பி ஆர் ராஜன்
சிறுகதைகள்

மொட்டை

சீராளன் ஜெயந்தன்

‘ஏன்மா, இப்படி சொல்லாம கூட்டிகிட்டு வந்து கழுத்தறுக்கிற.?' என்று அந்த சிறுவன் அலறி அழுகையில், சுற்றியிருந்தவர்களுக்கு வயிற்றைப் பிசைந்தது.

அந்த சிறுவனின் தாய் ‘மகா' தானும் அமர்ந்து மொட்டை அடிக்கச்சொன்னது பெரிய அதிர்ச்சி என்று ஒன்றும் இல்லைதான் என்றாலும் அவளைச் சேர்ந்தவர்களுக்கு அது பேரதிர்ச்சிதான்.  சமீபத்தில் புருஷனை வாரிக்கொடுத்தவள்.  தொடரும் சோகநெஞ்சில் தனக்குத்தானே வேல் பாய்ச்சிக் கொள்கிறாள். பழனிக்கு வந்து தனது இரண்டு மகன்களுக்கும் மொட்டை அடித்தபின்னர், தானும் மொட்டை அடித்துக் கொள்வது என்று எந்த முன்னறிவிப்பையும் அவள் செய்யவில்லை.

“அம்மா', என்று கத்தினான் சின்னவன் மணி.

“அம்மா, ஏன்மா' என்று அதிர்ந்தான் பெரியவன் கணேஷ்.

அருகிலேயே நின்றிந்த அவளின் மூத்த சகோதரன் கூட ஆச்சரியப்பட்டு, “ ஏன் மகா?' என்றான்.  கணவன் இறந்ததிலிருந்து அவள் குடும்பத்தின் மேல் அக்கறையுள்ளவனாக இருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.

‘‘வேண்டுதல்ண்ணே', என்றாள் மகா.

சின்னவன் மணிக்குத்தான் தாங்க முடியவில்லை, அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தான், “அம்மா வேண்டாம்மா, எந்திரிம்ம்மா,' என்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“சும்மா இருடா நீ, சின்னப் பையன் உனக்கு ஒண்ணும் தெரியாது, நீங்க அடிங்க” என்று நாவிதரைப் பார்த்து சொன்னாள் மகா.  அவளின் நீண்ண்ண்ட கூந்தலில் நீரை தெளித்து வேலையை தொடங்கினார் நாவிதர்.  சரவரவென்று தலை மழிக்கப்பட்டு கூந்தல் சுருண்டு கீழே விழுவதைப் பார்க்கையில் துச்சாதனன் துகிலுரிவதைப்போல் இருந்தது.  மணி ஓடிச் சென்று சுவரோரம் அமர்ந்து முழங்காலை கைகளால் கட்டி முகம் புதைத்து அழத்தொடங்கினான்.  பிள்ளையின் அழுகை கூட அவளது கல் நெஞ்சை கரைக்கவில்லை.

அந்த பிஞ்சு நெஞ்சில் பெரிய வார்த்தைகள் எப்படி புரிதலாகிறது என்று தெரியவில்லை.  ஆனால் திரும்பவும் சொன்னான், “இப்பிடி சொல்லாம கூட்டிகிட்டு வந்து கழுத்த அறுத்துட்டியேம்மா.'  பெரியவன் கணேஷ் அழுகவில்லையே தவிர அதிர்ச்சியை மௌனத்தால் முழுங்கிக் கொண்டிருந்தான்.  கணேஷ் பனிரெண்டாம் வகுப்பும், மணி பத்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள்.  மகாவின் கணவன் தற்கொலை செய்து கொண்டு ஒரு வருடம் கடந்துவிட்டிருந்தது.   ஒரு வருடத்திற்குப் பின்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிற பழக்கம் இருந்ததால் மகா காத்திருந்து தற்போது பழனி மலைக்கு வந்திருந்தாள்.

