சிறுகதைகள்

முதலில் பார்ப்பவள்

வண்ணதாசன்

‘வரும் போதே மழையையும் சேர்த்துல்லா கூட்டிக்கிட்டு வந்திருக்கே போல' என்று ரெங்கம்மாச் சின்னம்மை கேட்டாள். எப்போதும் ஒரு சிறுசதவிகிதம் சிரிப்பைக் கொண்டு முகத்திலிருக்கும் மற்ற  எல்லா அடையாளங்களையும் எப்போதும் மூடிவிடுகிறவள் தானே அவள்.

‘நீ இந்த வீட்டுக்கு இதுக்கு முன்னால வந்தது இல்லையே இதுதானே முதல்த் தடவை‘ என்று கேட்டவள், உள்ள வந்து தலையைத் துவட்டு. நல்ல நனஞ்சுகிட்டு வந்திருக்கே. உன் ஃபோன் வந்ததில் இருந்து கதிரேசனை என்ன இன்னும் வரக்காணோம். அவன்  சொன்ன நேரத்துக்கு இதுக்குள்ள வந்திருக்கணுமே‘ என்று சித்தப்பா சொல்லிக்கிட்டே இருக்கா,' என்று  நாற்காலி முதுகில் கிடந்த துண்டைத் தூக்கி என் தோளில் போட்டாள். சித்தப்பா எத்தனையோ காலமாக இப்படிச் சொரசொரப்பாக , குழி குழியாக இருக்கும் கட்டம் போட்ட துண்டுகளைத்தான் உபயோகிக்கிறார்.

அப்புறம் சித்தப்பா உபயோகத்துக்கு ஒன்று, ரெங்கம்மாச் சின்னம்மை உபயோகத்துக்கு இன்னொன்று  என்று தனித் தனித் துண்டா இந்த வீட்டில் இருக்கும்?  கதிரேசன் முகத்தை அழுத்தித் துடைத்து, துண்டுக்குள் முகம் புதைகிறது போல ஒரு நிமிடம் நிறுத்தி முகர்ந்து, அப்படியே தலையைத் துவட்ட ஆரம்பித்தான், அது என்னவோ வீட்டில் குளித்து விட்டுத் தலையைத் துவட்டுவதற்கும் இப்படி மழையில் நனைந்துவிட்டு வந்து துவட்டுவதற்கும் வேறு மாதிரிதான் இருக்கிறது. இது கூடுதலாகப் பிடித்திருக்கிறது.

அதே போல, கதிரேசனுக்கு மழையில் நனைந்த தலையைத் துவட்டும் போது மட்டும் ஏதாவது ஒரு பழைய ஞாபகம் அப்படியே படம் போட்டது போல ஈரத் துண்டுக்குள் தெரியும். இன்றைக்கு ஒரு அழகப்பன் காளை அதன் முதுகில் மடித்து மடித்துப் போடப்பட்டிருக்கும் கலர் கலரான துணிகளோடு தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு நிற்கிறது, கோப்பாளம் போட்ட நெற்றியோடு தலைப்பாகை கட்டிக்கொண்டு சங்கு ஊதுகிறவனின் இடது கை சேகண்டியும் அடிக்கிறது.  இடது தோளில் மயில் கழுத்து நிறத்தில் ,அதன் கனம் தெரிகிற அகலத்தில் ஒரு போர்வை.

இது எப்போதோ ஒரு பொங்கலுக்கு மறுநாள் பத்துப் பதினைந்து  வருஷத்துக்கு முன்னால் நடந்தது.

சிவகாமி அக்காள் வீட்டு வாசலில் அப்போது அடித்த வெயில் மங்கி மங்கி மறுபடி பிரகாசமாகியது.வில்ஸ் சிகரெட் வாசனை அடித்தது. இத்தனைக்கும் சிவகாமி அக்கா வீட்டு அத்தான் மங்களா வீட்டில் தான் இருந்தார்.வெளியே வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அந்தக் காளை கொஞ்சநேரத்துக்கு ஒருதடவை இடது பின்னங் காலை உதறியது கூட ரெங்கம்மாச் சின்னம்மையின்  இந்த வீட்டுத் தரையில் லேசாக அதிர்கிறது.

