்மதித்தது. அப்போது கௌசல்யாவைக் கேட்டு யு.எஸ். மாப்பிள்ளை வந்தபோது, 'கௌசல் யாவுக்கு மாப்பிள்ளைப் பார்த்தாகிவிட்டது.

சொல்லி விட்டேன். சொல் மாறக்கூடாது' என்று சொல்லிவிட்டார் கௌசல்யாவின் தந்தை.

திருமணம் எளிமையாக சிறப்பாக நடந்தது. பெண் வீட்டார் முதல் இரவை திருச்சி ஓட்டலில் வைத்தார்கள்.

கணேசனுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது. அதற்கு முன் ஓட்டலில் அவன் தங்கியதே இல்லை.

கௌசல்யாவும் தங்கியதே இல்லை. ஓட்டலுக்குப் போவதற்கு முன்னர் விலகி விலகி இருந்தவர்கள் ஓட்டலுக்குப் போனதும் நெருங்கி இருந்தார்கள். அந்த நெருக்கத்தை உருவாக்கியவன் கணேசன்.

‘‘நீ ஏன் விலகி நிக்கிர? இங்கே இருப்பது நீயும் நானும் மட்டும் தானே?''

‘‘அதுக்கென்ன இப்போ?''

‘‘நம்மள ஓட்டலுக்கு அனுப்பினதே ரெண்டு பேரும் ஒன்னா இருக்கணும் தான்...''

‘‘இப்ப ஒன்னா தானே இருக்கோம்?''

‘‘இந்த ஒன்னு மட்டும் போதுமா?'' என்ற கணேசன் அவளின் முகத்தை, வாயிதழை, கண்களை, மார்பகத்தை ஊடுருவது போல் பார்த்தான்.

கௌசல்யா பதில் பேசாது வெட்கமுற்றாள்.

அன்று இரவு 'அந்த நேரத்தில்' கௌசல்யாவைப் பார்த்தபோது தஞ்சை பெரிய கோயிலில் பார்த்த பெண் சிலை நினைவுக்கு வந்தது. பெருத்த மார்பகங்களோடு பெண்கள் சிலை. கௌசல்யாவைப் பார்க்கும் போது அந்தப் பெண் சிலை தான் கண்ணுக்குள் நின்றது. அவளும் அந்தச் சிலை போலவே தெரிந்தாள். ஒரு விதத் தயக்கம் அவனுள் எழுந்தது. அவளைத் தொடவே தயங்கினான்.

கணேசன் தன்னைக் கட்டித் தழுவுவான் என்று எதிர்பார்த்த கௌசல்யாவுக்கு அவன் தயங்கி நிற்பது புரிந்தது. அவனை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். கணேசன் அதை எதிர்பார்க்கவே இல்லை. பெண் சிலையே உயிர் பெற்று தன்னை அணைப்பது போல் ஒரு உணர்வு. உடனே அவளிடமிருந்து தன்னை விடுவித்து நின்றான் அவன்.

அவள்,' ஏன் விலகிப்போறார் ?' என்பது போல் பார்த்தாள்..

‘‘அப்படி பார்க்காதே! உன்னை இப்ப பார்க்கிறச்ச பெரிய கோவில்ல பார்த்த பெண் சிலை தான் ஞாபகத்துக்கு வர்றது  '' என்றான் கணேசன்.

கௌசல்யா கோபப்பட்டது போல் , ‘‘அந்த சிலையை கட்டிக் கொள்ள வேண்டியது தானே?'' என்றாள்.

‘‘தப்பா எடுத்துக்காதே கௌசல்யா. அந்த சிலையைப் பார்த்ததில் இருந்து தான் எனக்கு இப்படி... உன்ன பார்க்கிறச்ச அந்த சிலை நெஞ்சுக்குள்ள நிக்குது. ..''