அவள் கண்களிலும் நீர்க்கற்றைகள் மெதுவாய் இறங்கி மடியிலிருந்த கூந்தலின் மேல்  நெளிந்து ஓடி தலையில் தெளித்த நீரோடு கலந்தன.  கண்கள் அழுதாலும் மனது பொறுமிக் கொண்டிருந்தது. 

சிறு வயதுமுதலே தன்னுடனேயே வளர்ந்து, அதன் நீளத்தை காதலித்து, பெருமை சேர்த்து, பொறாமை வளர்த்து, கணவன் கொண்டாடிய கூந்தலை அவள் இழக்கத் துணிந்ததற்கான காரணமில்லால் இல்லை.

இதே பழனிக்கு  வரும்போதுதான் முரளி இவளைப் பார்த்தான்.  அவன் குடும்பமும், இவள் குடும்பமும் பழனிக்கு சாமி கும்பிட கிளம்பும்போது  திருமங்கலத்தில் ஒரே பேருந்தில் ஏறினார்கள்.  மகாவின் கூந்தல் அவளது கிராமத்தில் அதிக பிரபலம்.  அவிழ்த்துவிட்டால் கணுக்கால் வரை தொங்கும்.  பல இளவட்டங்கள் அந்த ஊஞ்சலாடும் கூந்தல் நுனியை பார்க்கவே பின்னே தொடர்ந்து வருவார்கள்.  அப்பொழுதெல்லாம் சேரி பக்கம் போவதற்கு அவர்கள் தயங்கியதில்லை.

பேருந்தில் ஏறும் போது அவள் கூந்தல் நுனி, ஒரு மீன் தூண்டிலைப் போல ஒரு சுண்டு சுண்டி மேலெழுந்து, பின்னால் ஏறிய முரளியின் நாசியில் பட்டுத்தெறித்தது.  தூண்டிலில் சிக்கியது மீன்.  தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் ஊருக்குள் எச்சரிக்கையாகவே இருக்கும் மகா, வெளியூர் வண்டிதானே, அவன் யாரோ என்பதால் முரளியிடம் பார்வைகளை பரிமாறிவிட்டாள்.  அவள் அப்படியொன்றும் மாநிறம் கூட கிடையாது,  கறுப்புக்கு கொஞ்சம் முந்தைய நிறம்.  பழனியில் ஏறுகையிலும், இறங்கையிலும், அங்கங்கே இருவருக்கும் தரிசனம் தொடர்ந்து கிடைத்தது.  அந்த மாயக் கயிற்றின் இரு முனைகளையும் இருவரும் மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டனர்.

முரளி வேகமாக செயல்பட்டான்.  முரளி தன் தந்தையை பழனி பேருந்து நிலையத்திலேயே வற்புறுத்தி மகாவின் தந்தையுடன் பேச வைத்தான்.  முகவரி கேட்கும் போதே, மகாவின் தந்தை தெளிவாக சொல்லிவிட்டார், “சாமி, நாங்க காலனிக்காரவுங்க, நீங்க மேலத் தெரு, ஒத்து வராதுங்க' என்று.

இரு பக்கமும் நிறைய எதிர்ப்புகளும் தயக்கங்களும் இருந்தன.  பேருந்தில் வந்து திருமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி அவள் பள்ளி செல்லும் வழியில்தான் முரளியின் ஆட்டோ நிறுத்தம்.  தினமும் அவளை பார்க்கக் காத்துக்கிடந்தான்.  ஒவ்வொரு நாளும் அந்த நேரம் அவனுக்குத் தேர் திருவிழா.  பழனியில் தைரியம் காட்டிய மகா பிறகு பயப்படத் தொடங்கினாள்.  தன் படிப்பிற்கே உலை வைத்துவிடுமோ இவன் காதல் எனப் பயந்தாள்.  ஆனால் முரளியின் பிடிவாதத்தால் காதல் வென்றது.