‘ஓம் வீடுண்ணு தேடியிருந்தா கண்டுபிடிக்கக் கஷ்டப்பட்டிருக்கும். நான் கிட்டுச் சித்தப்பா வீடுண்ணு நினைச்சுக்கிட்டே வந்தேன்.தானாக் கொண்டாந்து விட்டுட்டு' கதிரேசன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ரெங்கம்மா அவன் துவட்டிக்கொண்டு இருந்த துண்டை அவன் கையில் இருந்து உருவி,  சிரித்துக்கொண்டே ஈரத் துண்டால் அடித்தாள்.

‘ஆட்டோ எல்லாம் வச்சுக் கிடலை.போலீஸ் ஸ்டேஷன் பக்கம் இறங்கி நடந்து தான் வந்தேன். நிறைய வேப்ப மரம் இருக்கு வார வழியில எல்லாம். மற்ற மரம் நனையுததுக்கும் வேப்ப மரம் நனையுதத்துக்கும் வித்தியாசமா பட்டுது. ஆடாம அசையாம அப்படியே நிக்கி எல்லாம். எனக்கு சுந்தரத்துப் பெரியம்மை ஞாபகம் வந்துட்டுது. அவதான், அருவியில நிறையத் தண்ணி விழுத இடமாப் பார்த்துப் போய் நிண்ணுக்கிட்டு, அப்படியே அசையாம பாறையோட பாறையா நிப்பா. அப்படிப் பெரியம்மை நிக்கும் போது நான் ஒருதடவை கும்பிட்டிருக்கேன். இப்பொ நினைச்சாலும் கும்பிடணும் போலத் தான் இருக்கும் எனக்கு' கதிரேசன் சொல்லிக்கொண்டு போகும் போது ரெங்கம்மாவுக்குக் கண் கலங்கிவிட்டது.

அவளுடைய பெரியக்கா சுந்தரம் ஈரத் தலையை விரித்துப் போட்டபடி இன்னொரு ஆளாக அங்கே நிற்கிற மாதிரி இருந்தது. ‘கிளி மாதிரி இருக்காண்ணு தான் அவ்வளவு பெரிய இடத்தில இருந்து  எங்க வீட்டில அவளைப் பொண்ணு எடுத்தாங்க. பத்தொம்போது வயசுல தாலிகட்டி நாலே வருசத் தில எல்லாம் முடிஞ்சு போய் வந்து நின்னுட்டா. இடுப்பில ஒரு பிள்ளை.வயித்துல ஒரு பிள்ளை.அதுக்குப் பிறகு எழுபத்தாறு வயசு வரை இருந்தா. ஒத்தை ஆளா சொத்தை, வயலை எல்லாம் மேல் பார்த்துக்கிட்டா.எவ்வளவு பாரம் தலையில் இருந்திருக்கும் பார்த்துக்கோ.' ரெங்கம்மாவுக்குத் தொண்டை கம்மியது. கதிரேசன் கையை மேலும் இறுக்கிப் பிடித்தபடி சொன்னாள், ‘தலையில அவ்வளவு பாரம் இருக்கிறவங்க எல்லாரும் அருவியில அப்படித்தான் அசையாமல் குளிப்பாங்க'

கதிரேசனுக்கு ரெங்கம்மாச் சின்னம்மையை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.அவனுக்கு ஓரளவுக்கு எல்லாம் தெரியும்.ரெங்கம்மா சின்னம்மை தான் கடைக்குட்டி.கல்யாணம் ஆகவில்லை.பி.யூ.சி சேர்ந்திருந்தாள். நன்றாக ஞாபகம் இருக்கிறது.