‘‘ஆத்துக்காரியைப் பார்க்கிறச்ச ஆத்துக்காரி நெனவு தான் ஆம்புடையானுக்கும் வரணும்.  உங்களுக்கு அந்த சிலை தான் ஞாபகம் வருதோன்னா அதையே கட்டிக்க வேண்டியது தானே?''

கௌசல்யாவின் கோபம் அவனுக்குப் புரிந்தது. அதற்குப் பிறகு அவளை சமாதானப்படுத்த மன்னிப்புகேட்பது போல் பார்த்தான்.. கணேசன். 

கல்யாணத்துக்கு முன்னர் பழங்கால கோயில்களில் உள்ள பெண் சிலைகளைப் பார்த்திருக்கிறான் அவன். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு கௌசல்யாவைப் பார்த்த பிறகுதான். அந்த பெண் சிலை ஞாபகமும் அதனால் சலனமும் சங்கமித்து ஆட்டுகிறது.

இரண்டு நாட்களுளுக்கு முன் கௌசல்யாவை 'அந்த நேரத்தில்' பார்த்த போது அந்தப் பெண் சிலைகள் ஞாபகம்  முட்டியது. ஆனால் அவன் அதை அப்படியே மிதித்து நசுக்கி அவளை ஆராதித்தான்; அணைத்தான். அது கௌசல்யாவுக்குத் தெரியாது. தனக்கு ஏற்படும் இந்த உணர்வை யாரிடம் போய் கேட்பது?

வலையூர் கோயிலுக்குப் போன போது ஸ்கூட்டியை கோயிலுக்கு எதிர்ப்பக்கம் இருந்த வேப்ப மரத்தில் நிறுத்திவிட்டு கணேசனும் அவன் பின்னே கௌசல்யாவும் நடந்தார்கள்.

‘‘ வாங்க சாமி'' என்று ஒருவன் கும்பிட்டான். கணேசன் கோபுரத்தைப் பார்த்தான். மூன்றடுக்கு கோபுரத்துடன் கூடிய ஐயனார் கோயில். கோபுரம் தாண்டியதும் சிறிய திறந்த வெளி. அப்புறம் மண்டபம். மண்டபத்திற்கு அப்பால் புன்னை மரத்தடியில் ஐயனார். கூரையே இல்லை. வெயிலின் போது மர நிழலே குடை. மழையின் போது மழை மரத்தை நனைக்கும். மழைத்துளிகள் ஐயனாரையும் நனைக்கும்.

கௌசல்யா மண்டபத்தில் விரித்துப் போட்டிருந்த பாயில் உட்கார்ந்து ஐயனாருக்கு முன்னே மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த குதிரைச்  சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கணேசன் கோயிலுக்கு உள்ளே உள்ள 'பைப்'பில் குடத்தால் தண்ணீர் பிடித்து, ஐயனருக்கு வைத்திருந்த சந்தனப் பொட்டெல்லாம் அகல நீராபிசேகம் செய்து முடித்து மறுபடியும் குடத்தில் தண்ணீர் பிடித்து ஐயனாருக்கு இடது பக்கத்தில் இருந்த ஏழு சப்த கன்னியர் சிலைகளுக்குத்  தண்ணீர் ஊற்றிய போது அவனுக்குள் மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வு. அவற்றைப் பார்க்கிறபோது கௌசல்யா ஞாபகமே வந்தது அவனுக்கு...

சப்த கன்னியர்களின் சிலைகளை நீராபிசேகம் செய்ய கைகள் நடுங்கின. நெற்றிப் பொட்டுகளை கைகளால் தொட்டுக் கழுவி நீராபிசேகம் செய்தான். ஐயனாரின் உடல் முழுவதும் தடவி நீராபிசேகம் செய்தது போல் இங்கு செய்ய மு‍டியவில்லை அவனால்.. ஒரு விநாடி யோசித்தான்...' தனக்கு ஏன் இப்படி ஆகிறது?' ஒருவாறு தன்னுள் எம்பி நிற்கிற உணர்வுகளை அமுக்கிக் கொண்டு சப்த கன்னியருக்கு பாவாடை தாவணியை அணிவித்தான்.