ஜாதி பிரச்சினைகளை தூக்கி எறிந்து முரளி மகாவை திருமணம் செய்து கொண்டான். முரளியின் தந்தை ‘சரி' என்றாலும், பெண்கள் மகாவை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. கல்யாணத்தன்றே மாமியார் வீட்டுக்குப் போகும்போது, நிலைப்படிக்கு வெளியேயே அமர்ந்துவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பும்படி ஆனது.  வாசலில் கட்டிலில் அமர்ந்து பேப்பர் கப்பில் பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்கள் பொண்ணும் மாப்பிள்ளையும்.  வெளியேறும் போது, அவளுடைய மூத்த நாத்தனார் பின்னே பேசுவது கேட்டது, ‘அம்மா அவளுக்குத் தனியா தட்டும் சொம்பும் வாங்கி வைங்க' என்று சிலுப்பினாள்.

“என்னத்தை கண்டான் இந்த கறுப்பிக்கிட்ட' என்று ஓரகத்தி வெளிப்படையாகவே நக்கல் செய்தாள்.  ஒரு வேளை அவள் கிளம்பிய பிறகு அந்த வீடு நீர்தெளித்து கழுவிவிடப்பட்டிருக்கலாம்.

மகாவின் வீட்டில் தனி அறை வசதியில்லாததால் முதலிரவு தள்ளிப் போனது.  முரளி வேகமாக வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்தான்.  வீடு கிராமத்திலிருந்து விலகி, திருமங்கலம்  டவுனில் இருந்தது.  டவுனில் யார் எவர் என்று தெரியாததால் தீட்டு பிரச்சினை இருக்காது என்பது திட்டம்.

அவளுடனான தனித்த தருணங்களில் திக்குமுக்காட செய்தான்.  அவள் கூந்தலை அவிழ்த்து தன் நிர்வாண உடலை போர்த்திக்கொண்டான்.  அந்தக் கூந்தலின் ஸ்பரிசத்தில் காம சுருதி சேர்த்தான். அயர்ந்து சோர்கையில் கூந்தலை படுக்கையாக்கி படுத்துக் கொண்டான்.  ‘கூந்தலிலே வீடு கட்டவா' என்று பாட்டு  பாடினான்.  அவனுடைய சரச சாகசங்களின் போது அவளது கூந்தல் ஒரு மூன்றாம் துணையாகவே இருந்தது.   தினசரி மனைவிக்கு பூ வாங்கி வருவது சாதாரணம்தான் என்றாலும், பூக்காரி  வெட்கப்படும் அளவுக்கு இவன் மகாவின் கூந்தலின் மொத்த நீளத்திற்கும் சேர்த்து வாங்கினான்.  மகா  தனது மகிழ்ச்சிக்கு காரணம் இந்த நீளக் கூந்தல்தானே என்று மகிழ்ந்தாள்.  தானே வாரி முத்தம் கொடுத்தாள்.  தாயும் சகோதரிகளும், ‘இது எதுக்குடி இந்த சடையை இவ்வளவு நீளம் வளத்து வச்சிருக்கே, அளவா வெட்டிக்கக் கூடாதா' என்பார்கள்.  தோழிகளின் பொறாமையை சம்பாதித்துக் கொடுத்ததும் இதே நீள சடைதான்.  இறுதியில் இப்படியொரு நல்வாழ்கை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று மகிழ்ந்தாள்.