சரஸ்வதி பூஜைக்கு முதல் நாள்.

சிவகாமி அக்கா வீட்டு அத்தானுடன் ரெங்கம்மா சின்னம்மை எங்கேயோ போய்விட்டாள். மதுரை என்றார்கள்.திருச்செந்தூர் என்றார்கள். இரண்டு நாட்களாக எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை...

சுந்தரத்துப் பெரியம்மை தான் புளியங்குடியில் இருந்து உடனே ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு வந்தாள். நான்கு பக்கமும் ஆட்களை அனுப்பினாள். கன்யாகுமரி வரை தேடிப் போன டாக்ஸி ஸ்டாண்ட் பிரமு அண்ணன் கொடுத்த துப்பில்  தான் தோவாளையில் இருந்ததாக இரண்டுபேரையும் கூட்டிக்கொண்டு வந்து சுந்தரத்துப் பெரியம்மையிடம் ஒப்படைத்தார்கள். அந்த ராத்திரியோடு ராத்திரியாய் ரெங்கம்மாவையும் கையோடு வாடகைக் காரில் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

கிட்டுச் சித்தப்பா அசல் ஆள் இல்லை. புளியங்குடிப் பெரியப்பாவுக்குச் சொந்தம். தம்பி என்றுதான் பெரியம்மை கூப்பிடுவாள் போல. அதுவும் பெயரைச் சொல்லி. அந்தக் குடும்பம் நடத்துகிற எலிமெண்ட்ரி ஸ்கூலில் வாத்தியாராக இருந்தார். அவரை மட்டும் அதிகாலையில் வீட்டுக்கு வரச் சொன்னாள். புறவாசல் வாழையில் ஒரு இலை சுருள் விரிந்து வெயிலை அதற்குள் நிரப்பியிருந்தது. ஒஞ்சரித்திருந்த முன் வாசல்  பெரிய கதவு வழியாக உடலைச் செருகுவது போல வந்த கிட்டுவை, அங்கே கிடந்த நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டுப் சுந்தரத்துப் பெரியம்மை நின்று கொண்டாள்.

‘கிட்டு இங்கே வா. நல்லாக் கேட்டுக்கோ. இதுதான் நடந்தது. கூடவும் சொல்லலை. குறைச்சும்

சொல்லலை. ரெங்கம் எங்க எல்லாரையும் விடக் கெட்டிக்காரி. புத்திசாலி. புத்திசாலிக்குப் புத்தி கெட்டுப் போகக் கூடாதுண்ணு இருக்கா?புத்தி மட்டும் இல்லை எல்லாம் கெட்டுப் போச்சுண்ணே இருக்கட்டும். அவளையும் உன் எதுக்க நிற்க வச்சுக் கிட்டே தான் பேசுதேன்.இது உப்பு இல்லை.புளி இல்லை. அறை வீட்டுப் பானையிலே ஒளிச்சு வச்சுக் கிட்டு, இருக்குண்ணும் இல்லைண்ணும் பொய்

சொல்லுததுக்கு.தென்னம் பிள்ளை மாதிரி அஞ்சடி உயரத்துக்கு உம் முன்னால தான் நிக்கா. குடும்பத்தில மூத்தவளா பிறந்திட்டேன். அவளைப் பெத்த தாய்க்குச் சமானமா கேட்கேன். எங் குடும்பத்துக்குப் பரம்பரை பரம்பரையா உங்க குடும்பம் செய்த உபகாரமா இருக்கட்டும். இந்தப் பிள்ளை கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போய் கரையேத்தி விடு. அது அப்பிராணி. தான் கரையில நிக்கமா தண்ணியில நிக்கமாண்ணு கூடத் தெரியல அதுக்கு‘

சுந்தரத்துப் பெரியம்மை கிட்டுவைக் கும்பிட்டிருக்கிறாள். பதிலுக்கு அவர் ஒரு பேச்சும் பேசவில்லையாம்.‘ரெங்கம்மா வா‘ என்று கூப்பிட்டாராம். தன் பக்கத்தில் நிற்கச் சொன்னாராம். சுந்தரத்துப் பெரியம்மா காலில் விழுந்து இரண்டு பேரும் கும்பிட்டார்களாம்.