வெண் பொங்கல் வைத்துப் படைக்கிற போது மணி பன்னிரண்டாகியது. ஐயனார் இருந்த மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்த போது கௌசல்யா ‘ பாம்பு'  என்று கத்தினாள். கணேசன் திரும்பி பார்த்தான் மூலஸ்தான மரத்தடியில் பாம்பு நெளிந்தது..பயந்து போன கணேசன்     கோயிலைத் திறந்தவனிடம்  கேட்டான்... ‘‘பாம்பு எப்பவும் வருமா?''

‘‘எப்பவாவது தான் வரும்! சில நேரத்தில பூசை செய்யும் போது வரும். சில நேரத்தில் பூசை முடிஞ்சோன்ன வரும்...''

‘‘கோயில்லயா இருக்கு?''

‘‘இங்க பாம்பு புத்தே இல்ல. எங்கிருந்து வருதுன்னு தெரியாது!''

கணேசனின் மனதில் பூஜை செய்யும் போது வரவில்லையே என்று ஆறுதல் வந்தது. ஆனாலும் அவன் பயந்தே இருந்தான். சின்ன வயதிலிருந்தே பாம்பென்றால் பயம் அவனுக்கு..

திருப்பஞ்சலி திரும்பிய போது மணி இரண்டுக்கு மேலாகிவிட்டது. திண்ணையில் இருந்த அப்பா கணேசனிடம் கேட்டார்..

‘‘நேரத்தோட வருவேனுன்னு நெனச்சேன்...''

அவன்‘‘இனிமே படைக்க நான் போகல்ல'' என்றான்..

அவருக்கு அதிர்ச்சி... ‘‘ஏம்பா?''

சப்த கன்னியர்களின் சிலை தாக்கத்தை எப்படிச் சொல்வது?

‘‘பூசை முடிச்சோன்ன பாம்பு வந்து நிக்கிது. என்னால படைக்க முடியாது..''.

அவனுக்கு பாம்பென்றால் பயம்  என்பது அவருக்கு  தெரியம்.

‘‘ சரி சரி இனிமே சங்கரமூர்த்தியை அனுப்பரேன்..'' பெருமூச்செறிந்தான் கணேசன்.

இரவு கௌசல்யாவிடம் சொன்னான் கணேசன்..

‘‘இனிமே வலையூர்  போக வேண்டியதில்லை.''

‘‘ஏன்?''

‘‘பாம்ப பார்த்தேன். எனக்கு பாம்புன்னா பயம்..'' என்ற கணேசன் சப்த கன்னியர்களைப் பார்க்கும் போது வரும் உணர்வுகளைச் சொல்லவில்லை!

மின் விளக்கை அணைத்தான். ஆனாலும் மெல்லிய வெளிச்சம் சிறிய 'பல்ப்பால்'  பரவியிருந்தது. கௌசல்யாவை நெருங்கினான். அவள் முகத்தை, விழிகளை, உதட்டைப் பார்த்து நெருங்கினான். கட்டியணைத்தான். கௌசல்யாவின் மார்பின் அழுத்தம் அவனை என்னவோ செய்தது. கண்ணுக்குள்ளே தஞ்சை பெண் சிலைகள், சப்த கன்னியர் சிலைகள்... நிழலாடின. திடீரென்று கௌசல்யாவை விட்டு விலகினான்.

‘‘களைப்பா இருக்கு. தூக்கம் வருது...''

கௌசல்யாவுக்கு அவன் பதில் புரியவில்லை.

மார்பை மூடிய சேலை முந்தானையை எடுத்து விட்டு நின்றாள். கண்களை மூடினான். மூடிய கண்களுக்குள் தஞ்சை பெண் சிலைகள்.

சப்த கன்னியர் சிலைகள்....