ஆனால் எல்லாவற்றையும் மறந்து  பதினைந்து வருடங்கள் கழித்து அவன் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்பது அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.  இரண்டு பையன்கள் பிறந்து அவர்களும் பத்து, பனிரெண்டு வகுப்புகள் வரை வளர்ந்துவிட்டார்கள்.  ஆட்டோ ஓட்டுநராக இருந்த முரளிக்கு நிதிச் சுமை அதிகம்தான்.  அதனால் தற்கொலை செய்து கொண்டானா?  தண்ணி அடிக்கிற பழக்கமுண்டு, அதனால் கடன்பட்டு, கடன் அடைக்கமுடியாமல் இறந்தானா?  யாரோ நண்பனுக்கு கடன் வாங்க சாட்சி கையெழுத்துப் போட்டு பிரச்சினையானது, அதனால் இறந்தானா?  அவனுடைய தற்கொலை செய்து கொண்ட சித்தி அடிக்கடி கனவில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான் அதனாலா?  அடிக்கடி ஒரு பெண்ணிடமிருந்து ‘போன் வருவதாக' மகா கவனித்திருந்தாள், அது ஏதும் பிரச்னை ஆகிவிட்டதா?  மகாவிற்கு இன்னும் தெரியவில்லை.   போலீஸ் விசாரணைகளில் இவளுடைய வெகுளித்தனமே பதிலாய் இருந்தது.

மழிக்கப்பட்ட கூந்தலில் இருந்து ஒரு கைப்பிடி எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்தாள்.  நாவிதர்  ஆச்சரியத்துடன், “எதுக்கும்மா இது, கோயிலுக்கு நேந்ததை திருப்பி எடுக்கக்கூடாது' என்றார்.

“பரவாயில்லைங்க சாமி, என்னன்னவோ பட்டாச்சு” என்ற சலிப்புடன் அந்த மஞ்சள் முடிப்பை பையில் வைத்துக்கொண்டாள்.

“எதுக்கு மகா'  என்றான் அண்ணன்.

“வேணும்ண்ணா' என்றாள் அழுத்தமாக.  இழந்த கூந்தலின் ஞாபகமாக வைத்துக் கொள்ளப் போகிறாளோ என்று நினைத்தான் அண்ணன்காரன்.

ஊர் திரும்பி அவர்களை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பும்போது அண்ணன் ஒரு ஐநூறு ரூபாயை அவளிடம் கொடுத்து “செலவுக்கு வைச்சுக்கோம்மா' என்றான்.

“இல்லண்ணா, பரவாயில்ல, வேண்டாம்' என்றாள்.

“வைம்மா, செலவுக்கு என்ன பண்றே?'

“என்னா பண்றது, ரெண்டு வீட்டுக்கு போற இடத்துல நாலு வீட்டுக்குப் போறேன்.  இன்னம் ரெண்டு வீட்ல கூட கூப்புடறாங்க வேலைக்கி, போகத்தான் பயமா இருக்கு'

“என்ன பயம்?'

“நாம என்ன ஜாதின்னு தெரியாம கூப்புடுறாங்க.  பெறவு தெரிஞ்சா  பிரச்சினையாயிடும்.  பாதியில நீ வராதேன்னு சொன்னா, நமக்கும் சங்கடம்…பாத்துப் பாத்து பொழங்கணும், சட்டுன்னு ஜாதிப் பேரை சொல்லித்தான் திட்டுவாங்க'

அண்ணன் கிளம்பும் வரை காத்திருந்தாள்.

“டேய் கணேஷ், தாத்தா வீட்டு வரைக்கும் போய்ட்டு வந்திறேன், நீங்க படிச்சுகிட்டு இருங்க, தம்பிய பாத்துக்கோ' என்றவள், அந்த மஞ்சள் துணி முடிப்பை எடுத்துக் கொண்டாள். அழுது அழுது ஓய்ந்து தூங்கிப் போயிருந்தான் மணி.  நகரப் பேருந்தில் இருந்து இறங்கி நடக்க நடக்க அவள் வேகம் அதிகமானது.  வேகம் அவள் செல்லும் வீரியத்தை கூட்டியது.  ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்த முரளியின் நண்பர்கள் இவளை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார்கள்.  அவர்கள் விழிகளில் கேள்விக்குறி, ‘ஏன் இவள் மொட்டை அடித்திருக்கிறாள்' என்று.  ஒன்றிரண்டு தெரிந்த முகங்கள் என்றாலும், இவள் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக நடந்தாள்.  யாரோ எய்த அம்புபோல் பாய்ந்தாள்.  அதன் நுனியில் ‘மஹாலட்சுமி' என்றெழுதியிருந்தது.