‘நேத்துப் பொழுது  அடைஞ்ச மாதிரியும் இன்னைக்கு விடிஞ்ச மாதிரியும் நினைச்சுக்கோ. போயிட்டு வா' என்று ரெங்கம்மா தோளில் தட்டிக் கொடுத்தாளாம் சுந்தரத்துப் பெரியம்மை.

தலை துவட்டுகிற கொஞ்ச நேரத்துக்குள் இவ்வளவு தூரம் போய்விட்டு வந்தாயிற்று.மலையைப் புரட்டுவதற்கு ஞாபகத்திற்கு ஒரு நொடி தானே ஆகும். சின்னம்மை எவ்வளவு தூரம் போனாளோ. அவளிடம் எந்த இறுக்கமும் இல்லை. கருங்குளம் பக்கத்து ஆற்றுப் படுகை மணல் கண்ணுக்கு எட்டின வரை அப்படியே  வெண் திரளாய்க் கிடக்குமே அப்படி இருந்தது சின்னம்மை முகம்.

அடுப்படியில் இருந்து கிட்டுச் சித்தப்பா சத்தம் வந்தது.‘ ஏ.. நா ஒருத்தன் இந்த வீட்டில இருக்கேன் டே' அவர் சத்தத்துடன் இட்லிக் கொப்-பரையில் இருந்து ஆவி படர்கிற வாசமும் வந்தது.

‘சித்தப்பா இட்லி வெந்துட்டு,' என்று கதிரேசன் சத்தம் கொடுத்தான்.

அவர் இதற்குப் பதில் சொல்லவில்லை. இதற்கு முந்திய அவருடைய பேச்சின் அடுத்த வாக்கியத்தை ஏற்கனவே  எழுதிவைத்திருந்து வாசிப்பது போலத் தொடர்ந்தார்.

‘இதுக்கு முந்தி இருந்த வீடாவது ஐய மாரு வீடு மாதிரி நெடுநெடுண்ணு கிடக்கும்.இங்கே பட்டாசல், ரெண்டாங்கட்டு, சைடுல ஒரு ரூமு, அடுப்படி, தொட்டிக் கட்டுண்ணு எவ்வளவு இருக்கு.

நீங்க ரெண்டுபேரும் பட்டாசலோடு நிண்னுட்டா எப்படி?.வீட்டுச் சொந்தக்காரனை விட, கட்டுன கொத்தனாருக்கு வருத்தமா இருக்கும் டே'.

‘இத இப்போ எங்கிட்டே சொல்லுதது யாரு? வீட்டுச் சொந்தக்காரரா, கொத்தனாரா தெரியலையே'   கதிரேசன் கேட்கவும் அவன் முதுகில் ஒரு அடி அடித்து,  இரண்டு கைகளையும் தோள்ப் பட்டையில் பதித்து அடுப்படிப் பக்கம்  தள்ளிக்கொண்டே ரெங்கம்மாச் சின்னம்மை பின்னாலேயே வந்தாள்.

கிட்டுச் சித்தப்பா ஒரு ஸ்டூலைப் போட்டு அடுப்புக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார்.விறகு அடுப்பு எரிந்துகொண்டு இருந்தது.

‘ஒஞ் சின்னம்மை குறுக்கு வலிக்காம நிண்ணுக்கிட்டே சமையல் பண்ணட்டும்னு மேஜை அடுப்பைப் போட்டு வச்சிருக்கான் ரெடியா. அவள் வளர்த்தியை எங்க வச்சுப் பார்த்தானோ தெரியலை!‘ சித்தப்பா சிரித்தார். அவர் முகத்தில்  அடுப்புத் தீயின் வெளிச்சம் நெளிந்து நிமிர்ந்து விலகியது.

இதற்கு முன்னால் இரண்டு மூன்று தடவைக்கு மேல் கிட்டுச் சித்தப்பா ரெங்கம்மைச் சின்னம்மா வளர்த்தி பற்றிச் சொல்லியிருக்கிறார்.ஒவ்வொரு தடவையும் ஒரு மாதிரிச் சொல்வார்.‘முதலிலே எல்லாம் சின்னத் தென்னம் பிள்ளை மாதிரி இருந்தா.அப்புறம் பார்த்தா கிடுகிடுண்ணு வளர்ந்துட்டா.அவசரத்துக்குப் பறிக்கணும்னா மச்சுப்படி ஏறி தட்டோட்டிக்குத் தான் போகணும் போல இனிமே'.என்று ஒரு தடவை சொல்வார்.

திடீரென்று ஒரு தடவை கேட்டார்.‘ஈசா. நீ திருக்குறுங்குடி கோயிலுக்குப் போயிருக்கியா?இடுப்பில ஒரு நார்ப்பெட்டி, தோளிலே ஒரு கைப் பிள்ளை, நடத்திக் கூட்டிக்கிட்டுப் போகிற வயசுல வலது பக்கம் இன்னொரு பிள்ளைண்ணு ஒரு சிலை இருக்கும். அப்படி வளரணும்னு நினைச்சிருப்பா போல மனசுக்குள்ள. என்ன , அவளுக்கு அந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் தான் கொடுப்பினை இல்லை,' என்று நிறுத்துவார்.

சின்னம்மையை அல்லது அந்தச்  சிலையை ஒரு தடவை மனதில் பார்த்துக் கொள்வார் போல. நான் பக்கத்தில் தான் இருப்பேன்.இன்னும் என் பக்கத்தில் வருவது போல நெருக்கிக் கொண்டு உட்கார்வார்.‘அந்த நார்ப்பெட்டிக்குள்ள உங்க சின்னம்மை என்ன வச்சிருக்கா தெரியுமா?என்னைத்தான்' என்று குனிந்துகொண்டு சிரிக்கும் கிட்டுச் சித்தப்பா முகம் நன்றாக இருக்கும்.

‘வேறு என்ன டே விசேஷம்?' கிட்டுச் சித்தப்பா கதிரேசன் கையைப் பிடித்துக் கொண்டார்.‘ வேணி, பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்கா?' என்று சொல்லிக்கொண்டே இரண்டு கைகளையும் பிடித்து உலுக்கினார்.

‘நீ வந்தாத்தான் மழைக்காலத்தில வீடு இருட்டிக்கிடக்கும் போது லைட் போட்டிருப்பமே அப்படி இருக்கு' என்றார்.போன தடவை பார்த்ததை விட, இப்போது மீசை அடர்த்தியாக வளர்ந்திருந்தது. நுனியை முறுக்கி வேறு விட்டிருந்தார்.

ரிட்டையர் ஆகும் வரை , வாத்தியாராக இருக்கும் போது கிட்டுச் சித்தப்பாவுக்கு மீசை கிடையாது. இப்போது கொஞ்ச காலமாகத்தான் வைத்திருக்கிறார். கதிரேசன் ‘ என்ன சித்தப்பா, திடீர்னு மீசை எல்லாம்?' என்று கேட்கக் கூட இல்லை.