முரளியின் உடல் வீட்டிற்கு வெளியே கிடத்தப்பட்டிருந்த போது, அவனுடைய அம்மா, அண்ணி, தங்கை என அவர்கள் சொந்தங்கள் எல்லாம் தெருவோடு அழுது தெருவோடு திரும்பிப் போனது.  ‘வீடு வரை கூட இல்லை உறவு' என்று கூட்டத்தில் யாரோ நகைத்தார்கள்.  ஒரு சொட்டு தண்ணீருக்கு கூட அவர்களில் யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை.  காதல் கணவனின் எதிர்பாராத மரணத்தை அழுது புரண்டு தீர்த்துக்கொண்டிருந்தாள் மகா.  அவள் கூந்தல் அவிழ்ந்து கலைந்து கிடந்தது.  மகாவின் தாய் பின்னே அமர்ந்து அவளது கூந்தலை வாரி தூக்கி முடிந்து விட்டாள்.

சட்டென்று அவளின் நாத்தனார், “அந்த சடையை வாரி வாரி தானேடி, எங்க அண்ணனை வாரிக் கொடுத்துட்டு உட்கார்ந்திருக்கே மூதேவி? இன்னும் யாரைடி வாரி கொடுக்க இருக்க..' என்று ஆங்காரமாய் கத்தி அழுதாள்.  இந்த வார்த்தைகளைக் கொட்ட அவளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மகாவின் மனதில் முள் ஒன்று குத்தியது.   அழுகையை நிறுத்தி அவர்களை உறுத்துப் பார்த்தாள்.  மனதிற்குள் ஏதேதோ தீர்மானங்கள் நிறைவேறின.

மகாவின் வேக நடையையும், ஆக்ரோஷத்தையும் பார்த்த யாராலும், அவளை வீட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.  முன் கூடத்தில் ஓய்வாய் சாய்ந்திருந்த மாமனார், மாமியார், நாத்தனார், ஓரகத்தி எல்லோருக்கும் இவளைப் பார்த்ததும் அதிர்ச்சி. ‘என்ன இப்படி மொட்டை போட்டுட்டு வந்து நிக்கிறா சொல்லாம கொள்ளாம.?' என்பது போல் வாய் பிளந்தார்கள்.

“எங்க அவ?' என்று நாத்தனாரை தேடியவள், அவளைப் பார்த்து அந்த மஞ்சள் முடிப்பை அவள் முகத்தில் விட்டெறிந்தாள்.

“இதுதானடி உனக்கு கண்ணை உறுத்துச்சு?  இந்தா, இப்ப சந்தோஷமா? இனிமே உங்க அண்ணன் திரும்பி வந்துருவானா? திரும்பி வந்துருவானா?' கத்தினாள்.  “வாரிக் கொடுத்துட்டேன், வாரிக் கொடுத்துட்டேன்னு சொன்னியே, இப்ப என் புருஷன திருப்பிக் கொடுடீ..' கழுத்து நரம்புகள் வெடிக்க, ஆங்காரமாய் கத்தினாள் மகா.  கத்தினாளே தவிர அழுகவில்லை.

யாரும் எதுவும் பேசவில்லை.  எல்லோருக்கும் அதிர்ச்சி, வாய் மூடி பேசாமல் திகைத்து நின்றார்கள்.  மகாவின் தோற்றம் கை ஒடிந்த சிலைபோல் இருந்தது மூளியாய். வேகமாக வெளியே வந்தாள், விருட்டென்று தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். முதுகிற்குப் பின் எந்த முணுமுணுப்பும் இல்லை.  யாரையோ பழிக்குப் பழி வாங்கிவிட்டதான ஒரு களிப்பில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள் மஹாலட்சுமி.