‘ மவனே. நீ கேப்பேன்னு நினைச்சேன். கேட்கலை.அப்போ நானே சொல்லீர வேண்டியது தானே.‘ என்று சொன்னார்.‘நாம சொல்லிக்கொடுக்கது, ஒண்ணாப்பு, ரெண்டாப்புப் பிள்ளைகளுக்கு. அம்மைகாரிகள்  கிட்டே பால் குடிச்சுக்கிட்டு இருக்கும் போதே பாதியில எழுந்திருச்சு ஓடியாந்த மாதிரி இருக்கும்.அதுக கிட்டே போயி எதுக்கு நாம மீசையும் தாடியும் வச்சுக்கிட்டுப் பயம் காட்டணும். அப்புறம் உனக்கு எப்படியோ, என் நேச்சருக்கு, அந்தப் பச்சைப் பிள்ளைகள் கூட அத்தனை வருஷம் இருக்க இருக்க  என்னையறியாம நானும்  முத்தல் இல்லாம  அப்படியே அந்தச் சின்னப் பிள்ளைக மாதிரி இருந்துட்டேன். அதுதான் நிஜம்' சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், மேலும் தான் சொன்னதை வலுப்படுத்துகிறது போல, ‘ஈசா நீ கவனிச்சிருக்கியா?வெயில் காலத்தில நாம ஜாஸ்தி கோவப்படுவோம்.வெயிலுக்கு இருக்கிற அந்த வெக்கை நமக்கும் வந்திருக்கும்' என்று நிறுத்துவார்.

அதைக் கேட்கும் போது கதிரேசனுக்கு இப்படித் தோன்றும். சித்தப்பாவை விடச் சின்னம்மை பதினான்கு வயது இளமை என்று கேள்விப்பட்டு இருக்கிறான்.

சின்னம்மை வயசிலேயே சித்தப்பா இருக்கிறது போலத் தோன்றுகிறது.

அது மட்டுமில்லை ரெங்கம்மாச்  சின்னம்மையின் சில  அசைவுகள் கிட்டுச் சித்தப்பாவிடம் வந்துவிட்டிருக்கிறது. முக்கியமாக அவ்வப்போது

சின்னம்மையிடம் தென் படுகிற இடது கைப் பழக்கம். எல்லோரும் இடது கையில் மாம்பழத்தை வைத்து வாகாக உருட்டிக் கொண்டு வலது கையில் இருக்கிற கத்தியால் தொலி சீவி வெட்டுவார்கள். ரெங்கம்மாச் சின்னம்மையின்  வலது கையில் மாம்பழமும், கத்தி இடது கையிலும் இருக்கும். இப்போது எல்லாம் சித்தப்பா அப்படித்தான் செய்கிறார்.அன்றைக்குப் பார்க்கிறான். சுருக்கில்லாமல் ஈரத் துணியை இழுத்து நீவிவிட்டுக் கொடியில் காயப் போடுவது  அப்படியே ரெங்கம்மாச் சின்னம்மை மாதிரியே இருக்கிறது.

கதிரேசன் சாதாரணமாகத்தான் சொன்னான்.

‘ சித்தப்பா அனேகமா பாதிச் சின்னம்மை ஆயாச்சு'. அவர் அதற்கு  உடனே அப்படி ஒரு பதில்  சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. ‘முழுச்  சின்னம்மையா ஆகீட்டா நல்லது டே.போய்ச்  சேர்ந்திருவேன்'. சித்தப்பா முகத்தைப் பார்க்கவில்லை.ஆனால் குரல் கணகணவென்று காற்றில் கீறல் இட்டபடியே நகர்ந்தது.

‘என்ன சித்தப்பா இப்படிச் சொல்லுதீங்க?' கதிரேசன் வாய்விட்டுக் கேட்கவில்லை. அவன் ஏறிட்டுப் பார்த்தது அப்படி இருந்தது.

‘பின்னே என்ன டே. யாரோ சொல்லிக் கேள்விப்பட்டிருப்பா போல இருக்கு. என் கிட்டே வந்து ‘சிவகாமி அக்கா கிடையில கிடக்காளாம். ரொம்ப முடியலை போல. நீங்க போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்திருங்க, என்று  என் புறங்கையைத் தடவிக் கொடுத்துக்கிட்டே சொல்லுதா.  தோலுக்கு அடியில புடைச்சுக்கிட்டுக் கிடக்கிற நரம்பைத் தள்ளித் தள்ளிவிட்டுக்கிட்டு அது மறுபடி நெளிஞ்சு அதே இடத்துக்கு வாரதை, ‘இங்க பாருங்க இதை' என்று என்கிட்டே காட்டுதா சின்னப் பிள்ளை மாதிரி. இப்போ நீயே சொல்லு ஈசா, எங்க ரெண்டு பேரில யாரு மாதிரி யாரு ஆகணும்னு'

தனியாகப் போவதற்கு யோசித்து கிட்டுச் சித்தப்பா கதிரேசனையும் கூட்டிக் கொண்டுதான் சிவகாமி அக்காவைப் பார்க்கப் போனார். அந்த வீட்டில் கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்துக் கொண்டார்.எந்தத் தயக்கமும் இல்லாமல் கட்டில் பக்கத்தில் இரும்பு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து சிவகாமி அக்கா கையை எடுத்துக் கொஞ்சநேரம் வைத்துக் கொண்டார். கும்பிட்டுவிட்டு எழுந்தார்.எதிர்ப் பக்கத்துச் சுவரில் பெரிதாக இருந்த  சிவகாமி அக்கா மாப்பிள்ளை படத்தை ஏறிட்டுப் பார்த்தார். சிவப்பு உல்லன் நூல்களால் நடு நடுவே தங்கத் தாள் சுற்றிக் கட்டின மாலை படத்துக்கு வெளியே தொங்கிகொண்டு இருந்தது.

வெளியே வந்து பஸ் ஏறுவது வரை ஒன்றுமே பேசவில்லை.‘கொஞ்சம் சின்ன வயசில எடுத்த படம் போல. அந்தப் பையனை இதுக்கு முந்தி முன்னைப் பின்னே நான் பார்த்தது இல்லை. இன்னைக்குத்தான் பார்க்கேன்' என்று பஸ்  ஓரத்து சீட்டில் உட்கார்ந்தபடி வெளியே பார்த்தபடி சொன்னார். 

ரொம்ப நேரம் கதிரேசன் கையைப் பிடித்துக்கொண்டு சித்தப்பா அப்படியே இருந்துவிட்டாரோ என்னவோ. சின்னம்மைதான் அதைக் கலைத்தாள்,

‘என்னமோ நீ இன்னைக்கு சாயந்திரத்துள்ளே வந்திருவேன்னு ஃபோன் பண்ணுதே.உஞ் சித்தப்பா ‘கதிரேசன் வரப் போறான் வறப் போறான்'னு குதியா குதிச்சுக்கிட்டு இருந்தா. நானும் சரிதான் ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ மலையைப் புரட்டப் போறீங்க போலேண்னு நினைச்சுக் கிட்டேன்.நீங்க என்னடாண்ணா, விளையாடுததுக்கு சாட் பூட் த்ரீ போடப் போகிற மாதிரி ஒருத்தர் கையை ஒருத்தர் கொருத்துக்கிட்டு இட்லிக் கொப்பரைக்கு முன்னாலுட்கார்ந்திருக்கிய. போங்க.  போயி, பட்டாசல்ல உட்கார்ந்து பேசுங்க. நான் இன்னும் ரெண்டு ஈடு எடுத்துட்டு வந்திருதேன்' என்று அடுப்பு முன்னால் போனாள்.

‘உன்னைய விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் என்னத்தைத் தனியாப் பேசப் போறோம். அப்படியே பேசினாலும் அவனும் உன்னைப் பத்தி தான் பேசுவான்.நானும் உன்னைப் பத்தி தான் பேசுவேன்.என்ன டே?' கதிரேசன் தோளில் கையை ஊன்றி சித்தப்பா எழுந்திருந்தார். ரெங்கம்மாச் சின்னம்மை அடுப்பிலிருந்து விறகை லேசாக உருவித் தீயைப் பிரித்துவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சிறு பொறி மினுங்கிப் புகையோடு மேலே அலைந்து காணாமல் போனது.

கிட்டுச் சித்தப்பா எப்போதும் போல்,  பட்டாசல் முக்கில் அவருடைய அந்தப் பழைய மேஜையைப் போட்டிருந்தார். ‘இரண்டு தலைமுறைக்கு முந்திச் செய்ததாக இருக்கும். இழுப்பறைக்கு எல்லாம் உறுதியான பித்தளைக் கைப்பிடிகள்.

‘அந்த லைட்டைப் போடு ஈசா' என்று சொல்லியபடி சித்தப்பா இரண்டில் வலது பக்கத்து இழுப்பறையை அவரது மடிப் பக்கமாக இழுத்தார்.மேல் பக்கத்தில் தான் எடுக்கும் படி வைத்திருந்தார் போல. அதை எடுத்தார். பழைய தினசரிக் காலண்டர்  அட்டைகள் இரண்டுக்குள் இருந்த அந்தத் தாளை உருவிக் கதிரேசனிடம் உயர்த்திக் காட்டினார். ‘கொஞ்சம் பக்கத்தில வந்து பாரு‘ என்று சொன்னார். ‘நல்லாத் தெரியுதா?' என்று வெளிச்சத்திற்கும் கதிரேசன் முகத்திற்கும் இடையே உயர்த்தியும் தாழ்த்தியும் பிடித்தார்.

‘யார் சொல்லு பார்ப்போம்'என்றார்.

‘நீங்க வரைஞ்சதா?' கதிரேசன் கேட்டான்.

‘அதெல்லாம் இருக்கட்டும். யாருண்ணு தெரியுதா சொல்லு' என்றார்.

அந்தக் காகிதத்தில் கருப்பு மை பேனாவால் வரைந்த ஒரு முகம் இருந்தது. வரைந்து பழகுகிறவர்கள் வரைகிற மாதிரி கீச்சிக் கீச்சி, தலைமுடி, கண் , மூக்கு, உதடு, உதட்டுக்கு மேல் மீசை எல்லாம் போடப்பட்டிருந்தது. அதையெல்லாம் விட அதற்கு மேல் சட்டம் போட்டது போல நான்கு பக்கமும் ஸ்கேல் வைத்து இழுத்த கோடு. அப்படி வரைந்த  சட்டத்தின் மேல் பக்கத்தில் இருந்து அளவுக்குப் பொருந்தாமல் திரித் திரியாக, மேலுக்கு மேல் கோடு இழுத்துக் கருப்பாக்கப் பட்ட மாலை.

கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு அதிகம் கருப்பாகத் தொங்கும் மாலை ஒரு சொடுக்கில் சிவப்பு உல்லன் நூலும்  தங்கத் தாள் சுற்றுமாக அசைந்தது. சிவகாமி அக்கா வீட்டிலிருந்து வெளியே வந்ததில் இருந்து பஸ் ஏறும் வரை கிட்டுச் சித்தப்பா ஒன்றுமே பேசாமல் கூடவே வந்து கொண்டு இருப்பது போல இருந்தது.

கதிரேசன் வேறு ஒன்றும் கேட்கவில்லை. ‘இதைச் சின்னம்மை கிட்டே காட்டுனீங்களா?‘ என்று கேட்டபடி கிட்டுச் சித்தப்பாவைப் பார்த்தான்.

சித்தப்பா முகம் வெங்கலச் சிலை மாதிரி இருந்தது. அவர் அடுப்படிப் பக்கம் திரும்பின வாக்கில்  இருந்தார்.

‘நாந்தான் முதல்ல  பார்த்தேன்.  நான் பார்க்காம எப்படி?' ரெங்கம்மாச் சின்னம்மை ஈரக் கைகளைச் சேலையில் துடைத்துக்கொண்டே பட்டாசலுக்கு வந்துகொண்டு இருந்தாள்.

ஜூலை, 2022